Doctor Vikatan: வெயிட்லாஸுக்கு உதவுமா வெஜிடபுள் ஜூஸ்?

Doctor Vikatan: நான் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். தினமும் ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ் குடித்தால் வெயிட் லாஸ் எளிதாகும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? வாழைத்தண்டு ஜூஸ், சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்

வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது. நமக்கு மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கும் சில காய்கறிகளில் மட்டும் ஜூஸ் செய்து குடிக்கலாம். அப்படிப் பார்த்தால் வாழைத்தண்டும், வெள்ளைப் பூசணியும் ஜூஸ் செய்து குடிக்க ஏற்றவை.

இவை இரண்டையும் ஒருநாள் விட்டு ஒருநாள் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம். வாழைத்தண்டை பொடியாக நறுக்கிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும். வாழைத்தண்டிலேயே நிறைய நீர்ச்சத்து இருக்கும் என்பதால் அதிக தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அரைத்தெடுத்த ஜூஸில் சிறிது சீரகத்தூள், சிறிது மிளகுத்தூள், சிறிது கல் உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

இதேபோல வெள்ளைப் பூசணியை ஜூஸ் செய்து குடிக்கலாம். இவற்றை வெறும் வயிற்றில் காலையில் குடிப்பது சிறந்தது. குடித்து முடித்த அடுத்த ஒரு மணி நேரத்துக்கு வேறெதுவும் சாப்பிடக்கூடாது. நீங்கள் கேட்டிருந்தபடி சுரைக்காய் ஜூஸ் குடிப்பதை மட்டும் தவிர்க்கவும்.

சுரைக்காய் ஜூஸில் உள்ள கசப்புத்தன்மை காரணமாக வயிறு மற்றும் குடல்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தவர்கள் பற்றிக்கூட கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே அதைத் தவிர்க்கவும்.

நெல்லிக்காய்!

நெல்லிக்காய், புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து அரைத்த ஜூஸும் குடிக்கலாம். காய்கறி ஜூஸ் நல்லது என்ற எண்ணத்தில் எல்லாக் காய்கறிகளிலும் ஜூஸ் செய்து குடிக்கக்கூடாது. எனவே மேற்குறிப்பிட்ட மூன்று ஜூஸ் மட்டும் குடித்துப் பார்த்து உங்கள் உடலுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்று கவனியுங்கள். ஏற்றுக்கொண்டால் தொடரலாம்.

கூடவே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்களையும் பின்பற்றினால் நிச்சயம் எடைக்குறைப்பு முயற்சி உங்களுக்கு வெற்றியைத் தரும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/jYckdQX

Post a Comment

0 Comments