இந்த வார ஆலய அப்டேட்ஸ்: திருவண்ணாமலை கிரிவலம் செய்ய உகந்த நாள், நேரம்... சிறப்பு ரயில்கள் என்னென்ன?

திருவண்ணாமலை, சிவ பக்தர்களுக்கு உயிர்போன்ற தலம். பஞ்சபூதத்தில் அக்னித் தலம். ஈசன் நெருப்புப் பிளம்பாக எழுந்து நின்று திருக்காட்சி அருளிப் பின் மலையாகக் குளிர்ந்து அருள்பாலிக்கும் தலம். எனவே இத்தலத்தில் கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பு. குறிப்பாக பௌர்ணமி நாள்களில் கிரிவலம் வந்து வழிபட்டால் வாழ்வில் தொல்லைகள் நீங்கும். 14 கி.மீ தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் சித்தர்களும் தேவர்களும் பௌர்ணமியில் சூட்சும ரூபமாக வலம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே அந்த நாளில் கிரிவலம் வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு குவிவார்கள்.
கிரிவலப் பாதை

கிரிவலம் செல்வது எப்படி?

முதலில் திருவண்ணாமலை கோயிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயணரைத் தரிசித்து கிரிவலம் செல்ல அனுமதி பெற வேண்டும். பூத நாராயணரே இத்தலத்தின் காவல் தெய்வம். அவரை வணங்கிப் புறப்பட்டால் கிரிவலம் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன் பிறகு ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோயில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மலையை வலம் வரத் தொடங்க வேண்டும். கிரிவலத்தை இப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது நியதி. ஆனால் பௌர்ணமி நாள்கலில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆலய தரிசனம் செய்து கிரிவலம் தொடங்குவது சிரமம். மலையே இங்கு இறைவன் என்பதால் மனதார ஆலயத்துள் இருக்கும் அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் வணங்கிப் பின் கிரிவலம் தொடங்கலாம்.

மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவனவாகும். இவை தவிர்த்து ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள், பதினாறு விநாயகர் கோயில்கள், ஏழு முருகன் கோயில்கள், ஆதி காமாட்சி அம்மன் என 99 கோயில்கள் கொண்ட அற்புதமான தெய்விகப் பாதை கிரிவலப் பாதை.

இந்த மாதம் கிரிவலம் எப்போது?

இந்த மாதம் ஆகஸ்ட் 30-ம் தேதி ஆவணி மாத பெளர்ணமி வருகிறது. இந்த நாளில் காலை 10.46 மணிக்குப் பெளர்ணமி திதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 8.17 வரை பெளர்ணமி திதி உள்ளது. எனவே ஆகஸ்ட் 30-ம் தேதியே கிரிவலம் செய்ய உகந்த நாள். இந்த நாளில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த மாத கிரிவலம் மிகவும் விசேஷமானது. இந்த நாளில் கிரிவலம் செய்து வேண்டிக்கொள்பவர்களுக்கு நற்பலன்கள் அதிகரிக்கும் என்பதால் லட்சக்கணக்கானோர் இங்கு திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிவலம்

எனவே திருவண்ணாமலையில் சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. தென்னக ரயில்வே ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்களை இயக்குகின்றன. 30- ம் தேதி வேலூரில் இருந்தும் விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவற்ற சிறப்பு ரயில் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், விழுப்புரம் வழியாக தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல சிறப்பு ரயில்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட இருக்கின்றன.

விழுப்புரம் திருவண்ணாமலை ரயில்களான 06690, 06691 மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. எண் 06028, 06027 ஆகிய ரயில்கள் தாம்பரம் - விழுப்புரம் - தாம்பரம் என இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா

செப்டம்பர் 4-ம் தேதி அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாள்கள் நடைபெற இருக்கிறது.

நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் செப்டம்பர் 13 ம் தேதி நடைபெற இருக்கிறது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் 150 சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது. 600க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஶ்ரீரங்கம்

ஶ்ரீரங்கம் பூச்சாண்டி சேவை

ஆவணி புரட்டசி மாதங்களில் ஶ்ரீரங்கத்தில் பவித்ரோத்சவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பவித்ரோத்சவம் நேற்று (27.8.23) தொடங்கியது. இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி முதல் 6 மணிவரை பூச்சாண்டி சேவை எனப்படும் நூலிழை சேவை நடைபெறும். மூலவரான ரங்கநாதன் மீது நூலிழைகளைச் சுற்றிச் சுற்றி வைத்து அலங்காரம் செய்வார்கள். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கும் என்பதால் இந்த சேவையை பூச்சாண்டி சேவை என்பார்கள். பூச்சாண்டி சேவையை தரிசித்தால் மன பயம் அகலும் என்பது நம்பிக்கை. உற்சவத்தின் ஒன்பது நாள்களும் நம்பெருமாள் தங்கக் கொடிமரம் வரை எழுந்தருள்வார். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக செப்டம்பர் 2-ம் தேதி நெல் அளக்கும் வைபவமும், 4-ம் தேதி தீர்த்த வாரியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest news https://ift.tt/BbLcUKX

Post a Comment

0 Comments