நடிகை சமந்தா, நடிகர் சல்மான் கான், ப்ரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ்.... இவர்களுக்கெல்லாம் ஓர் ஒற்றுமை உண்டு தெரியுமா? இவர்கள் எல்லோரும் ஆட்டோ இம்யூன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். அதென்ன ஆட்டோ இம்யூன் குறைபாடு?
அதாவது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், ஆரோக்கியமான உறுப்புகள், திசுக்கள், செல்கள் போன்றவற்றை எதிரிகளாக நினைத்துத் தாக்கத் தொடங்கும். அதனால் ஏற்படும் பிரச்னைகள் பல. டைப் 1 வகை நீரிழிவு, சொரியாசிஸ், மயோசைட்டிஸ், ருமட்டாயிடு ஆர்த்ரைட்டிஸ் என ஆட்டோஇம்யூன் குறைபாடுகளுக்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.
சமீப காலமாகத்தான் இந்தப் பிரச்னை குறித்து மக்களுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பிரபலங்கள் தங்கள் ஆட்டோஇம்யூன் குறைபாடுகள் குறித்து பொதுவெளியில் பகிரத் தொடங்கியதும் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. அப்படித்தான் நடிகை சமந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை முடக்கிப்போட்ட மயோசைட்டிஸ் பாதிப்பு குறித்துப் பகிர்ந்தார்.
பலவித நோய்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன மயோசைட்டிஸ்... என்று நீங்கள் கேட்கலாம். இந்த நோய் குறித்தும் அது யாரை பாதிக்கும்... அறிகுறிகள் என்ன என்பது குறித்தும் சென்னையைச் சேர்ந்த இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் விளக்குகிறார்...
``மயோசைட்டிஸ் என்பது தசைகளின் இன்ஃப்ளமேஷன், அதாவது வீக்கம். இது பரவலாகக் காணப்படுகிற பிரச்னை அல்ல. சற்றே அரியவகை பாதிப்புதான். தசைகளில் ஏற்படும் இந்த வீக்கம் பல காரணங்களால் வரலாம். சிலருக்கு சில வகையான இன்ஃபெக்ஷனால் வரலாம். ஃப்ளூ பாதிப்பு, ஹெச்.ஐ.வி தொற்று போன்றவற்றாலும் வரலாம். ஆட்டோ இம்யூன் குறைபாடு காரணமாகவும் வரலாம்.
அறிகுறிகள் என்ன?
தசைகளில் பலவீனம், சோர்வு மற்றும் தசைவலி.
எப்படி உறுதிப்படுத்துவது?
`ஆட்டோஇம்யூன் பேனல் பிளட் டெஸ்ட்' செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு தசை அல்லது சருமத்தை பயாப்சி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். சிலருக்கு 'எலக்ட்டோமையோகிராபி (Electromyography அல்லது EMG) மற்றும் எம்ஆர்ஐ சோதனைகள் தேவைப்படும்.
சிகிச்சை முறை
பாதிப்பின் தீவிரம் குறைக்க சில வேளைகளில் ஸ்டீராய்டு மருந்துகளும், இம்யூனோசப்ரசென்ட் வகை மருந்துகளும் தேவைப்படும்.
எந்த வகையான மயோசைட்டிஸ் என்பதைப் பொறுத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படும். இவை தவிர, பிசியோதெரபி, யோகா, ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் போன்றவையும் செய்ய வேண்டியிருக்கும். இன்ஃப்ளமேஷனை குறைக்கும் வகையிலான உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
அசைவ உணவுகள், பால் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரீஃபைண்டு உணவுகள், எண்ணெய் உணவுகள், வெளி உணவுகள் போன்றவற்றைக் குறைத்துவிட்டு, ஃப்ரெஷ் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.''
-ராஜலட்சுமி
from Latest news https://ift.tt/zdwLfBp
0 Comments