வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், காலீஸ்வரம் ராஜ், கோபால் சங்கரநாராயணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், "தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முழு அதிகாரம் தற்போது அரசின் வசம் உள்ளது. அதை மாற்ற வேண்டும். அதாவது சிபிஐ இயக்குநரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் தேர்வு செய்கிறார்கள்.
இதேபோல் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய வேண்டும்" என கோரியிருந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது, "தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது அரசின் நிர்வாகச் செயல்பாட்டின் ஓர் அங்கம். தேர்தல் ஆணையராக சுதந்திரமாக செயல்பட்டவர் என்ற பெயரை பெற்றவர் டி.என்.சேஷன்.
அவரை நியமித்தது அரசுதான். இப்படி புகழ்பெற்ற பலர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறி மத்திய அரசு தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மற்றொரு மனுதாரரான அஸ்வினி உபாத்யாய தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரநாராயணன், ''தேர்தல் ஆணையர்களை நியமிக்க தனி செயலகம் இருக்க வேண்டும். நாட்டின் ஒருங்கிணைந்த நிதியில் இருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்'' என வலியுறுத்தினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், ''பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் செலவினங்களை கையாள்வதற்கு தனியான சுதந்திரமான செயலகம் அமைக்கப்பட வேண்டும்.
இதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றமும் மத்திய அரசும் எடுக்க வேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு கோருகிறது'' என கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் மக்களவையில் மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், "தலைமைத் தேர்தல் ஆணையர் (சிஇசி) மற்றும் தேர்தல் ஆணையர்களை (இசி) நியமிக்கும் குழுவில் இருந்து தலைமை நீதிபதியை விலக்கி வைக்கப்படுகிறார்" என கூறியிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் காங்கிரஸ், "இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது. இந்த ஆண்டு மார்ச் மாதம், குழுவில் பிரதமர், திர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என்று கூறியது. இதற்கிடையில் கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த மசோதா, தேர்தல் கண்காணிப்பு குழுவை பிரதமரின் கைகளில் மொத்த பொம்மையாக மாற்றுவதற்கான அப்பட்டமான முயற்சி" என தெரிவித்திருக்கிறது.
from Latest news https://ift.tt/F0PGeoa
0 Comments