Virat Kohli: `தலைமுறை கடக்குற ஹிட்டானவன்' சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள்; மிரட்டும் 15 சாதனைகள்!

இந்திய அணியின் மிக முக்கியமான ஸ்டார் பேட்ஸ்மேன்களின் பெயர்களை நினைவுபடுத்தினால், ஆரம்பக் காலத்திலிருந்து பல பெயர்கள் நமக்குத் தோன்றலாம். இந்திய அணியைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருத்தருக்காக கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வரிசை கபில்தேவ், சச்சின், கங்குலி, ஷேவாக், கம்பீர், யுவராஜ் சிங், தோனி என்று நீளும். இந்த வரிசையில் அடுத்ததாக உள்ளவர் என்றால், அது நிச்சயம் விராட் கோலிதான்.

தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 15 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்திருக்கிறார் விராட். இதனைத் தொடர்ந்து, ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விராட் கோலியை டேக் செய்து வாழ்த்தி வருகின்றனர். சச்சினுக்கு அடுத்து, இளம் வயதிலேயே அதிக சாதனைகளைச் செய்தவர் விராட் கோலிதான். இவரின் மிக முக்கியமான 15 சாதனைகளை இங்கே காண்போம்.
Virat Kohli

* சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8,000, 9,000, 10,000, 11,000 மற்றும் 12,000 ரன்களை எட்டிய வீரர் என்ற தொடர் சாதனையைப் படைத்துள்ளார் கோலி. இன்னும் 102 ரன்கள் மட்டும் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் பெற்றுவிடுவார்.

* 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், 52 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாகச் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

* டி 20, ஒருநாள் (ODI), டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடி, அதிக (20) தொடர் நாயகன் (Player of the Series) விருதைப் பெற்றுள்ளார். அதே சமயம், சச்சின் டெண்டுல்கரும் 20 தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார். ஆனால், சச்சினை விடக் குறைந்த போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் விராட்.

* ஒருநாள் போட்டிகளில், ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்களைப் பதிவு செய்த வீரரும் கோலியே. இலங்கை அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 10 சதங்களை அடித்துள்ளார். அடுத்ததாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 9 சதங்களைப் பதிவு செய்துள்ளார்.

* டி20 போட்டிகளில் மட்டும் பல சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார். இதுவரை 115 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி, 38 அரைசதங்களை அடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதமடித்த வீரர் இவரே.

* அதேபோல, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 107 இன்னிங்ஸ்களில் விளையாடி 4008 ரன்களைக் குவித்துள்ளார். தற்போது வரை, எந்தச் சர்வதேச வீரரும் 4,000 ரன்களை எடுக்கவில்லை.

Virat Kohli

* சர்வதேச டி20 போட்டித் தொடரில் விளையாடி 7 தொடர் நாயகன் (Player of the Series) விருதுகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்ததாக, பாபர் அஸாம் 5 தொடர் நாயகன் விருதுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

* இவர் இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 68 போட்டிகளில் கேப்டனாக விளையாடி, 40 வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதும், அதிக வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்ததும் விராட் கோலிதான்.

* ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இல்லாமல் அதிக கேட்ச்களைப் பிடித்த இரண்டாவது இந்திய வீரர் கோலிதான். இதுவரை 275 போட்டிகளில் விளையாடி, 142 கேட்ச்களைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் அசாருதின் 156 கேட்ச்களுடனும் மூன்றாவது இடத்தில் சச்சின் டெண்டுல்கள் 140 கேட்ச்களுடனும் உள்ளனர்.

* சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதுவரை அவர் 76 சதங்களை அடித்துள்ளார். 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார்.

* சர்வதேச டி20 போட்டிகளில் 3,500 ரன்களை வேகமாகக் கடந்த முதல் வீரர் கோலியே. வெறும் 96 இன்னிங்ஸ்களில் இந்த ரன்களை அடித்து அசத்தினார்.

* 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைதான், இவர் விளையாடிய முதல் உலகக் கோப்பைத் தொடர். தனது முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே, வங்கதேச அணிக்கு எதிராகச் சதமடித்து அசர வைத்தார். உலகக் கோப்பை அறிமுகப் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

Virat Kohli

* ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவரும் இவர்தான். 229 இன்னிங்ஸ்களில் 7263 ரன்களை எடுத்துள்ளார். மேலும், அதிக சதங்களை (7) அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

* கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 973 ரன்களை எடுத்தார். இதன் மூலம், ஒரு சீசனில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

* இதுவரையிலும் அனைத்து விதமான டி20 போட்டிகளில் 11,925 ரன்களை எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் இவரே.

இத்தனை சாதனைகளுக்குச் சொந்தக்காரரான விராட் கோலி, இன்னும் பல சாதனைகளையும் படைப்பார். மேலும், பல சாதனைகளையும் முறியடிப்பார்!

Congratulations to our King Kohli!

விராட் கோலியின் கரியரில் உங்களுக்குப் பிடித்த நாஸ்டால்ஜியா இன்னிங்ஸ்களை கமென்ட்டில் சொல்லுங்கள்!


from Latest news https://ift.tt/gXe7kLA

Post a Comment

0 Comments