காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்த்தும்கூட, மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட டெல்லி நிர்வாக திருத்த மசோதா மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சிகளுக்கு 29 வாக்குகள் குறைவாக இருந்ததால், அந்த மசோதாவை அவர்களால் தோற்கடிக்க முடியாமல் போய்விட்டது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் #DelhiServicesBill மாநிலங்களவையில் நிறைவேறிய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியில் தோற்றுப்போனாலும், அதில் ஒற்றுமையுடன் நின்று செயல்பட்ட விதம் எதிர்க்கட்சிகளின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் டெல்லி நிர்வாக திருத்த மசோதாவை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. மக்களவையில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இருப்பதால், நிச்சயமாக மசோதாவை நிறைவேற்றிவிடுவார்கள். எனவே, மாநிலங்களவையில் எப்படியாவது மசோதாவைத் தோற்கடித்துவிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி நினைத்தது.
அதற்கான காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் ஆம் ஆத்மி கோரியது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட எல்லா எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரையும் அவர் சந்தித்தார். ஆனால், ஆம் ஆத்மிக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் கட்சிக்குள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், அதன் பிறகு பாட்னாவிலும் பெங்களூருவிலும் எதிர்க்கட்களின் கூட்டங்கள் நடைபெற்று, ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி உருவானது. அதில் ஆம் ஆத்மியும் இடம்பெற்றது.
அப்போதே, டெல்லி மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிப்பது என்று ‘இந்தியா’ கூட்டணி ஏகோபித்த முடிவை எடுத்தது. ஆனால், மாநிலங்களவையில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறாத சில கட்சிகளின் ஆதரவைப் பெற்று, எப்படியாவது மசோதாவை பா.ஜ.க அரசு நிறைவேற்றிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பா.ஜ.க-வின் அந்த உத்தியை எதிர்க்கட்சிகளும் நன்கு அறிந்திருந்தன.
ஆனாலும், மசோதாவைத் தோற்கடிப்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்த எதிர்க்கட்சிகள், கடைசி வரை ஒற்றுமையுடன் செயல்பட்டதைப் பார்க்க முடிந்தது. மசோதா மீது விவாதத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் சிங்வி, ‘சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் பழிவாங்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது’ என்றார்.
கூட்டணியில் இருக்கும் எந்தவொரு கட்சியும் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளமும் டெல்லி மசோதாவை ஆதரித்து வாக்களித்தன. அதனால், மசோதா நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களில் அத்தனை பேரும் அவையில் ஆஜராகியிருந்தனர். டெல்லி மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக 91 வயதான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சக்கர நாற்காலியில் அவைக்கு வந்திருந்தார். உடல்நிலை சரியில்லாத நிலையிலும், மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பதற்காக இரண்டரை மணி நேரம் அவையில் அமர்ந்திருந்தார் மன்மோகன் சிங். ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.பி-யான பிஷிஸ்த நாராயண் சிங் ஆம்புலன்ஸில் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார்.
ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், அவையிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார். அவர், ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். ‘ஜனநாயகத்தைக் காப்பதற்கான செயல்பாடு தொடரும். 2024-ல், மோடி - அமித் ஷாவின் சர்வாதிகாரம் முடிவுக்கு வரும்’ என்றார் சஞ்சய் சிங்.
மசோதா வாக்கெடுப்பில் தோற்றாலும், கூட்டணியாக ஒற்றுமையாக செயல்படுவதில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
from Latest news https://ift.tt/fc4pHiZ
0 Comments