ஆர்கானிக் பொருள்கள் விலை உயர்வுக்கு என்ன காரணம் தெரியுமா?

இன்று நிறைய மக்கள் இயற்கை வழியில் விளைந்த பொருட்களின் மீதும், மரபின் மீதும் நாட்டம் கொண்டு அவற்றைத் தேடிச் செல்கின்றனர். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது நம்ம ஊர் சந்தை.

நம்ம ஊர் சந்தை‌ | இயல்வாகை

நம்ம ஊர் சந்தையில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், அவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட ஜாம், ஊறுகாய்கள், சிறுதானியங்கள், அவற்றில் செய்யப்பட நொறுக்குத்தீனிகள், இனிப்புகள் போன்ற பல்வேறு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவைப்போக பனையோலையில் செய்யப்பட்ட சிறார் விளையாட்டுப் பொருள்கள், கைவினைப் பொருள்கள், துணிப்பைகள், பாய், தலைகாணி போன்றவையும் விற்பனைச் செய்யப்படுகிறது.

இச்சந்தை முதலில் கோவை காந்திபுரத்தில் மட்டும் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்பொழுது அதன் இரண்டாவது சந்தையை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிரஸ் காலனிப் பகுதியில் தொடங்கியுள்ளனர்.

அப்பொழுது சந்தைப் பொறுப்பாளர் அழகேஸ்வரியிடம் பேசினோம். அவர் கூறியதாவது, ``இயல்வாகை தொடர்ந்து இயற்கை வழி வாழ்வியலில் உள்ள நிறைய விஷயங்களைக் களப்பணிகளாகவும், கருத்துரைகளாகவும் எடுத்துரைக்கத் தமிழ்நாடு முழுக்க பயணம் செய்துள்ளோம். அதன் நீட்சியே, இந்த `நம்ம ஊர் சந்தை‌'. விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை எப்படி லாபகரமான முறையில் செய்வது எனச் சொல்லித் தருகிறோம். அதோடு, அதற்கான பயிற்சிகளையும் வழங்குகிறோம்.

நம்ம ஊர் சந்தை‌ | இயல்வாகை

அதில் கலப்புப் பயிர் சாகுபடி, உழவில்லா வேளாண்மை, மதிப்புக்கூட்டல், சாகுபடி தொழில்நுட்பம் போன்றவற்றை கற்றுத் தருகிறோம். உதாரணமாக, கற்றாழையை எப்படி உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்று கற்றுத் தருகிறோம். அதுமட்டுமில்லாமல் இருக்கும் இடத்திலிருந்தே எப்படி சந்தைப்படுத்துவது என்பதையும் கற்றுத் தருகிறோம். அப்படி இயற்கை முறையில் விளைந்த பொருள்களை சந்தைப்படுத்துதலுக்கான ஒரு தளமாகத் தான் நம்ம ஊர் சந்தை‌ நடைபெறுகிறது. இதில் உற்பத்தியாளர்களே நேரடியாக விற்பனை செய்வார்கள்.

நம்ம ஊர் சந்தை‌ | இயல்வாகை

நம் ஊர் சந்தை இன்றைய காலத்திற்கு மட்டும் என்றில்லாமல் எல்லாக் காலத்திற்கும் தேவையான ஒன்றாக உள்ளது. கார்ப்பரேட்டின் பெரிய சந்தையாக இந்திய மக்களும், அவர்களின் உணவுத் தேவையும் உள்ளது. நாம் உண்ணும் ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கவழக்கங்கள் அந்த சந்தைக்கானத் தீனியாக உள்ளது‌.

நம்ம ஊர் சந்தை‌ | இயல்வாகை

உணவுத் தொடங்கி மருத்துவம் வரை கார்ப்பரேட்டுகளுக்கு நாம் தீனியாகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மீண்டு, நமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்யும் தற்சார்பு வாழ்வியலுக்குள் செல்வதற்கான பாதை தான் `நம்ம ஊர் சந்தை‌'. தற்சார்பு வாழ்வியலை வீட்டுத்தோட்டத்தில் ஆரம்பித்தோம். அது இன்று சந்தையாக வளர்ந்துள்ளது.

கொரோனா மாதிரியான பெரிய நோய்த்தொற்றுக் காலத்தில் தான் மக்கள் இயற்கை வழியில் விளைந்த பொருள்களைத் தேடி வாங்க ஆரம்பித்தனர்‌‌. தனக்கு இல்லாவிட்டாலும், தன் குழந்தைக்காவது நோய் எதிர்ப்புச் சக்தி உள்ள உடலைக் கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர் சிரத்தைக் கொள்வதை நம் கண்கூடாகக் காண முடிகிறது. அதற்கானத் தேவையை இந்த நோய்த் தொற்று காலகட்டம் உருவாக்கியுள்ளது.

நம்ம ஊர் சந்தை‌ | இயல்வாகை

மேலும் குழந்தைகளிடம், பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறோம். நமக்கு முந்தையத் தலைமுறையினர் நிறைய விளையாட்டுகள் விளையாடியுள்ளனர். தாயக்கட்டை, பம்பரம், கில்லி, நொண்டி என எல்லாம் மண்ணோடு தொடர்பு கொண்டிருந்தது. இப்பொழுதுள்ள குழந்தைகள் பெரும்பாலும் மொபைல்களில் தான் விளையாடுகின்றனர். அதைவிட்டால், கிரிக்கெட். இதுமாதிரியான விளையாட்டுக்கள் இருந்ததா என்றுகூட அவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே அவற்றை அறிமுகப்படுத்த அவற்றை இங்குச் சொல்லித் தருகின்றோம். அதுபோல் ஓரிகாமி கலையையும் கற்றுத் தருகிறோம். அது அவர்களின் சிந்தனை ஆற்றலைக் கூர்மையாக்குகின்றது.

இயல்வாகை

ஆர்கானிக் பொருட்கள் விலை உயர்வு என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது விலை உயர்வு தான். சிறுதானியங்கள் முதற்கொண்டு நிறைய விளைப்பொருள்கள் பெரியளவில் ஏற்றுமதியாகின்றன. அந்த ஏற்றுமதியின் விளைவே, இந்த‌ விலை ஏற்றம். மேலும், உற்பத்திக் குறைவாக உள்ளது. நாம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். உற்பத்திப் பெருகப் பெருகத்தான் விலைக் குறையும்‌. உதாரணமாக, மாப்பிள்ளைச் சம்பா, கருப்பு கவுனி போன்ற அரிசிகளின் உற்பத்தி இன்று பெருகியுள்ளது. இதனால், 250 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த அரிசி இப்பொழுது 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்படி உற்பத்தி பெருகி, விலைக் குறையும்போது தான், எல்லாத் தரப்பு மக்களாலும் வாங்கமுடியும். மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது‌. அந்த வரவேற்பினால் தான் எங்களால் புறநகரிலும் சந்தைப் போடமுடிந்தது. கூடிய விரைவில் சரவணம்பட்டியிலும் எங்களது மூன்றாவது சந்தையைத் தொடங்கவுள்ளோம்" என்றார்.

படங்கள்: தி.பெருஞ்சித்திரன், லோ.சக்தி



from Latest news https://ift.tt/SoDQzWl

Post a Comment

0 Comments