ஆன்லைனில் பொருள்களை ஆர்டர் செய்பவர்களுக்கு சில சமயங்களில் பொருள்கள் மாறி வருவதும், ஏமாற்றப்படுவதும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் கல்லூரி மாணவரான அதர்வா கண்டேல்வால், ஃப்ளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்தில், 76,000 ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார்.
ஆகஸ்ட் 13-ம் தேதி டெலிவரி செய்யப்படவேண்டிய ஆர்டர், 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஃப்ளிப்கார்ட் மையத்தை அணுகி இருக்கிறார். பேக்கேஜை திறப்பதற்கு முன்பு `ப்ரோடோகால்' எனக் கூறி, OTP-யை எடுக்குமாறு டெலிவரி செய்பவர் சொல்லி இருக்கிறார்.
அதன்பின், நம்பிக்கையுடன் அந்த பேக்கேஜை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஆர்டர் செய்திருந்த 76,000 ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்பிற்கு பதில், 3,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்பீக்கர்கள் இருந்துள்ளன.
`என்னிடத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் என எல்லா ஆதாரங்களும் இருக்கின்றன' என இந்தச் சம்பவத்தைக் குறித்து சமூக வலைத்தளத்தில் அதர்வா கண்டேல்வால் பதிவிட்டு இருக்கிறார். இருந்தபோதும் எங்களிடம் `ரிட்டர்ன் பாலிசி இல்லை' என நிறுவனம் கைவிரிக்கவே, விரக்தி அடைந்தவர் நிறுவனத்தின் நியாயமற்ற செயலைக் கண்டித்து, உதவி கோரி பல நுகர்வோர் மையங்களை தன்னுடைய பதிவில் டேக் செய்திருக்கிறார்.
நெட்டிசன்கள் மத்தியில் இவரின் பதிவு கவனம் பெற்றதைத் தொடர்ந்து, ஃப்ளிப்கார்ட்டின் செயலை பலரும் வன்மையாகச் சாடி வந்தனர்.
இதனால் வேறுவழியின்றி ஃப்ளிப்கார்ட் அவருக்கு பதிலளிக்கும் வகையில், ``எங்கள் வாடிக்கையாளர்களின் பிரச்னைகளை சரிசெய்வதில் உறுதியாக இருக்கிறோம். அதர்வா எங்களுடன் தொடர்பில் இருக்கிறார். இதனைத் தீர்த்து வைப்போம் என நீங்கள் நம்பலாம்'' என பதிலளித்துள்ளது.
இந்தச் சம்பவம் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ள நினைப்பதாக ரெட்டிட் தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார், அதர்வா. ஆனால், முன்கூட்டியே ஃப்ளிப்கார்ட் ரீஃபண்ட் அளிப்பதாக உறுதி அளித்திருப்பதால், இந்தப் பிரச்னை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
from Latest news https://ift.tt/EVGXFLQ
0 Comments