உப்பைத் தவிர்த்தால் உயர் ரத்த அழுத்தம் சரியாகுமா?கட்டுப்படுத்தும் வழிகள்: மருத்துவ விளக்கம்!

ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம் தொற்றாநோய்களில் மிகவும் ஆபத்தானது. இது அசாதாரண அளவை எட்டும்போது இதயத்தை பாதித்து உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஆனால், அந்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை.

உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் முதல் அதைக் கட்டுப் படுத்தும் வழிகள் வரை அனைத்தையும் விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை

அறிகுறிகள்

தலைவலி, பார்வைக் கோளாறு, மயக்கம், தலைச்சுற்றல், நெஞ்சுவலி, யாரோ தள்ளிவிடுவது போன்ற உணர்வு, அதிகமான இதயத்துடிப்பை உணர்வது. இப்படி உயர் ரத்த அழுத்தமானது பாதிக்கப்பட்ட உறுப்புக்கேற்றபடி அதன் அறிகுறியை வெளிப்படுத்தும்.

மூளையும் இதயமும் பாதிக்கப்பட்டால் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் வரும். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் கால் வீக்கம், சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் வரும். சருமம் பாதிக்கப்பட்டால் சருமத்தில் மாற்றங்களை உணரலாம்.

உயர் ரத்த அழுத்தம்... 4 விஷயங்களில் கவனம்...

1. டயட்

டயட் என்று வரும்போது ஆரோக்கியமான உணவுகளாக, உப்பு குறைந்த உணவுகளாக இருக்க வேண்டியது அவசியம். நார்ச்சத்துள்ள உணவுகள் மிக மிக அவசியம். சில உணவுகளில் மறைமுகமாக அதிக அளவு உப்பு சேர்க்கப்படும்.

உதாரணத்துக்கு சாஸ், சிப்ஸ், கருவாடு, ஊறுகாய் போன்றவை. இவற்றைத் தவிர்ப்பதுதான் ரத்த அழுத்த பாதிப்புக்கு நல்லது. இந்துப்பு ஆரோக்கியமானது என நினைத்து இன்று பலரும் அதைச் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் 98 சதவிகிதம் சோடியம் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். அந்த வகையில் அதுவும் சாதாரண உப்புக்கு இணையானதுதான்.

உடற்பயிற்சி

2. உடற்பயிற்சி

தினமும் பல் துலக்குவது, குளிப்பது போல உடற்பயிற்சிகள் செய்வதையும் தினசரி வாடிக்கையாக மாற்ற வேண்டும். சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கத்தை குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும். அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் உதவும். ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். உடற்பயிற்சிகள், ஃபீல் குட் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கும். அதனால் நம் ஸ்ட்ரெஸ் அளவும் குறையும். யோகா, நீச்சல், கார்டியோ பயிற்சிகள் போன்றவை பெரிதும் உதவும்.

3. தூக்கம்

தூக்கம் என்பது அத்தனை வாழ்வியல் நோய்களுக்கும் இன்று அடிப்படையான காரணமாக மாறி வருகிறது. எனவே, தினமும் 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம் இருக்க வேண்டும். அதுவும் இரவு 10 மணிக்கு உறங்கி, 6 மணிக்கு எழுந்திருக்கும் வழக்கமே ஆரோக்கியமானது. நள்ளிரவு தூங்கி, பகலில் விழிப்பது ஆரோக்கியக் கேடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தூக்கம்

4. ஸ்ட்ரெஸ்

ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தை இன்று பிறந்த குழந்தையைக்கூட பாதிக்கிற அளவுக்கு எல்லோருக்கும் இருக்கிறது. ஸ்ட்ரெஸ் அதிகமிருக்கும்போது உங்களுடைய ரத்த அழுத்த அளவை செக் செய்து பாருங்கள்... அது தாறுமாறாகக் காட்டும். அதுவே ஸ்ட்ரெஸ் இல்லாதபோது பிபி அளவு நார்மலாக இருப்பதையும் பார்க்கலாம்.

சிலருக்கு `க்ரானிக் ஸ்ட்ரெஸ்' என்கிற பிரச்னை இருக்கும். அதாவது, தீவிர ஸ்ட்ரெஸ் காரணமாக அவர்களுக்கு எப்போதுமே ரத்த அழுத்தம் அதிகமாகவே இருக்கும். பணியில் இருக்கும்போது உச்சத்தில் இருக்கும் ஸ்ட்ரெஸ், ரிட்டையர் ஆனதும் தானாகக் குறைவதையும் கவனிக்கலாம். எனவே, ஸட்ரெஸ்ஸை குறைக்கும் வழிகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வப்போது ரத்த அழுத்தத்தில் தாறுமாறான ஏற்ற, இறக்கங்கள் இருப்பது என்பது சரியான அறிகுறியல்ல. அடிக்கடி ஸ்ட்ரெஸ் ஆவதும், அப்போதெல்லாம் ரத்த அழுத்தம் அதிகரிப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

இவையெல்லாமும் முக்கியம்...

இவை, தவிர புகைப்பழக்கம், மது அருந்தும் பழக்கம் போன்றவை அறவே நிறுத்தப்பட வேண்டும். இவை இரண்டுமே ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடியவை என்பதால் இவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

உங்கள் உயரத்துக்கேற்ற எடை இருக்கிறீர்களா என்பது முக்கியம். பி.எம்.ஐ அளவு சரியாக இருக்கும்பட்சத்தில் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும்.

ரத்த அழுத்தம்

பரம்பரையாக பாதிக்குமா ஹை பிபி?

பரம்பரையாகவும் உயர் ரத்த அழுத்த பாதிப்பு தொடரலாம். ஆனால், அதற்கான சாத்தியம் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே. `என் அம்மா-அப்பாவுக்கு பிபி இருக்கு.... அதனால எனக்கும் வந்திருக்கு... ஒண்ணும் பண்ண முடியாது' என நினைக்க வேண்டாம். நம் வாழ்வியல் முறைகளின் மூலம் ரத்த அழுத்த அளவை சரியாக வைத்துக்கொள்ள முடியும்.

எப்படி உறுதிசெய்வது?

இரண்டு, மூன்று முறை ரத்த அழுத்த அளவை செக் செய்து பார்ப்பார்கள் மருத்துவர்கள். தலைவலித்தாலோ, முந்தைய நாள் இரவு சரியாகத் தூங்காவிட்டாலோகூட பிபி அதிகரிக்கும். அதை வைத்து உடனே பிபிக்கான மருந்துகளை ஆரம்பிக்கக் கூடாது.

உயர் ரத்த அழுத்தம்

ஒரு வாரம் காத்திருந்துவிட்டு, மீண்டும் டெஸ்ட் செய்து பார்த்துதான் முடிவு செய்யப்படும். அதுவே பிபி அளவு 170-க்கு மேல் இருந்தால் ஒன்றிரண்டு முறை பார்த்துவிட்டு உடனே மருத்துவ ஆலோசனைக்கு விரைய வேண்டும். 170 - 80 என ஒருமுறை வந்தாலே அது மிக அதிகம் என்பதால் உடனடி சிகிச்சை தேவைப்படும். மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

- ராஜலட்சுமி



from Latest news https://ift.tt/0LS6YHK

Post a Comment

0 Comments