பொதுவாக, பங்குச் சந்தையும் தங்கமும் எதிரெதிர் திசையில் செல்லும் தன்மை கொண்டவை. அதாவது, பங்குச் சந்தை புள்ளிகள் இறங்கும்போது தங்கம் விலை உயரும்; தங்கம் விலை குறையும்போது, பங்குச் சந்தை புள்ளிகள் ஏற்றத்தில் இருக்கும். ஆனால், இப்போது சற்று விநோதமாக பங்குச் சந்தையும் இறக்கத்தில் உள்ளது; தங்கத்தின் விலையும் இறங்கிக்கொண்டிருக்கிறது.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, நிஃப்டி குறியீடு (17-ம் தேதி பிற்பகல் 3.30 நிலவரப்படி) கடந்த ஒரு மாத காலத்தில் 1.77 சதவிகிதமும், சென்செக்ஸ் குறியீடு 2.16 சதவிகிதமும் இறக்கம் கண்டுள்ளன. தங்கத்தைப் பொறுத்தவரை கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 0.8 சதவிகிதமும், கடந்த மூன்று மாத காலத்தில் 3.7 சதவிகிதமும் இறக்கம் கண்டுள்ளன.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களின் விலை குறையும்போது, அவற்றை அதிகமாக வாங்கிப் பயன்படுத்துவோம். ஆனால், முதலீடு என்று வரும்போது, விலை குறையக் குறைய முதலில் பயம் வரும்; இதனால், புதிதாக வாங்குவதற்குப் பதிலாக, ஏற்கெனவே இருப்பதை விற்கத் தொடங்குவதுதான் மனித இயல்பாக இருக்கிறது. தங்கத்தைப் பொறுத்தவரை, நம்மவர்கள் ஒருமுறை வாங்கிவிட்டால், அதை விற்பதில்லை என்றாலும், புதிதாக வாங்குவதை நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், பங்கு முதலீட்டைப் பொறுத்தவரை, லாபம் குறைவது கண்ணெதிரே தெரிய ஆரம்பித்தால், உடனே விற்க வேண்டும் என முடிவெடுக் கிறார்கள். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள், எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிடுகிறார்கள்.
விலை இறங்கும்போது செய்யக் கூடாத தவறுகளாக இவை உள்ளன. பங்குச் சந்தை இறக்கம் காணும்போது நாம் ஏற்கெனவே வாங்கிய பங்குகளின் மூலம் கிடைத்த லாபம் குறைவது உண்மைதான். அந்த இறக்கம் நமக்கு வருத்தத்தையும் கவலையையும் அளிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், சந்தை இறங்கும்போது நல்ல பங்குகளை, குறைந்த விலையில் வாங்குவதற்கு அருமையான வாய்ப்பு என்கிற உண்மையைப் புரிந்துகொண்டால், சந்தை இறக்கத்தைப் பார்த்து, நாம் வருத்தப்படுவதைவிட, புதிதாக முதலீடு செய்யும் வழிகளை நாம் தேடுவோம்.
தங்கத்தின் விலையோ, பங்குச் சந்தைப் புள்ளிகளோ இன்றைக்குக் குறைந்தாலும் அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து, மீண்டும் உயரத்தான் போகின்றன. 10 வருடமாக பங்குச் சந்தை உயரவே இல்லை என்றோ, தங்கத்தின் விலை அதிகரிக்கவே இல்லை என்றோ சொல்லவே முடியாது! அப்படி ஒரு நிகழ்வு வரலாற்றில் நடக்கவே இல்லை!
ஆக, நம் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்பவும், நம் எதிர்காலத் தேவைக்கேற்பவும் ஒரு நல்ல போர்ட்ஃபோலியோவை உருவாக்கி, ஏற்ற, இறக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நம் முதலீட்டைத் தொடர்வதுதான் சரி என்பதை உணர்ந்து செயல்படுவதே சரி! சந்தையில் அவ்வப்போது வரும் இறக்கத்தைக் கண்டு ஒதுங்கி நிற்பவர்கள், நல்லதொரு வாய்ப்பை இழந்துவிட்டோமே எனப் பிற்பாடு வருத்தப்பட வேண்டியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்!
- ஆசிரியர்
from Latest news https://ift.tt/rKEtbWu
0 Comments