கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, சமீப காலமாக சூடு பிடித்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்த வழக்கினை மீண்டும் பரபரப்பாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் அளித்து வரும் பேட்டிகளால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு சவாலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் தனபாலின் மனைவி செந்தாமரைச் செல்வி சேலம் மாவட்ட எஸ்.பி யிடம் புகார் ஒன்று நேற்று அளித்துள்ளார். புகார் அளித்துவிட்டு வெளியே வந்த அவர் ஜூனியர் விகடனுக்கு ஒரு பிரத்தியோக பேட்டி கொடுத்தார்.
அதில், "தனது கணவரால் என் உயிருக்கும், எனது பிள்ளைகள் உயிருக்கும் பாதிப்பு உள்ளது. இவர் சிறையில் இருந்து வெளியில் வந்ததிலிருந்து பலரின் தூண்டுதலின் பேரில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். இதனால் அவருக்கு லாபமாக இருந்தாலும் கூட இதனால் பல பிரச்னைகள் மீண்டும் எங்களை வந்து சேரும்.
ஆகையால் அவரை கொடநாடு தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என்று கூறி இருந்தேன். ஆனால் தேவையில்லாத பொய்களை கூட்டியும், குறைத்தும் பேசி வருகிறார். இவர் சிறையில் இருந்த போது ஓபிஎஸ் தரப்பில் இருந்து குருமூர்த்தி என்பவர் நேரில் சந்திக்க வந்திருந்தார். அவர், `அண்ணனிடம் எல்லாம் பேசி விட்டேன் உங்களுக்கு எல்லா உதவியும் செய்து கொடுக்க கூறியுள்ளார்’ என்று சொன்னார்.
தற்போது எனது கணவர் தனபால் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் கொடநாடு தொடர்பாக பேசி வருகிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் மட்டுமே அதில் உண்மை கொஞ்சம் கூட இல்லை" என்று போட்டு உடைத்தார். இந்த நிலையில், மனைவி தன் மீது புகார் கொடுத்துள்ளார் என்று தெரிந்த அடுத்த நிமிடமே தானும் பத்திரிகையாளர்களை சந்திக்க போவதாக கூறினார்.
பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “எனக்கும், என் மனைவிக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. நான் பேட்டி கொடுப்பதால் எனது மனைவிக்கும், என் குழந்தைகளுக்கும் ஆபத்து வந்துவிடும் என்று அவ்வாறு கூறியுள்ளார். திருமணமான 23 ஆண்டுகளாக எந்த பிரச்னையும், கருத்து வேறுபாடும் கிடையாது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தூண்டுதல்பேரில், தாரமங்கலம் ஒன்றியம், கோனகபாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மோகன் என்பவர் எனது மனைவியிடம் பேசி, புகார் கொடுக்க வைத்து, கோவையில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் முன்பு ஆஜராகாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இது எல்லாம் கருத்தில் கொண்டு சி.பி.சி.ஐ.டி உடனடியாக என்னை அழைத்து விசாரிக்க வேண்டும். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நாள்கள் கடந்து போகபோக, நீர்த்து போய் வருகிறது. அதுமட்டுமல்லாது எடப்பாடி பழனிசாமி கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க புள்ளி ஒருவரை வைத்து பேரம் பேசுவதற்கு வந்தார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. எனக்கு கொடநாடு வழக்கில் உண்மை வெளிவர வேண்டும்” என்றார்.
from Latest news https://ift.tt/PIXVazk
0 Comments