நாளொன்றுக்கு 10% வட்டி... புதுச்சேரியைக் கலங்கடிக்கும் புதிய முதலீடு!

புதுச்சேரி லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரி இளைஞர் சிவஞானம். 10 நாள்களுக்கு முன்பு ஆன்லைனில் சம்பாதிப்பதற்கான தொழிலைத் தேடியிருக்கிறார். அப்போது ’எங்களிடம் முதலீடு செய்யும் பணத்திற்கு நாளொன்றுக்கு 10 சதவிகிதத்திற்கு மேல் வட்டி தருகிறோம்’ என்கிற விளம்பரத்தைப் பார்த்து, அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார் சிவஞானம்.

அப்போது டெலிகிராம் ஆப் மூலம் அவருக்கு சில வீடியோக்களை அனுப்பிய அவர்கள், `உங்கள் லாபம் உங்கள் வங்கிக் கணக்கில் அன்றாடம் வரவு வைக்கப்பட்டுவிடும். அதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறியிருக்கின்றனர்.

ஆன்லைன் மோசடி

அதை நம்பி, முதலில் ரூ.2,000, ரூ3,000 என அனுப்பிய அவர், அதன்பிறகு ரூ.50,000, ஒரு லட்சம் என அவர்கள் சொன்ன பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தியிருக்கிறார்.

பணத்தை அனுப்ப அனுப்ப, இவரது போர்ட்டலில் தொகை கூடிக் கொண்டே சென்றதால் மகிழ்ந்த சிவஞானம், ஒரே வாரத்தில் 13 லட்சம் ரூபாயை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்குளில் செலுத்தினார்.

அப்போது அவரது போர்ட்டலில் ரூ.18 லட்சம் வரவு வைக்கப்பட்டிருப்பதாக காட்டியது. அந்த பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றபோதுதான், அவ்வளவு பணம் வங்கியில் இல்லை என்பதைக் கேட்டு அதிர்ந்துபோனார். அப்போதுதான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.

அதையடுத்து அவர் சைபர் கிரைம் போலீஸான இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் ஆய்வாளர் கீர்த்தி.

டெலிகிராம், வயர், இன்ஸ்டாகிராம்.

அதையடுத்து ``இணைய வழியில் வருகிற எந்த ஒரு முதலீட்டு வேலைவாய்ப்பு அழைப்பை நம்பி பணத்தை செலுத்தி இணையவழி மோசக்காரர்களிடம் ஏமாற வேண்டாம். குறிப்பாக, இன்ஸ்டாகிராம், டெலிகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவற்றில் வருகின்ற எந்த முதலீட்டு வேலைவாய்ப்பு அழைப்பையும் ஏற்று பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். புதுச்சேரியில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் இப்படி 20-க்கும் மேற்பட்ட மேற்கண்ட புகார்கள் பதிவாகி இருக்கின்றன” என்று பொது மக்களை எச்சரித்திருக்கிறது புதுச்சேரி சைபர் பிரிவு காவல் துறை.

ஒருநாளைக்கு 10% எனில், ஒரு மாதத்திற்கு 300% லாபம் கிடைக்கும் என்று நம்பி, பலரும் இது மாதிரியான திட்டங்களில் பணம் கட்டுகிறார்கள். இப்படிப்பட்ட லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளாததே இதற்குக் காரணம்! மக்களின் இனியாவது இந்த உண்மையை உணர்ந்து, இது மாதிரியான மோசடித் திட்டங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்!



from Latest news https://ift.tt/RIBLWlz

Post a Comment

0 Comments