`அட்லான்ட்டிக் பெரும்பிழை... மோடிக்கு செல்வாக்கு இருக்கிறதா..?' - நாஞ்சில் சம்பத் பொளேர்

மணிப்பூர், ஹரியானா கலவரங்கள், `இந்தியா' கூட்டணி, திராவிடம் குறித்த ஆளுநரின் கருத்துகள் குறித்து திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

“மணிப்பூர் கலவரமே இன்னும் முடியவில்லை... அதற்குள் ஹரியானாவும் பற்றி எரிகிறதே?”

“ரோமாபுரி நகரம் தீப்பிடித்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் எனப் படித்திருக்கிறேன். அதை இப்போது என்னுடைய பாரத மணித்திருநாட்டில் நான் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மோடியின் இரட்டை இன்ஜின் ஆட்சி தோல்வியடைந்துவிட்டது என்பதற்கு இது சாட்சி. இரு தரப்பினரை மோதவிட்டு குளிர்காய்கிற இந்த அரசு இருக்கிறவரை, இந்தியாவில் இது நடக்கும். இந்த அரசுக்கு எதிராக நாட்டு மக்களை அணி திரட்ட வேண்டிய கடமை ‘இந்தியா’-வுக்கு (இந்தியா கூட்டணி) இருக்கிறது. விளம்பர வெளிச்சத்தில் காலம் தள்ளிக்கொண்டிருக்கிற மோடி அரசுக்கு முடிவுரை எழுதும் காலகட்டத்துக்காக நாடு காத்துக்கொண்டிருக்கிறது.”

“பிரதமர் நேரில் போனாலோ அல்லது நாடாளுமன்றத்தில் பேசிவிட்டாலோ எல்லாம் சரியாகிவிடுமா என பா.ஜ.க-வினர் கேட்கிறார்களே?”

“குறைந்தபட்சம் மணிப்பூர் முதல்வரைப் பதவி விலகச் சொல்லியிருக்க வேண்டாமா... நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். அந்தக் கோயிலில் மணிப்பூர் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமருக்கு என்ன தயக்கம்... 1957 முதல் 1962 வரை நேரு பிரதமராக இருந்தபோது 677 நாள்கள் நாடாளுமன்றம் நடந்தது. ஆனால் மோடியின் முதல் ஆட்சியில் 230 நாள்கள்தான் நடந்திருக்கிறது. நாடாளுமன்றத்தை மதிக்காத பிரதமர் நமக்கு வாய்த்திருப்பது ஜனநாயகத்துக்கு நேர்ந்த மிகப்பெரிய சோதனை.”

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், பிரதமர் மோடி

“மோடி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு சரத் பவார் செல்கிறார். இந்தியா கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறதோ!”

“மராட்டியத்தின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் பங்காற்றியவர் சரத் பவார். திலகர் பெயரால் விருது வழங்குகிற நிகழ்ச்சிக்கு சரத் பவாருக்கு அழைப்பு வருகிறது. பா.ஜ.க-வுடன் இருக்கும் பகைமையின் காரணமாக பங்கேற்க வேண்டாமென்று சிவசேனா கேட்கிறது. அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அழைப்பை மதித்து சரத் பவார் பங்கேற்று மோடியோடு அளவளாவியதிலும் தவறில்லை. அது ஜனநாயகத்தின் அழகான அம்சம்.”

“காங்கிரஸோடு சேரவே மாட்டேன் என சந்திரசேகர ராவ் பிடிவாதமாக இருக்கிறாரே... இணைய விரும்பும் மற்ற கட்சிகளுக்கும் அவருடைய நிலைப்பாடு தயக்கத்தை ஏற்படுத்துமே?”

“சந்திரசேகர ராவுக்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் பா.ஜ.க எதாவது நல்லது செய்திருக்கிறதா... பா.ஜ.க கூட்டணியில் சேருகிறேன் என்று இதுவரை அவர் அறிவிக்கவில்லை. ராகுல் காந்தி எல்லா தரப்பு மக்களையும் ஈர்த்திருக்கிறார். நேரடியாக முரண்பட்ட மம்தா பானர்ஜியும், சரத் பவாரும் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணைந்ததை சந்திரசேகர ராவ் சிந்திப்பார். `வாழ்க ராகுல்...' என சந்திரசேகர ராவும் சொல்கிற காலம் வரும்.”

ராகுல் காந்தி

“ராகுல் காந்தியைவிட மோடிக்குத்தான் இப்போதும் அதிக செல்வாக்கு இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றனவே?”

“அது இமாலய பொய். அட்லான்டிக் பெரும்பிழை. பசிபிக் பிசகு. தலைநகர் டெல்லியின் 3 மாநகராட்சிகளில் பா.ஜ.க வெல்ல முடியவில்லை. சிம்லா மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்தி காங்கிரஸ் கரை சேர்ந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இஸ்லாமியர் ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் இருக்கிற நாக்பூரைச் சுற்றி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 13 இடங்களில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. தலைநகர் டெல்லி, வணிக நகரம் மும்பை, கிளர்ச்சிக்கு வித்திட்ட நகரம் கொல்கத்தா, அரண்மனை நகரம் ஜெய்பூர், ஹைடெக் நகரம் ஹைதரபாத், தோட்ட நகரம் பெங்களூரு, கலாசார நகரம் சென்னை, திருவனந்தபுரம் ஆகியவை அவர்களிடம் இல்லை.”

“ஆனால் வட மாநிலங்களில் முழுக்க பா.ஜ.க செல்வாக்கு பெற்றிருக்கிறதே?”

“அது பொய். வெறும் 33% வாக்குகளை வைத்துக்கொண்டு, தேர்தல் முறைகளில் இருக்கும் கோளாறால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துவிட்டது. நடைபெறப்போகிற மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல்களில் கர்நாடகாவைப்போல காங்கிரஸ்தான் வெல்லப்போகிறது. 180 பேரை என்கவுன்ட்டரில் கொன்ற யோகி ஆதித்யநாத்தை நம்பி, உத்தரப் பிரதேச மக்கள் மீண்டும் முதல்வராக்க மாட்டார்கள்.”

யோகி ஆதித்யநாத்

“மோடிக்கு அடுத்து யோகி ஆதித்யநாத்-தான் பிரதமராகவே வருவார் என பா.ஜ.க-வினர் கூறுகிறார்கள், நீங்கள் உ.பி-யிலேயே அவர் வெல்ல மாட்டார் என்கிறீர்களே?”

“யோகி ஆதித்யநாத் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. காங்கிரஸ் அங்கு பலமாக இல்லை என்றாலும், பாலில் படும் நெய்யாய் மாநிலம் முழுவதும் விரவி வியாபித்து இருக்கிறது. அந்த காங்கிரஸோடு அகிலேஷ் யாதவ் கைகோக்கிறபோது யோகி ஆதித்யநாத் தூக்கி வீசப்படுவார். வரும் தேர்தல் அதை நிரூபிக்கும்.”

“திராவிடம் என்பது தவறான அடையாளம் என்று ஆளுநர் சொல்லியிருக்கிறாரே?”

“ஆளுநருக்கு அறிவின் போதாமை இருக்கிறது. அறியாமை என்கிற அந்தகாரத்தில் இருக்கிற ஆளுநர் ஆர்.என்.ரவி, உளறிக் கொட்டுவதற்கு எல்லாம் என்னிடத்தில் பதில் எதிர்பார்க்க வேண்டாம். `திராவிட உத்கல வங்கா' என்றார் ரவீந்திரநாத் தாகூர். ஞானசம்பந்தரை `திராவிட சிசு' என்றார் ஆதிசங்கரர். திராவிடம் என்பது ஒரு கலாசாரத்தின் பெயர். இதெல்லாம் ரவிக்கு தெரியுமா... நிலத்தின் பெயர், மொழியின் பெயர், இனத்தின் மீட்சிக்கான பெயராக தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சில் கல்வெட்டாக இன்றைக்கும் திராவிடம் இருக்கிறது.”

ஆர்.என்.ரவி

“இந்தியா என்கிற பெயரே ஐரோப்பியர்கள் கொடுத்தது, அதை வைத்திருக்க வேண்டுமா என்கிற தொனியிலும் ஆளுநர் பேசியிருக்கிறாரே?”

"இந்தியாவை உருவாக்கியதே அவர்கள்தானே! அவர்கள் இல்லாவிட்டால் இந்தியா எப்படி ஒருங்கிணைந்திருக்கும்... இப்போது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்துவிட்டதால் சனாதனிகளுக்கு எரிகிறது. குறிப்பாக inclusive alliance என்ற வார்த்தை அவர்களைச் சுடுகிறது. எல்லா மக்களையும் ஒருங்கிணைப்பது என்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தியன் முஜாகிதீன், கிழக்கிந்திய கம்பெனியில்கூட இந்தியா இருந்தது என பிரதமர் கூறுகிறாரே... வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஏன் மோடிக்கு நினைவுக்கு வரவில்லை. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் பேங்க், இந்தியன் ரயில்வே, இந்தியன் ஏர்வேஸிலும்கூட இந்தியா இருக்கிறது. நடைபெறுகிற யுத்தம் என்பது கலாசார யுத்தம். அவர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள்.”

“கருணாநிதி, ஜெயலலிதாவின் ஆட்சியைப் பார்த்தவர் நீங்கள். ஸ்டாலின் ஆட்சியைப் எப்படி பார்க்கிறீர்கள்?"

“கலைஞர், ஜெயலலிதா இருவரையும்விட ஸ்டாலின் ஆட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட்டை இந்தியாவில் நடத்துவதற்கு தகுதியுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு என நிரூபித்தது ஸ்டாலின் ஆட்சி. அடுத்து ஹாக்கி போட்டி நடத்துகிறார்கள். சர்வ அதிகாரமும் இருக்கிற மோடி சாம்ராஜ்ஜியத்தால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்ட முடியவில்லை. ஆனால், கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையை 2 ஆண்டுகளில் கட்டி திறந்துவிட்டார் ஸ்டாலின். குஜராத்தைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் ஏற்றுமதியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு உருவாகியிருக்கிறது. நெல்லில் உமி இருப்பதைப்போல, நீரில் பாசி இருப்பதைப்போல, நிலவில் களங்கம் இருப்பதைப்போல குறை இருக்கலாம். ஆனால், நிறைவுகள்தான் நிறைய இருக்கின்றன.”



from Latest news https://ift.tt/zKrXQmq

Post a Comment

0 Comments