நாட்டில் நிலக்கடலை விளைச்சல் அதிகமுள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்றாக விளங்குகிறது. நிலக்கடலை விளைந்துவிட்டால் அதனை சாப்பிட விலங்குகள் வருவது வழக்கம். ஆனால், குஜராத் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் பயிர்களை விலங்குகள் அழிக்காமல் இருக்க புதிய முறையை பின்பற்றி வருகிறார். குஜராத் மாநிலம், அம்ரெலி மாவட்டத்தில் உள்ள கட்சாலி என்ற என்ற கிராமத்தை சேர்ந்த விஹாபாய் மசூரியா என்ற விவசாயிக்கு வனப்பகுதியை ஒட்டியே நிலம் இருக்கிறது. இதில் பருத்தி, நிலக்கடலை, சோயாபீன்ஸ் பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறார்.
மசூரியாவிற்கு மொத்தம் 10 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் விளைவிக்கப்படும் நிலக்கடலை மற்றும் சோயாபீன்ஸ் பயிர்களை அருகிலுள்ள காட்டிலிருந்து இரவு நேரங்களில் வரும் மான்கள், காட்டுப் பன்றிகள் போன்ற விலங்குகள் சேதப்படுத்துகின்றன. இதைத் தடுக்க கம்பி வேலி அமைத்து பார்த்தார். ஆனால் அதையும் மீறி விலங்குகள் நுழைந்து சேதப்படுத்தியிருக்கின்றன. இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
வனத்துறை அதிகாரிகள் குறையை கேட்டுக்கொண்ட போதிலும் அதனை தடுக்க எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை. எனவே சொந்தமாக தானே முயற்சி செய்து பயிர்களை பாதுகாக்க மசூரியா களத்தில் இறங்கினார். விலங்குகளை தடுக்க மின் வேலி அமைத்தால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி அந்த முறையை பின்பற்றாமல் குறைந்த செலவில் அனைவரும் பாராட்டும் விதமாக ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறார். எண்ணெய் கேன்களின் இருபுறத்தையும் வெட்டி எடுத்துவிட்டு, அதில் ஒரு பேட்டரியை பொருத்தி சிறிய மின் விசிறி மற்றும் மின் விளக்கு ஒன்றை பொருத்தியுள்ளார்.
இரவு நேரங்களில் பேட்டரி மூலம் மின் விசிறி இயங்கும் போது மின் விளக்கு வெளிச்சம் அதில் பட்டு அனைத்து பகுதியிலும் பிரதிபலிக்கும். அந்த வெளிச்சத்திற்கு பயந்து விலங்குகள் விவசாய நிலத்திற்கு வராமல் திரும்பி சென்றுவிடுகின்றன. மெசூரியாவின் இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இப்போது நிலக்கடலையை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க இது ஒரு நிரந்தர தீர்வாக அமைந்துள்ளது. அவரை பின்பற்றி மற்ற விவசாயிகளும் தங்களது தோட்டத்தில் இதே முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி என்ற இடத்தில் கரும்புத் தோட்டத்திற்குள் குரங்குகள் நுழைந்து சேதப்படுத்தி வந்தன.
அதைத் தடுக்க கரடி போன்ற போன்ற ஆடையை வாங்கி பொம்மைக்கு அணிவித்து தோட்டத்தில் நிறுத்தி குரங்குகளை தடுத்து வந்தனர். ஆனால் கரடியின் ஆடையை வாங்க 4 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. குஜராத் விவசாயி உருவாக்கி இருக்கும் சாதனத்தின் விலை மிகவும் குறைவு என்பதால் வடமாநில விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
from Latest news https://ift.tt/Pnox9L1
0 Comments