வங்கிக் கணக்குகள், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இன்று ஆதாருடன் இணைக்கப் பட்டுள்ளன. ஆனால், அந்த ஆதார் கார்டை நாம் மிகவும் அலட்சியமாகப் பயன்படுத்துகிறோம்.
சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் நம்முடைய அதார் விவரங்களைப் பயன்படுத்தி, யாரோ ஒருவர் நமது பெயரில் வங்கியில் கடன் பெற முடியும்; வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தையும் எடுத்துக்கொள்ள முடியும் என்பதை ஆதார் பயனாளர்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
சில மோசடிக் கும்பல்கள் பயனாளர்களின் வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சலுக்குப் பரிசு விழுந்திருப்பதாகவோ, தங்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாகவோ பொய்யாக தகவல் அனுப்பி, ஆதார் அட்டை எண்ணைப் பகிருமாறு கோரிக்கை விடுக்கின்றன. இதை நம்பி, ஆதார் எண்ணைப் பகிரும் பயனாளர்கள் மிகுந்த பாதிப்புக்கும், பண நஷ்டத்துக்கும் ஆளாகின்றனர்.
எனவே, இது போன்று ஆதார் எண்ணைக் கேட்டு, அனுப்பப்படும் மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-களைப் பயனாளர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும், அரசாங்கம் எப்போதும் தனிநபரின் விவரங்களை வாட்ஸ்அப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ கேட்பதில்லை எனவும் UIDAI தெரிவித்துள்ளது.
மேலும், அவ்வப்போது பயனாளர்கள் தங்களின் ஆதார் அட்டையில் உள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தி, தங்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் உள்ள ஆதார் செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் பயனாளரின் ஆதார் அட்டை QR குறியீட்டை ஸ்கேன் செய்தாலே, பயனாளரின் கடந்த கால ஆதார் பயன்பாடு உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும்.
இதே போல, uidai.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று, `aadhaar services' என்ற இணைப்பில், `Aadhaar Authentication History’ என்பதை க்ளிக் செய்தால், நமது கடந்த கால ஆதார் பயன்பாடுகள் குறித்த விவரங்கள் தெரிந்துவிடும்.
இதில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது தவறுகள் இருப்பது போல் உணர்ந்தால், உடனடியாக பயனாளர்கள் 1947 என்ற உதவி எண்ணை அழைப்பதன் மூலமோ uidai.gov.in என்ற ஆதார் இணையதளத்திலோ புகார் செய்யலாம்.
மேலும், ஆதார் தொடர்பான மோசடிகளைக் களைய மத்திய அரசு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. 'Two-layered security mechanism' என்ற அந்த புதிய பாதுகாப்பு அம்சம், ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, குடிமக்களின் ஆதார் விவரங்களைப் பாதுகாக்க மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இதில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (AI/ML) மூலம் Two-layered security mechanism என்ற அம்சத்தைச் சேர்த்துள்ளது, இது ஆதார் அட்டை சரிபார்ப்பு நடவடிக்கையின்போது கைரேகைகளைப் பரிசோதித்து அங்கீகரிக்கும் மற்றும் மோசடியான முயற்சிகளைக் கண்டறிந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு முறையின் மூலம் ஆதார் அங்கீகாரப் பரிவர்த்தனைகளை இன்னும் வலுவானதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற முடியும்.
வங்கித் துறை, நிதி பரிவர்த்தனைகள், தொலைத்தொடர்பு மற்றும் அரசு உள்ளிட்ட துறைகளில் இது பெருமளவில் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல, ஆதாரின் பாதுகாப்பு அம்சங்களின் ஒன்றான மாஸ்க்டு ஆதார் கார்டை மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க எண்களில் முதல் 8 இலக்க எண்கள் மறைக்கப்பட்டிருக்கும். கடைசி 4 இலக்கங்கள் மட்டும்தான் தெரியும்.
இதன் மூலம் இணைய வழியில் ஆதார் கார்டுகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும். மேலும், myAadhaarPortal, mAadhaarApp மற்றும் UIDAI போன்ற அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடகங்களை மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் குடிமக்கள் தங்கள் ஆதாரைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
from Latest news https://ift.tt/lVybg5P
0 Comments