``பேசும் போதே மைக்’கை ஆஃப் பண்றாங்க..!” - கொதிக்கும் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி

``கூச்சல், குழப்பம், அமளி....நாடாளுமன்றத்தில் என்னதான் நடக்கிறது..?!”

``மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் பேச வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் குறைந்தபட்ச கோரிக்கை. மன்மோகன் சிங், வாஜ்பாய் இருந்தபோது நாடாளுமன்றத்துக்கு உரிய மரியாதையைக் கொடுத்தனர். ஆனால் பிரதமர் மோடி நாடாளுமன்ற அவைக்கு வருவதேயில்லை. ஆட்சிப்பெறுப்பேற்ற போது நாடாளுமன்ற அவையில் தரையை தொட்டு முத்தமிட்ட இவர், ஜனநாயகத்தைக் கொன்றுகொண்டு இருக்கிறார். மணிப்பூரில் இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் வருகிறது. ஆகவே நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்புகிறோம். இப்படியே விட்டால் இது இந்தியா முழுவதும் பரவும் அபாயமும் இருக்கிறது”.

கலாநிதி வீராசாமி

``எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு முறையாக வாய்ப்பு வழங்கப்படுகிறதா?”

``காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிக்கொண்டிருக்கும்போதே மைக் ஆப் செய்துவிடுகிறார்கள். எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில்கூட அவர்களுக்கு பிடிக்காத கருத்தைச் சொன்னால் பேசும் போதுதே மைக்’கை ஆஃப் பண்ணி விடுவார்கள். எங்களையும் பேசவிடுவதில்லை.. அவர்களும் பேசுவதில்லை.”

``303 எம்.பிக்களை கொண்ட ஆளும் கட்சிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது ஏன்?”

``ஆட்சி கவிழ்ப்புக்காக இதனைக் கொண்டு வரவில்லை. ஒரு நாட்டின் பிரதமரை நாடாளுமன்ற அவைக்கு வரவழைக்கவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு ஜனநாயக மாண்புகள் அனைத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு கட்சியாக பா.ஜ.க இருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏற்கப்பட்டதே பெரும் வெற்றியாகப் பார்க்க வேண்டும். இதன்மூலம் பிரதமர் நாடாளுமன்ற அவைக்கு வந்தாக வேண்டும்”

``வாரிசு அரசியல் செய்கிறீர்கள் என்ற குற்றசாட்டை தி.மு.க மீது தொடர்ச்சியாக முன்வைக்கிறார்களே!”

``ஆமாம். நாங்கள் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் வாரிசு என வெளிப்படையாக சொல்கிறோம். பா.ஜ.க யாருடைய வாரிசு..? கோட்சே மற்றும் சாவர்கரின் வாரிசு தானே. அதனை தைரியமாக அவர்கள் சொல்லட்டுமே. நாட்டையே அழிவு பாதைக்கு கொண்டு சென்றிருக்கும் இவர்கள் மக்கள் நலனில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தும் தி.மு.க மீது குற்றசாட்டு சொல்ல தகுதியற்றவர்கள்.”

எதிர்க்கட்சிகளின் கூட்டணி - ‘இந்தியா’ அணி

``I.N.D.I.A  கூட்டணி ஆட்சியமைத்தால் கட்சிகளுக்குள் முரண்பாடு ஏற்பட்டு ஆட்சியே கவிழும் அபாயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?!”

``2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க உட்பட யாருக்குமே தனிப்பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியில் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. தனிப்பெரும்பான்மையை ஒருத்தருக்குக் கொடுத்துவிட்டால் அவர்களைக் கேள்வி கேட்கவே முடியாது நிலை ஏற்படும்.”

``மாநிலத்தில் தனிப்பெரும்பான்மை ஆட்சி செய்வது மட்டும் நல்லதோ?”

``தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி செய்தால்கூட... தொழிலாளர்கள் விரும்பவில்லை என்றதும் உடனடியாக தொழிலாளர் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றோமே... மக்களின் கருத்துகளுக்குச் செவிக் கொடுக்கிறோமல்லவா ஆனால் பா.ஜ.க என்ன செய்கிறது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நாங்கள் எங்கள் விருப்பத்தின்படி தான் இருப்போம் என்றிருப்பவர்களிடம் தனிப்பெரும்பான்மை கிடைப்பது நல்லதல்ல.”

``மத்திய மற்றும் தென்சென்னை தொகுதிகள் வளரும் அளவுக்கு வடசென்னை வளர்ச்சியடையவில்லையே?”

``வடசென்னை பொறுத்தவரை பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் அதிகம் வாழும் பகுதி. தொழிற்சாலைகள் அதிகமிருக்கக் கூடிய பகுதி. கடந்த ஆட்சிக் காலத்தில் மிக குறைந்த அளவிலான நிதிகளே ஒதுக்கப்பட்டு வந்தது. தென்சென்னை, மத்திய சென்னை வளர்ச்சிக்கு 800, 900 கோடிகள் என்றால் வடசென்னைக்கு 50 கோடிக்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் வடசென்னை வளர்ச்சி குறித்து அதிகம் பேசப்பட்டு தற்போது 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

கலாநிதி வீராசாமி

``வடசென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறீர்களா?”

``அதை நான் எப்படி சொல்ல முடியும்? கட்சித் தலைமை வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் போட்டியிடுவேன்.”

அண்ணாமலை

``அரசியல் மாற்றத்தை கொண்டு வருவேன் என்கிறாரே அண்ணாமலை!”

``தமிழ்நாட்டிற்கு இவர்கள் வந்து எதை மாற்றப்போகிறார்கள். கல்வி, மருத்துவம், சமூக நீதி என எதையெடுத்துக் கொண்டாலும் பாஜக ஆளுகிற மாநிலங்களைவிட தமிழ்நாடு முதன்மையாக இருக்கிறது. இந்நிலையில் மாற்றம் கொண்டுவருவோம் என இவர்கள் பேசுவதன் நோக்கமென்ன..? தமிழ்நாட்டை உத்திரபிரதேசம் போல மாற்றி இனக்கலவரத்தை உருவாக்கி, பொருளாதாரத்தில் நலிவடைந்த மாநிலமாக மாற்ற பார்க்கிறார்களா...?”



from Latest news https://ift.tt/iaI7bqf

Post a Comment

0 Comments