நடிகராக இருந்த மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்.
இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். புது முகங்கள் நடித்துள்ள இப்படத்தில் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கார்த்தி, சிவகுமார், பாரதிராஜா, ஆர்.கே. செல்வமணி, சீமான், லிங்குசாமி என ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “ என் தம்பி மனோஜ் பாரதிராஜா ஆங்கில படங்களுக்கு இணையாக கதை சொல்லக் கூடியவன். இன்று வெற்றிமாறன், வெங்கட் பிரபு போல பெரிய இயக்குநராக இருந்திருக்க வேண்டியன். ஆனால் இயக்குநர் ஆகக்கூடிய கனவு அவனுக்கு சற்று தாமதமாக நடந்திருக்கிறது. தன் முதல் படத்தை 21 நாட்களில் எடுத்து முடித்து இருக்கிறான் மிகச் சிறப்பு. இசை மேதை இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவரைப் போல் இசையமைக்க இந்த உலகத்தில் வேறு எவரும் கிடையாது. எந்தச் சூழல் கொடுத்தாலும் அருமையாக இசையமைக்கக்கூடிய ஒரு மேதை இளையராஜா.
மாபெரும் வெளிநாட்டு இசையமைப்பாளர்கள் கூட அவருக்கு முன் தோற்றுப் போய் விடுவார்கள். அப்பேர்ப்பட்ட மாபெரும் மனிதர் என் தம்பியுடன் இணைந்தது மிக மகிழ்ச்சி. 'அப்பா படங்கள் எல்லாமே பாரு… ஆனால் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளாதே. மனோஜ் மாதிரி நம்மால் படம் பண்ண முடியவில்லை என்று உங்க அப்பா ஏங்கணும்’ இந்த தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம் என்று மனோஜ் பாரதிராஜாவை சீமான் வாழ்த்தினார்.
அதன்பிறகு பேசிய இயக்குநர் ஆர். கே செல்வமணி, “ மனோஜ் பாரதிராஜா நடிப்பை காட்டிலும் இயக்குநராக நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார். தமிழ்ப் படம் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகி ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. இன்று செய்திதாள்களில் வரும் அனைத்து படங்களின் பெயரும் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது.
மார்கழி திங்கள் அழகான தமிழ் டைட்டில். நமக்கு இணக்கமான ஒரு தலைப்பை பார்க்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது. என் படத்தில் இளையராஜா வேலை செய்யும்போது பாரதிராஜா சாருக்கும் அவருக்கும் கடுமையான சண்டை இருந்தது. ஆனால் அந்த சண்டையிலும் ஒரு நட்பு எனக்குத் தெரிந்தது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் இணைவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. பல பேரை இயக்குநராக்கிய பாரதிராஜா குடும்பத்தில் இருந்து இப்போ ஒரு இயக்குநர் வருகிறார். அவரை நாம் வாழ்த்துவோம்” என்றார்.
from Latest news https://ift.tt/ehdaF7I
0 Comments