Doctor Vikatan: காலையில் காபி, டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவது தவறா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் எல்லோருக்கும் காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயுடன் பிஸ்கட்டோ, ரஸ்க்கோ சாப்பிடுவது வழக்கம். ஆனால் இது மிகவும் தவறு என்கிறாள் என் தோழி. பல வருடங்களாக இப்படியே பழகிவிட்டோம். வெறும் வயிற்றில் டீ, காபி குடிக்க வேண்டாம் என்பதுதான் காரணம். டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவதில் அப்படி என்னதான் பிரச்னை... இதற்கு வேறு மாற்று என்ன?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

ஷைனி சுரேந்திரன்

காலையில் எழுந்ததும் காபி அல்லது டீயுடன் இரண்டு பிஸ்கட்டுகளை முக்கிச் சாப்பிடும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்கக்கூடாது, அதனால்தான் டீ, காபியுடன் பிஸ்கட்டோ, பன்னோ சாப்பிடுவதாக அதற்கொரு விளக்கமும் சொல்வார்கள். முதலில் இந்த காம்பினேஷனில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் குடிக்கிற காபி அல்லது டீயில் பால், டிகாக்ஷன் மற்றும் சர்க்கரை சேர்க்கிறீர்கள். அதில் நனைத்துச் சாப்பிடுகிற பிஸ்கட்டில் மைதா, சர்க்கரை, பாமாயில் அல்லது மார்ஜரின் எனப்படும் கொழுப்பு அல்லது வனஸ்பதி சேர்க்கப்படும். இவற்றில் எதிலுமே உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பொருள்கள் இல்லை. பேக்கரி பொருள்கள் எந்தளவுக்கு ஆரோக்கியமற்றவை என்பதை புதிதாகச் சொல்லத் தேவையில்லை.

காலையில் எழுந்ததும் வெறும்வயிற்றில் வேறு என்னதான் சாப்பிடுவது என்ற கேள்வி பலருக்கு உண்டு. சீரகம் சேர்த்துக் கொதிக்கவைத்த தண்ணீர் குடிக்கலாம். சீரகம், ஓமம், பெருஞ்சீரகம் சேர்த்த தண்ணீரும் நல்லது. ஊறவைத்த பாதாம் அல்லது வால்நட்ஸ், இரண்டு பேரீச்சம்பழம்கூட எடுத்துக்கொள்ளலாம்.

சீரகத் தண்ணீர்

டீ, காபியோடு ஏதாவது சாப்பிட்டால்தான் ஆச்சு... அப்படியே பழகிவிட்டோம் என்று சொல்பவர்கள், நெல் பொரி அல்லது அரிசிப் பொரி சாப்பிடலாம். அல்லது நீங்களே வீட்டில் ஆரோக்கியமான முறையில் சிறுதானிய மாவு, நாட்டுச்சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கிற பிஸ்கட் கூட ஓகே. மற்றபடி காலையில் வெறும்வயிற்றில் பிஸ்கட், பன், பிரெட், ரஸ்க் என எதையும் சாப்பிடாதீர்கள். அப்படிச் சாப்பிடுவதன் மூலம் அன்றைய பொழுதையே ஆரோக்கியமற்றதாக ஆரம்பிக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/v2OqD5I

Post a Comment

0 Comments