'மங்கா' (Manga) காமிக்ஸில் கிராபிக் நாவலாக முதன் முதலில் வெளியானது 'ஒன் பீஸ்' (One Piece). நாளடைவில் அது அனிமி தொடராகவும் வெளிவந்தது. 1000-க்கும் மேற்பட்ட எபிசோடுகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. இது ஜப்பானில் அதிகப்படியான வரவேற்பையும் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 'ஒன் பீஸ்' தற்போது லைவ் ஆக்ஷன் வெப் சீரிஸாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.
மொத்தம் எட்டு எபிசோடுகள் கிட்டத்தட்ட எட்டு மணிநேர கன்டென்ட், உண்மையில் அத்தனை நேரம் ஒதுக்கிப் பார்ப்பதற்கு ஏற்றவாறு இருக்கிறதா? இந்த வருடத்தில் நெட்பிளிக்ஸின் சிறந்த வெப் சீரிஸ்களில் ஒன்று என்று புகழப்படும் இது, நிஜமாகவே அந்தப் பாராட்டுக்கு நியாயம் சேர்க்கிறதா? விரிவாகப் பார்ப்போம்.
கடற்கொள்ளையர்களில் சிறந்து விளங்கும் கோல்டு ரோஜர் அரசாங்கத்தால் தண்டனைக்கு உட்பட்டுக் கொல்லப்படுகிறார். அவர் இறப்பதற்கு முன் தான் கொள்ளையடித்த பொருள்களை மறைத்து வைத்திருக்கும் இடத்தைக் குறிப்பிடுகிறார். அதுதான் 'ஒன் பீஸ்'. அந்த ஒன் பீஸைத் தேடிப் பல கடற்கொள்ளையர்கள் புறப்படுகிறார்கள். அதில் ஒருவன்தான் மங்கி டி லூஃபி.
சிறு வயதிலிருந்தே தான் ஒரு பெரிய கடற்கொள்ளையனாக வேண்டும் என ஆசைப்பட்டவன், தன் பயணத்தைத் தொடங்குகிறான். பயணத்தில் தனக்கென ஒரு குழுவையும் சேர்த்துக் கொள்கிறான் லூஃபி. அக்குழுவின் பெயர் 'ஸ்ட்ரா ஹேட் பைரேட்ஸ்' (Straw Hat Pirates). இவர்கள் நிகழ்த்தும் சாகசங்கள்தான் இந்த ஃபேன்டஸி வெப் சீரிஸின் கதைக்களம்.
சிறுவயதில் 'டெவில் பழத்தை' சாப்பிட்டதால் ரப்பர் தன்மை அடைந்து மாற்றம் பெற்றுவிடுகிறான் மங்கி டி லூஃபி. இந்த விநோத சக்தியுடன் அவன் செய்யும் சாகசங்கள் ஒரு புறம் சுவாரஸ்யம் என்றால், மற்றொருபுறம், அவன் தன் வழியில் சந்திக்கும் கடற்கொள்ளையர்களின் கதாபாத்திர வடிவமைப்புகளும் ஈர்க்கும்படி அமைந்திருக்கின்றன. மங்கி டி லூஃபி, தன் சாகச காட்சிகளில் லாஜிக்குகளை மறக்கடித்து பார்வையாளர்களை ரசிக்கச் செய்கிறான். இயான் மெக் ஷேனின் வாய்ஸ் ஓவரும் இந்தக் கதைக்குச் சரியான பலம் சேர்த்திருக்கிறது.
காமெடிக்குப் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக நகர்கிற திரைக்கதை பல்வேறு அடுக்குகளுடன் அடர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு எபிசோடும் ஐம்பது நிமிடங்களுக்கு மேல் இருந்தாலும் சிறிதளவுகூட அயர்ச்சியின்றி பெரிதாக யோசிக்க விடாமல் சரியான வேகத்தில் பயணிக்கிறது. ஒவ்வொரு எபிசோடு முடியும் வேளையிலும் புதிய கதாபாத்திரங்களுக்கு லீட் கொடுத்துத் 'தொடரும்' போட்ட விதம் அடுத்த எபிசோடு குறித்த ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
அதேபோல, `ஸ்ட்ரா ஹேட் பைரேட்ஸ்' குழுவிலுள்ள ஒவ்வொருவருக்கும் எழுதப்பட்ட பிளாஷ்பேக் கதைகள் அந்தந்த கதாபாத்திரத்தின் தன்மைகளை நமக்கு அட்டகாசமாகப் புரிய வைத்து விடுகின்றன. அந்த வகையில் மேட் ஓவன்ஸ் மற்றும் ஸ்டீவன் மெய்டாவின் ஆக்கம் பாராட்டுகளைப் பெறுகிறது.
கடற்கொள்ளையர்களுடன் கடலில் பயணிக்க வைத்து பார்வையாளர்களின் மனதைக் கொள்ளை கொள்கிறது ஒளிப்பதிவு குழு. கமெர்ஷியல் அதிரடியாகவும் இல்லாமல், அதீத கலை தன்மையுடனும் இல்லாமல், ஜனரஞ்சகமான படக்கோர்வைக்கு உழைத்திருக்கிறது படத்தொகுப்பு குழு. இந்த வெப் சீரிஸ் சோர்வாகாமல் நகர்வதற்குத் திரைக்கதை தாண்டி இந்தத் தொழில்நுட்பக் குழுவுக்குமே முக்கியப் பங்கு உண்டு.
ஒளிப்பதிவு தாண்டி, படத்தின் டி.ஐ கலர்கள் அனைத்துமே ஃபேன்டஸி மீட்டரில் கச்சிதமாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, கடலும் கடல் சார்ந்த இடங்களும் அச்சு அசலாகத் திரையில் உயிர்பெற்றிருக்கின்றன. சாகசக் காட்சிகளிலும் கடல் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் அமையப்பெற்ற நுண்ணிய ஒலித்துணுக்குகள், பின்னணி இசை போன்றவை கூடுதல் சிறப்பு. ஃபேன்டஸி தன்மைக்கேற்ப அமைந்துள்ள கதாபாத்திரங்களின் மேக் அப் மற்றும் உடைகளும் டாப் கிளாஸ். ஆனால் விநோதமான உயிர்களைக் காட்டும்போது வரும் VFX காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பல இடங்களில் அவை செயற்கையாகவும் கார்ட்டூனாகவும் வெளிப்படுகின்றன.
புகழ்பெற்ற நாவல் படைப்புகளைத் திரை வடிவில் கொண்டு வரும் போது அவை அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தாமல் போகலாம். காரணம், அதற்கு ஏற்கெனவே கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு, அவர்கள் பலவிதமாக அந்தக் கதையைக் கற்பனை செய்தும் வைத்திருப்பார்கள். எனவே ஏற்கெனவே இருக்கும் கதையை லைவ் ஆக்ஷன் வடிவத்தில் மாற்றுவது என்பது தேர்ந்த படைப்பாளிகளுக்கே கூட சவாலான ஒன்றுதான்.
ஆனால், அந்தச் சவாலைச் சுலபமாக வென்று பளிச்சென மின்னுகிறது இந்த 'ஒன் பீஸ்'. அதிலும் சோர்ந்துவிடாத திரைக்கதை, அட்டகாசமான மேக்கிங் உள்ளிட்டவை இதைக் கூடுதலாக ரசிக்க வைக்கின்றன. அதே சமயம், லாஜிக் மறந்து மேஜிக்கை மட்டுமே ரசிக்க வேண்டும். அது ஏன் இப்படி, இது ஏன் இப்படி என்பதெல்லாம் இதற்குச் சரிப்பட்டு வராத கேள்விகள். அந்த வகையில் பார்த்தால் குழந்தைகள் மட்டுமின்றி அனைவரையும் கவரக்கூடிய சிறந்த பொழுதுபோக்கு வெப் சீரிஸ் இந்த 'ஒன் பீஸ்'.
from Latest news https://ift.tt/eXfFS5B
0 Comments