தமிழக அரசியல் களத்தைச் சூடுபிடிக்கவைக்கிறதா ஆளுநர் மாளிகைச் சம்பவம்?! - ஓர் அலசல்

பெட்ரோல் குண்டு வீச்சு!

சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இந்தச் சூழலில் கடந்த 25-ம் தேதி மதியம் 3 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அங்கு நடந்து வந்து, மறைத்துத் தயாராகவைத்திருந்த பெட்ரோல் குண்டை ஆளுநர் மாளிகையை நோக்கி வீசினார். அது முதல் நுழைவாயில் அருகிலிருந்த பேரிகார்டு அருகில் பட்டு தீப்பிடித்தது. இதைப் பார்த்த அங்கிருந்த பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அந்த மர்மநபரைத் தடுத்து நிறுத்தினர்.

வினோத்

போலீஸ் பிடிக்க முற்படும்போது மற்றொரு பெட்ரோல் குண்டை தூக்கி வீச முயற்சி செய்திருக்கிறார். அவரை மடக்கிப்பிடித்த போலீஸார் அவரிடமிருந்த பெட்ரோல் குண்டுகளைக் கைப்பற்றி அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயத்தில் இந்த குற்றச்செயலைச் செய்தது பிரபல ரௌடி கருக்கா வினோத் என்பதும் தெரியவந்தது. இதே நபர்தான் கடந்த ஆண்டு பாஜக கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியதும் குறிப்பிடத்தக்கது.

குடிபோதையில் குண்டு வீச்சு!

இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர் சந்திப்பில், " கருக்கா வினோத் என்பவர் ஆளுநர் மாளிகை முன்பு இருக்கும் பேரிகார்டு அருகில் பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறார். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. அவரை உடனடியாகக் கைதுசெய்திருக்கிறோம். அதோடு அவரிடமிருந்த நான்கு பெட்ரோல் குண்டுகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். பெட்ரோல் குண்டு வீசும்போது கருக்கா வினோத் குடிபோதையில் இருந்திருக்கிறார். அவர்மீது ஏழு குற்ற வழக்குகள் இருக்கின்றன. கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது" என்று கூறியிருந்தார்.

ஆளுநர் மளிகை - ஆளுநர் ரவி

இந்தச் சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், "ராஜ் பவன் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவுசெய்யவில்லை. தன்னிலையாகப் பதிவுசெய்யப்பட்ட புகார், தாக்குதலைச் சாதாரண நாசகாரச் செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது. அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு, நீதிபதியை நள்ளிரவில் எழுப்பி, குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால் பின்னணியிலுள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டிருக்கிறது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது" என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பயங்கரவாதிகளை பயங்கரவாதிகளாகவே பார்க்க வேண்டும்!

ஏற்கெனவே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று எதிர்க்கட்சிகள், பாஜக-வினர் பெரும் குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர். இந்த நிலையில், இந்த பெட்ரோல் குண்டு சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளம்பியிருக்கும் நிலையில், பல அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இது குறித்துப் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், ``தமிழகத்தில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்குச் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. இந்த நேரத்தில், கோவை குண்டு வெடிப்பு கைதிகளை விடுதலை செய்தால், அதனால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருப்பதை மறுக்க முடியாது. பயங்கரவாதிகளை, பயங்கரவாதிகளாகவே பார்க்க வேண்டும். அவர்களை விடுதலை செய்தால் ஒரு குறிப்பிட்ட சமூக வாக்கு கிடைக்கும் என்று அரசியல் லாபம் பார்க்கக் கூடாது" என்றார்.

வானதி சீனிவாசன்

மேலும், தொடர்ந்து பேசிய அவர், "திமுக அரசின் செயல்பாடுகளை, அதன் இந்து விரோதப் போக்கை விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டால்கூட வார இறுதி நாள்களில் நள்ளிரவில் வீடு புகுந்து கைதுசெய்யவே தமிழ்நாடு காவல்துறைக்கு நேரம் போதவில்லை. ஆளுநர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீசத் துணிகிறார் என்றால், அது ஒரு தனிநபரின் முயற்சியாக மட்டும் இருக்க முடியாது. ரௌடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை திமுக-வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருக்கிறது. இதனால், இந்த வழக்கு விசாரணையை, என்.ஐ.ஏ அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்" என்று கூறினார்.

`சட்டம்-ஒழுங்கு சீர் கெடவில்லை’

இந்த விவகாரம் குறித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "நாங்கள் ஆட்சி செய்யவேண்டிய மாநிலத்தில் பெட்ரோல் குண்டு வீசவேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. இந்தச் சம்பவத்துக்கு திமுக-வோ, அதன் தோழமைக் கட்சிகளோ பொறுப்பல்ல. சம்பவத்தை உடனடியாகத் தடுத்து குற்றவாளியைக் கைதுசெய்திருக்கிறோம். அவர் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவார். இதில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. உளவுத்துறை தோல்வியும் இல்லை. மனநோயாளி ஒருவர் இதுபோல வீசிவிட்டுச் சென்றால், அதற்கு நாங்கள் பொறுப்பாளியாக முடியுமா?

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

தமிழக முதல்வர் ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்கு முழுப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு இல்லை என்பது முழுக்க முழுக்கத் தவறு. அவர்கள் சொல்வதுபோல, பாதுகாப்பு குறைபாடு இருந்தால் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று ஆளுநர்தானே புகார் சொல்வார்... நாங்கள் ஏன் அவ்வாறு செய்யப்போகிறோம்... எதிரியாக இருந்தாலும் அவரைப் பாதுகாக்கும் தலைவராக முதல்வர் ஸ்டாலின் இருப்பார். சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் இந்த அரசு எந்தத் தவற்றையும் செய்யாது. தமிழக அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்த யாரோ செய்த சதி. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடவில்லை" என்றார்.

மிகப்பெரிய சதிவலை:

இது குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவுசெய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்குக்கு அடையாளமாக விளங்கும் கவர்னர் மாளிகையிலேயே இத்தகைய சம்பவம் நடந்திருப்பது தமிழ்நாட்டின் பாதுகாப்பையும், மாண்பையும், அமைதிப் பூங்கா என முன்பு தமிழ்நாட்டுக்கு இருந்த அடையாளத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இந்திய ஜனாதிபதி தமிழ்நாடு கவர்னர் மாளிகைக்கு வரவிருக்கும் நிலையில், அடிப்படைப் பாதுகாப்புக்கே குந்தகமான செயல்கள் நடந்திருக்கின்றன. இது, தமிழ்நாடு உளவுத்துறையும், காவல்துறையும் இந்த விடியா ஆட்சியில் மொத்தமாகச் செயலிழந்துவிட்டதையே வெளிக்காட்டுகிறது.

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. மேலும் குண்டுவீசிப் பிடிபட்ட நபர் இரண்டு நாள்கள் முன்னர்தான் சிறையிலிருந்து வெளிவந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. அப்படியென்றால், கவர்னர் மாளிகை குண்டுவீச்சுக்கான திட்டம் சிறையிலேயே திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகமும், இதற்குப் பின்னால் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டிருப்பதும் உறுதியாகிறது. மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குரிய கவர்னர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பற்ற நிலை இருப்பதையும், இந்திய ஜனாதிபதி கவர்னர் மாளிகைக்கு வரவிருக்கும் வேளையில், இத்தகைய குண்டு வீச்சு சம்பவம் என்பது , தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கான பெரும் எடுத்துக்காட்டாக இருக்கிறது" என்று தனது கருத்தைப் பதிவுசெய்திருந்தார்.

முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்!

இந்த விவகாரம் குறித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, "காவல் நிலையத்தின் மீது, பாஜக-வின் தலைமையகத்தின் மீது, ஆளுநர் மாளிகை மீது, மற்றொரு சம்பவம் உட்பட இந்த நான்கு சம்பவங்களிலும் ஒரே நபர் சம்பந்தப்பட்டிருக்கிறார். எனக்கு நினைவுக்குத் தெரிந்து தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் யாரும் பெட்ரோல் குண்டுகள் வீசியது கிடையாது. அதேபோல, பாஜக-வின் சில தலைவர்கள், கோவையைச் சேர்ந்த ராமநாதன், திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன்குமார், திருவள்ளூரைச் சேர்ந்த பரமானந்தம் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தினர். அந்த விசாரணையில் பாஜக-வில் முக்கியப் பொறுப்பு கிடைக்க வேண்டியும், பாதுகாப்புக்காகவும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதேபோல, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சபாநாயகர் அப்பாவு

அவர்களும் கட்சியின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று செய்தார்கள். இந்த ஆறு சம்பவத்தையும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்... இந்த கருக்கா வினோத் சம்பவம் நான்கையும் சேர்த்து, இந்த பத்து சம்பவங்களையும் பாஜக-வும், இந்து மக்கள் கட்சியும் திட்டமிட்டு செய்தது தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்க வேண்டும், வன்முறையைத் தூண்டவேண்டும் என்பதற்காகத்தான். நான் அரசியலுக்காகப் பேசவில்லை. கட்சிக்காகப் பேசவில்லை. ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஒரு குறிப்பிட்ட இயக்கம், குறிப்பிட்ட கட்சி மட்டுமே பெட்ரோல் குண்டு வைத்து விளையாடுகிறார்கள். தமிழக முதல்வர் சட்டத்தின்கீழ் ஆட்சி நடத்துகிறார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் விசாரித்து, உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடித்துத் தகுந்த நடவடிக்கை எடுப்பார்" என்று கூறினார்.

மேலும் இந்த ரெளடி கருக்கா வினோத்தை முன்னர் ஒரு முறை பாஜக-வைச் சேர்ந்த ஒருவர்தான் ஜாமீனில் வெளியே எடுத்தார் எனச் சில தகவல்கள் வெளியாகின. எனினும், குறிப்பிட்ட அந்தக் நபர், தான் பாஜக-வில் இல்லை எனக் கூறியிருக்கிறார்.

தவிர பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக- வினரின் கருத்துகள், ஆளுநர் மாளிகையின் அடுத்தடுத்த அறிக்கைகள், ஆளுங்கட்சியினர் பதில் அறிக்கைகள் என இந்த விவகாரம் தமிழக அரசியலில் ஒரு பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/HGXV53L

Post a Comment

0 Comments