இந்திய அணியின் கேப்டனாக இருந்து பல வரலாற்றுச் சாதனைகளை செய்து காட்டிய மகேந்திர சிங் தோனி, முதன்முதலாக இந்திய அணிக்கு கேப்டனாக களமிறங்கிய நாள் இது.
இதே நாளில் 2007 ஆம் ஆண்டில் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்தான் தோனி கேப்டனாக முன் நின்று இந்திய அணியை வழிநடத்தினார். ஒரு பெரும் சகாப்தத்தையே நிகழ்த்தி இன்னும் ஓய்வு பெறாமல் ஓடிக்கொண்டிருக்கும் தோனியின் கேப்டன்சியைப் பற்றிய சில முக்கியமான அம்சங்கள் இங்கே...
*செப்டம்பர் 13, 2007 இல் நடந்திருக்க வேண்டிய ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டிதான் கேப்டனாக தோனிக்கு முதல் போட்டியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு முழுமையாக தடைப்பட்டது. அதனால்தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி கேப்டன் தோனிக்கு முதல் போட்டி ஆகிப் போனது.
*பாகிஸ்தானுக்கு எதிரான அந்தப் போட்டி பயங்கர சுவாரஸ்யமாகச் சென்றிருக்கும். போட்டி டை ஆனதால் பவுல் அவுட் (Bowl Out) முறைக்கு ஆட்டம் சென்றிருந்தது. பாகிஸ்தான் அணி இப்படி ஒரு விஷயத்திற்கு தயாராகவே இருந்திருக்காது. ஆனால், முதல் போட்டியாயினும் தோனி தனது அணியை பவுல் அவுட் (Bowl Out) முறைக்குக் கச்சிதமாகத் தயார்ப்படுத்திக் கொண்டு வந்திருந்தார்.
* தோனியை ஒரு கூலான கேப்டனாகத்தான் அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால், அமைதியாக இருந்துகொண்டே பல அழுத்தமான காரியங்களைச் செய்திருக்கிறார். கிரிக்கெட் உலகின் தாதா ஆஸ்திரேலிய அணி. அவர்களை வீழ்த்துவது பல அணிகளுக்கும் குதிரைக் கொம்புதான். 2007-08 காலத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அப்போது இந்திய அணி வீரர்கள் யாரும் கத்திக் கூச்சலிட்டுக் கொண்டாடாமல் இயல்பாக இருக்க வேண்டும் என தோனி கட்டளையிட்டிருக்கிறார். அதாவது, உங்களை வீழ்த்துவது எங்களுக்கு ஒன்றும் சாதனையல்ல, அது ஒரு வழக்கமான விஷயமாகத்தான் இனி இருக்கப் போகிறது என்பதை உணர்த்தவே தோனி இப்படி செய்திருக்கிறார்.
*2007 காலக்கட்டத்திலேயே 2011 உலகக்கோப்பையை மனதில் வைத்து தோனி திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தார். எந்தெந்த வீரர்கள் தேவை யாரெல்லாம் தேவையில்லை என்பதை அப்போதே முடிவு செய்து அதற்கேற்ற வகையில் காய் நகர்த்த ஆரம்பித்தார். விளைவு, 2011-ல் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. 2007 டி20, 2011 ஓடிஐ, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி கோப்பைகளை இந்திய அணி தொடர்ச்சியாக அள்ளிக் குவித்தது தோனியின் நீண்டகாலத் திட்டமிடல்களால்தான்.
*இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியின் போது இயான் பெல் உணவு இடைவேளை என தவறாக நினைத்து க்ரீஸை விட்டு வெளியே ஓடிவிடுவார். இந்திய வீரர்கள் அவரை ரன் அவுட் ஆக்கிவிடுவார்கள். அம்பயரும் அவுட் கொடுக்க இங்கிலாந்து அணியே கடும் அதிருப்தியானது. உடனே, கொஞ்ச நேரத்திலேயே அந்த ரன் அவுட் அப்பீலை தோனி வாபஸ் வாங்கிக் கொள்வார். இயான் பெல் மீண்டும் பேட்டிங் ஆட வந்துவிடுவார். 'ஸ்பிரிட் ஆப் தி கேம்' என்பதற்கு உதாரணமாக இந்தச் சம்பவம் பலராலும் குறிப்பிடப்படும்.
* 'ரோஹித் இப்படி ஒரு சிறந்த வீரராக இருப்பதற்கு தோனிதான் மிக முக்கிய காரணம்.' என கவுதம் கம்பீர் சமீபத்தில் பேசியிருந்தார். ரோஹித் மட்டுமில்லை. ரெய்னா, இஷாந்த் சர்மா, ஆர்.பி.சிங், அஷ்வின், குல்தீப், சஹால், கோலி என பல வீரர்களும் தோனியின் தலைமையில்தான் நீடித்த வாய்ப்புகளைப் பெற்று தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டனர்.
* தோனியின் அறை இளம் வீரர்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் என்பதுதான் தோனியின் கேப்டன்சியைப் புகழ்ந்து பேசும் பலரும் கூறும் கருத்து. இது முழுக்க முழுக்க உண்மைதான். அதனால்தான் வெறும் 20 வயதே ஆகும் பதிரனாவால் சிஎஸ்கே அணியில் தோனியுடன் வெகு இயல்பாகப் பழகித் தயக்கமின்றி ஆட முடிகிறது. இன்னமும் இளம் வீரர்கள் ஆலோசனைக்காகத் தேடிச் செல்லும் முதல் வீரராக தோனிதான் இருக்கிறார்.
*தோனிக்கு முன்பும் சரி பின்பும் சரி, இந்திய அணியின் கேப்டன் ஒருவர் அந்தப் பதவியிலிருந்து விலகும் நிகழ்வு கொஞ்சம் கரடு முரடாகத்தான் நடந்திருக்கிறது. ஆனால், தோனி அதற்கெல்லாம் வழி வைக்கவே இல்லை. தனக்குப் பிறகான ஒரு அணியை உருவாக்கிவிட்டு தக்க சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து தாமாகவே முழு மரியாதையுடன் விலகிக்கொண்டார்.
*இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்னமும் சென்னை அணிக்கு தோனிதான் கேப்டன். மற்ற அணிகளெல்லாம் பல கேப்டன்களை பார்த்துவிட்ட நிலையில், சென்னை மட்டும் தோனியையே முழுமையாக நம்பி களமிறங்கியது. மைதானங்கள் அத்தனையும் தோனிக்காக மட்டுமே முழுமையாக நிரம்பியது. அத்தனை பேரின் நம்பிக்கையையும் காப்பாற்றும் வகையில் 42 வயதில் சென்னை அணிக்காக கோப்பையை வென்றுக் கொடுத்தார் தோனி.
*'வானத்தை நோக்காதீர்கள். கடவுள் வந்து உங்களைக் காப்பாற்றப் போவதில்லை. நீங்கள்தான் எதாவது செய்ய வேண்டும்.' 'முடிவுகளின் மீது கவனம் செலுத்தாமல் செயல்பாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். நீங்கள் விரும்பும் முடிவு தானாகவே கிடைக்கும்.' இவையெல்லாம் ஒரு அணியை வழிநடத்துவதற்காக தோனி விட்டுச் சென்றிருக்கும் இலக்கணங்கள்.
*அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் தோனி களமிறங்கப் போகிறார். அதே மிடுக்கோடு அதே கர்ஜனையோடு அதே கேப்டனாகவே வருவார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
from Latest news https://ift.tt/mjob30f
0 Comments