கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது சுண்டுக்குழிப்பட்டி. எங்கெங்கும் வறட்சி முகாமிட்டிருக்கும் ஒரு பின்தங்கிய கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 36 வயது பெண் பானுமதி. கணவர் கைவிட்ட நிலையில், தன் பெற்றோர் மற்றும் 9 வயது மகனுடன் வசித்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு வரை, வாழவே வழியின்றி நிர்கதியாக நின்ற பானுமதியின் நிலைமை இப்போது கொஞ்சம் சரியாகியிருக்கிறது. கருணை உள்ளம் கொண்ட சிலர் உதவியுடன் 8 ஆடுகள், சிறு தொகை, இசையமைப்பாளர் இமான் உதவியில் ஆட்டுக்கொட்டகை என்று இவருக்கு உதவிகள் கிடைத்திருக்கின்றன. முள்காடாக கிடந்த வாழ்க்கையில் ஒத்தையடிப் பாதையாக இந்த உதவிகள் அவரை தெம்பூட்டியிருக்கின்றன. வீட்டுக்கு அருகில் இருக்கும் வயல்வெளிகளில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பானுமதியைச் சந்தித்தோம்.
"வறுமையான குடும்பம். அப்பா, அம்மா கூலி வேலைக்குப் போய்தான் என்னை வளர்த்தாங்க. பிறந்ததுல இருந்தே எனக்கு ரெண்டு கைககளும் மணிக்கட்டுக்குக் கீழே வளைந்து, கைகளால எந்த வேலையையும் செய்யமுடியாத நிலைமை. என்னோட பிறந்தவங்களுக்கு எல்லாம் எந்தப் பிரச்னையும் இல்ல நான் இப்படி பிறந்தாலும், எட்டாவது வரைக்கும் படிச்சேன். அதற்கு மேல் படிக்க வசதியில்ல. அதனால, வீட்டுலேயே இருந்துட்டேன்.
குடும்ப கஷ்டத்தைப் போக்க வயல் வேலைக்குப் போனாலும், 'உன்னால வேலை பார்க்க முடியாது'னு யாருமே வேலை தரமாட்டாங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி எங்க தாய்மாமா இறந்துபோய்ட்டார். அப்போ துக்கத்துக்கு வந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி, என்னைப் பார்த்ததும் என்கிட்ட ஆதரவா பேசினார். மறுநாளே, 'நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?'னு கேட்டார். 'வீட்டுல ஒத்துக்கமாட்டாங்க'னு சொன்னாலும், அவர் விடலை. ஏதோதோ சொல்லி என்னை சம்மதிக்க வெச்சு, கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போய் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார்.
எங்க அம்மா, அப்பா என்னை காணாமல் தேடி, கடைசியில கேரளாவுல இருப்பதை தெரிஞ்சுக்கிட்டு, எங்களை வந்து அழைச்சுட்டு வந்தாங்க. அடுத்த வருஷம் எனக்கு மகன் மணிகண்டன் பிறந்தான்.
எனக்கு ஒவ்வொரு மாசமும் ஊனமுற்றோர் தொகை வரும். என் வீட்டுக்காரர், அதைக் கேட்டு வாங்கி குடிப்பார். ரெண்டு வருஷமா என்னை டார்ச்சர் பண்ணி அந்தப் பணத்தை வாங்கிக் குடிச்சார். அது என் மனசுக்கு ஒப்புக்கல. என் வாழ்க்கையும் ஊனமா போச்சுனு நினைச்சேன்.
ஒரு கட்டத்துல பணம் தரலைன்னு பயங்கரமா அடிச்சார். முள்ளுக் குச்சியால உடம்பு முழுக்க அடிச்சு என்னை ரணமாக்கினார். நான் அப்பவும் பணம் தரலை. அதனால, அவர் என்னையும் புள்ளையையும் விட்டுட்டுப் போயிட்டார். தொடர்ந்து, ரேஷன் அரிசியிலும், என் அம்மா, அப்பாவோட சொற்ப சம்பாத்தியத்திலும் வயித்துப்பாட்டை பார்த்துக்கிட்டோம்.
ஆரம்பத்துல நூறு நாள் வேலைக்குப் போனேன். ஆனா, பிறகு என்னை அந்த வேலைக்கும் கூப்புடல. பணமும் ஏறல. ஏன்னு கேட்டா, சரியான காரணமும் சொல்லல. இந்நிலையில, எங்க அம்மா, அப்பாவுக்கும் வயசானதால, முன்னமாதிரி வேலை பார்க்க முடியல. இதனால, கடந்த நாலு வருஷமா காசு, பணத்துக்கு வழியில்லாம கஷ்டஜீவனம் நடத்தினோம்.
சில மாசத்துக்கு முன்னால, 'நூறு நாள் வேலை இல்லைன்னா பால்வாடியில சமையல்காரம்மா வேலை, ஆஸ்பத்திரியில மருந்து, சீட்டு கொடுக்கிற வேலைனு ஏதாச்சும் கொடுங்க'னு கரூர் மாவட்ட ஆட்சியரைப் பார்த்து மனுக் கொடுத்தேன். அவர், 'நூறு நாள் வேலைக்குப் பரிந்துரை பண்ணுறேன்'னு சொல்லி அனுப்பினார். ஆனா, இதுவரைக்கும் என்னைக் கூப்புடலை.
இன்னொரு பக்கம், ஒரு அமைப்பைச் சேர்ந்தவங்க, எங்க ஊரைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமினு பலரும் சேர்ந்து என்னோட கஷ்டத்தை பார்த்துட்டு, எனக்கு நாலு ஆடு, 4 ஆட்டுக்குட்டினு வாங்கிக் கொடுத்தாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சவங்ககிட்டயும் சொல்லி, ரூ. 30,000 வரை பணமும் சேகரிச்சுக் கொடுத்தாங்க. அதை என் பையன் பேர்ல டெபாசிட் பண்ணினேன்.
இந்த நிலையில, என் கஷ்டம் பத்தி இசையமைப்பாளர் இமான் சாரோட கவனத்துக்கும் போயிருக்கு. அவர் அலுவலகத்துல இருந்து உமானு ஒரு மேடம் என்கிட்ட பேசினாங்க. முதல்ல, 'சென்னைக்குக் குடும்பத்தோட வரமுடியுமா? இங்கேயே உங்களுக்கு ஒரு வேலை போட்டுத் தர்றோம்’னு சொன்னாங்க. ஆனா என்னால சென்னைக்கு எல்லாம் போக முடியாதே. 'சரி, கரூர்ல அல்லது உங்க சொந்த ஊர்ல காய்கறிக் கடை வெச்சு தரவானு இமான் சார் கேட்கிறார்’னு சொன்னாங்க.
ஆனா, என்னால பொருள்களை தூக்கிட்டுப் போகமுடியாதுங்கிறதை எடுத்துச் சொன்னேன். அப்புறம், ஆடுகள் வாங்கிக் கொடுத்து, கொட்டகையும் போட்டுக் கொடுக்கிறதா சொன்னாங்க. ஆனா அதுக்குள்ள கரூரில் உள்ள சமூக நல அமைப்பைச் சேர்ந்தவங்க எனக்கு ஆடுகள் வாங்கிக் கொடுத்ததால, இமான் சார் ஆட்டுக்கொட்டகை போட்டுக் கொடுக்கறதா சொன்னார். உமா மேடம் கரூருக்கு வந்து, மூணு நாள் தங்கினாங்க. ஆட்களை வைத்து, ஆடுகளை அடைச்சு வைக்க ஏதுவா கொட்டகை போட்டுக் கொடுத்தாங்க.
உமா மேடத்தோட செல்லில் வீடியோ காலில் வந்த இமான் சார், ’எதுக்கும் கலங்காதீங்க. என்னை உங்க அண்ணனா நெனச்சுக்கோங்க. எந்த உதவி வேணும்னாலும் என்னைக் கூப்பிடுங்க. ஆடுகளை வளர்த்து எட்டை பதினாறா, பதினாறை முப்பத்தி ரெண்டா பெருக்கி, அதை வித்து அதுல வர்ற வருமானத்தை வெச்சு, உங்க பையனை நல்லா படிக்க வைங்க. அவன் படிப்பு விசயமாக உதவி தேவைன்னா உடனே சொல்லுங்க. அவன் படிச்சு முடிச்சதும், அவனுக்கு நல்ல வேலை வாங்கித் தரவும் நானாச்சு'’னு சொன்னார். அதைக் கேட்டதும், எனக்கு பொலபொலனு கண்ணீர் வந்துட்டு.
அதைப் பார்த்த இமான் சார், 'இனி தைரியமா இருங்க. நாங்க எல்லாம் உங்க கூட இருக்கோம்’னு சொல்லி, எதிர்காலத்தை நெனைச்சு பயந்து கிடந்த எனக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்தார்.
எட்டு ஆடுகள் இருந்துச்சு. இப்போ ஒரு ஆடு ஒரு குட்டி போட்டிருக்கு. இன்னும் மூணு ஆடுகள் சினையா நிக்குது. தினமும் உற்சாகமா ஆடுகளை மேய்க்க ஓட்டிக்கிட்டுப் போகிறேன். இப்போ இந்த வாழ்க்கை எனக்கு பாரமா தெரியலை சார்.." - சொல்லும்போது முகமும் மலர்கிறது பானுமதிக்கு. அவர் நம்பிக்கையின் வெளிச்சத்தால் அவர் பாதையில் இருந்த இருள் விலகியுள்ளது.
from Latest news https://ift.tt/DuK4apt
0 Comments