பாம்பு எப்போது கடிக்கும்..? பிடிக்கும் முன் இதை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!

தங்களுடைய சமூக வலைதள பக்கங்களுக்கு லைக், கமென்டுகள் அதிகம் வர வேண்டும் என்பதற்காக பாம்புகளைப் பிடித்து படமெடுக்கும் பழக்கம் தற்போது அதிகரித்திருக்கிறது. ஒருபுறம் பாம்புகளை லாகவமாகக் கையாண்டு போஸ் கொடுத்தாலும், மற்றொருபுறம் கடி பட்டு பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் பாம்புகளை யார் வேண்டுமானாலும் எளிதாகக் கையாள முடியுமா, பாம்புகளின் தன்மைகள் என்ன, பாம்புகளை சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள மூட நம்பிக்கைகள் என்னனென்ன என்பது குறித்து சூழலியல் செயற்பாட்டாளரான கோவை சதாசிவத்திடம் பேசினோம்.

அவர் கூறுகையில், ``சமீபத்தில் பாம்புகள் ஆங்காங்கே தென்படுகிறது எனப் பலர் நினைக்கிறார்கள். உண்மையில், சாலை விரிவாக்கம், காடு அழிப்பு, வீட்டு மனை உருவாக்கம் போன்றவற்றால் பாம்புகள் அண்டி இருந்த இடங்கள் காலியாவதால், அவை மனித குடியிருப்புகளை நோக்கி வருவதற்குக் காரணங்களாக இருந்து வருகின்றன.

நல்ல பாம்பு

மற்றொரு புறம் மக்களிடையே முகநூல் மோகம் அதிகரித்துள்ளது. இதனால் ஆபத்தான இடங்களைத் தேர்வு செய்து புகைப்படம் எடுக்கிறார்கள். பாம்புகளோடு புகைப்படம் எடுத்தால் அதிக லைக் வரும் என்ற எண்ணத்தில் புகைப்படம் எடுக்கும் போக்கு, சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

பாம்புகளை கையாளத் தெரியாமல் யார் வேண்டுமானாலும் பாம்புகளைப் பிடிப்பது மிகவும் ஆபத்தானது. இது உயிருக்கு ஆபத்தான செயல். பாம்புகளைக் கண்டால் வனத்துறை, தீயணைப்பு படையினர் அல்லது ஏற்கெனவே பாம்புகளை பிடிக்கும் பயிற்சிகளை பெற்றவர்களை வரவழைத்து அவர்கள் மூலமாகவே பாம்புகளைப் பிடிக்க வேண்டும். 

பாம்புகள் கடிக்கையில், அது என்ன பாம்பு என்பதை அறிந்து அதற்கேற்ற விஷ முறிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் பாம்புகளைப் பிடிப்பதற்கு கருவிகள் வந்துள்ளன. கையால் பாம்புகளைப் பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.

நாகன், கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் போன்ற விஷமுள்ள பாம்புகள் இருக்கின்றன. இவற்றில்  கண்ணாடி விரியன் அதிகமாகத் தென்படுவதாகக் கூறுகின்றனர்.  கண்ணாடி விரியன் ஆள்கள் முன்னே வர வர பின்வாங்கும். எந்தளவு பின்வாங்குகிறதோ, அந்தளவு வேகமாக பாயும். கண்ணாடி விரியன் பின்வாங்குவதைப் பார்த்தால், ஐந்தடி ஆறடி தள்ளி நிற்க வேண்டும்.

சூழலியல் செயற்பாட்டாளர் கோவை சதாசிவம்

பாம்புகளைப் பொறுத்தவரையில் அவை மனிதர்களின் சகவாசம் இல்லாமலே வாழ விரும்புகிறது. மனிதர்களுக்கு அருகில் இருக்க பாம்புகள் விரும்புவதில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக மனிதர்களின் வாழ்விடங்களை நோக்கி வர வேண்டியதாகிறது. பாம்புகளை கையாளத் தெரியாதவர்கள் பாம்புகளை நசுக்கும்போது, அது பயப்படும். அப்போது கடுமையாகத் தாக்கும் அல்லது கடிக்கும்.

பாம்புகளுக்கான இனப்பெருக்க காலத்தில் ஒரு வித திரவத்தை கசிய விட்டுக்கொண்டே இருக்கும். அவை துணையைத் தேடி வரும்போது அடித்து விடுவோம். அது தன்னுடைய உடலில் இருந்த இனப்பெருக்க திரவத்தை எங்கே அடித்தோமோ அங்கேயே கசிய விட்டுவிடும். இந்த வாசம் மற்றொரு பாம்புக்குச் சென்று, அந்தப் பாம்பு அங்கே வரும். இதை பழிவாங்க பாம்பு வருகிறது என நினைத்துக் கொள்கிறோம்.

கறையான் புற்றில் பாம்பிருப்பதாகக் கருதி, பலர் பால் ஊற்றுவார்கள். பாம்புக்கு பால் உணவல்ல. கறையான் புற்று பாம்புக்கான வாழ்விடமும் அல்ல. பாம்பு எப்போதாவது நீர் அருந்தும் பழக்கமுடையது.

பாம்பு மகுடிக்கு ஆடுவதாக கூறுவார்கள். பாம்புக்கு காதுகள் இல்லை. காதுகள் இல்லாதபோது இசை எப்படி கேட்கும். மகுடி ஊதுபவரை கவனித்து அதற்கேற்றாற்போல ஆடுமே தவிர, அவை இசைக்கு ஆடுவதில்லை. பாம்புகள் அதிர்வுகள் மூலமாகவே அதை  உணர்கிறது. 

நல்ல பார்வை பாம்புகளுக்கு கிடையாது. இரட்டை நாக்கால் காற்றில் வருகிற வாசத்தை வைத்து தன் இரையை பாம்புகள் தேடிக்கொள்ளும். எனவே, பாம்புகளிடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' என்று தெரிவித்தார்.

பாம்பு

பாம்புகள் `பொய்க் கடி’ நிறைய கடிக்கும். அதாவது சும்மா கடிக்கும். பாம்புகள் தன்னுடைய விஷ நொதியை செரிமானத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளும், அவை தன்னுடைய விஷத்தை விரயமாக்க நினைப்பதில்லை. இந்தப் பொய் கடியிலும், நிறைய பேர் பயந்து பாம்புகளை அடித்துவிடுவார்கள்.

பாம்புகள் இணக்கமாக நடந்துகொள்ளாது. ஆனால், பாம்புகளை பிடிக்க பழகிக்கொண்டால், குழந்தையைப் போல கைகளில் மாற்றி மாற்றி கையாளலாம். இவை எதிரில் இருப்பவர்களின் நடவடிக்கையைக் கவனிக்கும் தவிர மனித கைகளில் இருக்கிறோம் என்ற எந்த எண்ணமும் அவற்றுக்கு இருக்காது. 



from Latest news https://ift.tt/EAtaVqT

Post a Comment

0 Comments