சமீபத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஒரு பெண் சொல்கிறார், தன் 3 வயது மகன் கேட்டதற்காக கார் வாங்கினோம் என்று. ’எப்படி வாங்கினீர்கள்?’ என்று கேட்டால், அவர்களது ஓர் இடத்தை விற்று அந்தப் பணத்தில் கார் வாங்கினதாகக் கூறுகிறார்.
இதை நாம், நடைமுறை யதார்த்தத்தோடு அணுகினோம் என்றால், அந்த இடத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயரக்கூடியது. 3 வயதுக் குழந்தை வளர்ந்து ஆளாகும்போது கல்விச் செலவுகளுக்குப் பயன்படுத்தலாம். இதுபோன்று பட்டியல் நீளும்.
உணர்வுபூர்வமாக அணுகினால், தன் குழந்தை விரும்பிக் கேட்பதை என்னவாயினும் செய்தாக வேண்டும் என்கிற முனைப்பு இதில் தென்படுகிறது. இப்படித்தான் இன்றைக்குப் பெரும்பாலான பெற்றோர் இருக்கின்றனர். குழந்தை கேட்டதை மறுப்பு எதுவும் இல்லாமல் வாங்கித் தருவதே நல்ல பெற்றோருக்கு அடையாளம் என நினைக்கின்றனர். இன்றைய குழந்தைகள் எதை விரும்பினாலும் அது தனக்குக் கிடைக்க வேண்டும் என்கிற மனநிலையில் வளர்கிறார்கள். இதன் விளைவுகள் என்ன என்பது பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் வசந்த்.
``இன்றைக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், சமூக பொருளாதாரச் சூழல் மாற்றம் கண்டிருப்பதுதான். குடும்ப அமைப்பே இன்றைக்கு மாறி வருகிறது.
முந்தைய தலைமுறைகளில் ஏழெட்டுக் குழந்தைகள் பெற்றுக் கொள்வார்கள். அல்லது, கூட்டுக்குடும்பத்தில் சித்தப்பா மகன்கள், பெரியப்பா மகன்கள் என ஒன்றாக இருப்பார்கள். அப்போது ஒரு தின்பண்டம் வாங்கி வந்தால்கூட, அனைத்துக் குழந்தைகளும் அதனை பகிர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற நெறி புகட்டப்பட்டது. ’இது தனக்கு மட்டுமே’ என்கிற எண்ணத்தை அவர்கள் குழந்தைகளிடம் வளரவிடவில்லை.
கூட்டுக்குடும்பங்களில் இருந்து தனிக்குடும்பம் வந்த பிறகு, இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றனர். அதிலும் மேற்சொன்னது போல எதுவாக இருந்தாலும் எல்லா குழந்தைகளுக்கும் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்படும். துணி எடுத்தால் கூட அனைத்து குழந்தைக்கும் ஒரே விலையில்தான் எடுப்பார்கள்.
பகிர்ந்து கொள்வதில் குழந்தைகளிடையே சண்டை வரும்; பெற்றோர் கண்டித்து நிலைமையை சரி செய்வர். `விடு உன் அண்ணன்தானே', `உன் தங்கச்சிதானே ஒண்ணு அதிகம் எடுத்துக்கிட்டா என்ன...' என்று ஆறுதலும் சொல்வார்கள். இப்படியாக இருந்த குடும்பச் சூழலில், ஒரு குழந்தை மட்டும் தனக்கு இது வேண்டும் எனக் கேட்க முடியாது. என்ன பொருள் கேட்டாலும் உடனே கிடைக்காது. பண்டிகை நாள்களுக்குத்தான் துணி எடுத்துக் கொடுப்பார்கள். குடும்பப் பொருளாதாரச் சூழல் அப்படித்தான் இருந்தது.
இன்று... சமூகப் பொருளாதார வளர்ச்சி பெரிய மாற்றத்தை குடும்ப அமைப்பில் ஏற்படுத்துகிறது. முடிந்தவரை ஒரு குழந்தையே போதும் என்கிற முடிவுக்கு வந்து விட்டனர் பலர். அப்போது, தாங்கள் சம்பாதிப்பதெல்லாம் இந்தக் குழந்தைக்குத்தானே என்கிற எண்ணம் உருவாகி அந்தக் குழந்தை என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்கிறார்கள். அதற்கான பொருளாதார நிலையும் ஓரளவுக்கு இருக்கிறது. இதில் பிரச்னை என்னவென்றால், தங்கள் குழந்தைப் பருவத்தில் தங்களுக்குக் கிடைக்காததெல்லாம் தங்கள் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று பெற்றோர் எண்ணுவதுதான்.
’என் பள்ளிக்காலத்தில் நான் சைக்கிள் கேட்டபோது என் அப்பா வாங்கித் தரவில்லை. அவரது பொருளாதார நிலை அப்படி இருந்தது. இன்றைக்கு நான் பொருளாதாரத்தில் நன்றாக இருக்கிறேன், என் குழந்தை விருப்பப்பட்டுக் கேட்பதை வாங்கிக் கொடுப்பதில் என்ன தவறு?’ என்று கேட்பார்கள் பல பெற்றோர். அதில் தவறொன்றும் இல்லை. அத்தியாவசியம், அநாவசியம் என்பதை பகுத்தறிந்து பார்க்க வேண்டும்.
15 வயதுக் குழந்தை சைக்கிள் கேட்கிறதென்றால் வாங்கிக் கொடுக்கலாம். உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக பைக் கேட்டால் வாங்கித் தருவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? 18 வயதுக்குட்பட்டோருக்கு ஓட்டுநர் உரிமமே வழங்கப்படாதபோது, 15 வயது சிறுவனுக்கு நீங்கள் பைக் வாங்கிக் கொடுத்து, இதுதான் நல்ல குழந்தை வளர்ப்பு என நம்பினீர்கள் என்றால், அது முட்டாள்தனம்.
கேட்டது எல்லாம் எளிதில் கிடைத்து விட்டால் வாழ்க்கையில் எதற்காக அவர்கள் போராடுவார்கள்? சிறு வயதில் நாம் எதை விதைக்கிறோமோ அதுதான் வளர்ந்து நிற்கும். கேட்டது எல்லாம் கிடைக்கப்பெறும் குழந்தை, வளர்ந்த பிறகும் தனது தேவையின் பொருட்டு போராடாது. பெற்றோரைச் சார்ந்தே இருக்கும்.
ஆக, குழந்தைக்கு நல்ல கல்வியைக் கொடுக்க நீங்கள் செலவு செய்யுங்கள், குழந்தையின் மருத்துவத்துக்காக செலவு செய்யுங்கள், அத்தியாவசியத் தேவைகளை கொஞ்சமும் தாமதிக்காமல் செய்து முடிப்பது நல்ல பெற்றோர்க்கு அழகு. ஆனால்... குழந்தை ஆசைப்படுகிறதே என அநாவசியமானவற்றை வாங்கிக் கொடுக்காதீர்கள்.
பாசிட்டிவ் ரீ என்ஃபோர்ஸ்மெண்ட், அதாவது உங்கள் குழந்தை நல்ல ஒரு செயலை செய்கையில் அதைப் பாராட்டும் விதமாக பரிசுகள் வாங்கிக் கொடுங்கள். படிப்பிலோ, விளையாட்டிலோ மற்ற திறன் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்றாலோ, அதை ஊக்குவிக்கும் விதமாக, குழந்தையை பாதிக்காத பொருள்களை வாங்கிக் கொடுக்கலாம். இதன் மூலம், நாம் ஒன்றைச் சாதித்தால் நமக்குப் பரிசாக ஒன்று கிடைக்கும் என்கிற எண்ணம் குழந்தைக்கு ஏற்படும். அதுவே, தான் மேலும் மேலும் உயர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும்.
அடுத்ததாக, குடும்பப் பொருளாதார சூழல் எப்படி இருக்கிறது என்பதை உங்கள் குழந்தைகளுக்கு விளக்குங்கள். எந்தப் பொருளை வாங்கிக் கொடுத்தாலும் அதை எப்படி வாங்கினீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும். இவையெல்லாம் குழந்தைகளுக்கு கொஞ்சம் புரிந்தாலும், அவர்கள் ஒரு பொருள் வேண்டும் என்று பிடிவாதமாக நிற்பது தளரும்.
மாறாக, குழந்தைகள் அடம் பிடிக்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுத்து பழகினீர்கள் என்றால், எப்போதும் அடம் பிடிக்கவே முற்படுவார்கள். பொதுவாக, குழந்தையின் கவனத்தை நிச்சயமாக வேறொன்றின் பக்கம் மடை மாற்ற முடியும். அப்படியாக பாசிட்டிவ் ஆன விஷயங்களை நோக்கி அவர்களைத் திருப்புங்கள்.
8 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஓரளவு புரியும் திறன் இருக்கும். அவர்கள் ஒரு பொருள் வேண்டுமென அடம் பிடிக்கிறார்கள் என்றால், குடும்பச்சூழலை எடுத்துச் சொல்லி, ’இப்போது வாங்கினால் கடன்பட வேண்டியிருக்கும்’ என்கிற நிலையை விளக்கிச் சொன்னால் ஓரளவு உள்வாங்கிக் கொள்வார்கள். அப்படியாக அவர்களை சூழலுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள பயிற்றுவியுங்கள். குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதுதான் நல்ல பெற்றோர்க்கு அழகு என்கிற எண்ணம் இருந்தால், அதை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள்.
சமூகத்தில் பொறுப்புள்ள மனிதனாக உங்கள் குழந்தையை உருவாக்குவதுதான் குழந்தை வளர்ப்பின் வெற்றி. வாழ்க்கைத் திறனைக் கற்றுக் கொடுங்கள். ஏமாற்றங்களையே கொடுக்காமல் வளர்த்தீர்கள் என்றால் சின்ன ஏமாற்றத்தைக் கண்டால்கூட துவண்டு போய் விடுவார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது. உங்கள் குழந்தையின் திறனை கண்டறிந்து அதனை ஊக்குவித்து அதில் அவர்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்யுங்கள். பணம் இருக்கிறது என்பதற்காகவெல்லாம் எது கேட்டாலும் வாங்கித் தருகிறீர்கள் என்றால் அது மோசமான குழந்தை வளர்ப்பாகவே இருக்கும் என்கிற உண்மையை உணருங்கள்” என்கிறார் வசந்த்.
from Latest news https://ift.tt/qCyWmV9
0 Comments