உலகக்கோப்பையில் வான்கடேவில் நடந்த போட்டியில் இங்கிலாந்தும் தென்னாபிரிக்காவும் மோதியிருந்தன. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இங்கிலாந்து அணி மிக மோசமான தோல்வியை அடைந்திருக்கிறது.
இங்கிலாந்து அணி தனது கடைசிப் போட்டியில் ஆஃப்கானிஸ்தானிடமும் தென்னாப்பிரிக்கா அணி தனது கடைசிப் போட்டியில் நெதர்லாந்து அணியிடமும் தோற்றிருந்தது. அந்த மாபெரும் அப்செட்டிலிருந்து மீண்டு வரும் எண்ணத்துடன் தான் இரண்டு அணிகளும் இந்தப் போட்டியில் களமிறங்கின. உடல்நலக்குறைவு காரணமாக தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா இந்தப் போட்டியில் ஆடவில்லை. எய்டன் மார்க்ரம் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஆகியிருந்தார். ஜாஸ் பட்லர் டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
டீகாக்கை டாப்லி தொடக்கத்திலேயே வீழ்த்தினாலும் அடுத்ததாக வந்த 3 பேட்டர்களுமே நிலைத்து நின்று ஆடி அணியை நல்ல ஸ்கோருக்கு அழைத்து சென்றனர். ரீஷா ஹென்றிக்ஸ், வாண்டர் டஸன் இருவரும் அரைசதத்தை கடந்திருந்தனர். மார்க்ரம் 42 ரன்களில் ஆட்டமிழந்திருந்தனர். கடைசி கட்டத்தில் ஹென்றிக் க்ளாசனும் மார்கோ யான்சனும் அதிரடியில் மிரட்டினர். கடைசி 7 ஓவர்களில் மட்டும் தென்னாப்பிரிக்க அணி 112 ரன்களை சேர்த்தது. இதனால் 399 ரன்களை தென்னாப்பிரிக்கா எட்டியது. ஹென்றிக் க்ளாசன் 67 பந்துகளில் 109 ரன்களை அடித்து ஆட்டமிழந்திருந்தார். மார்கோ யான்சன் 42 பந்துகளில் 75 ரன்களை அடித்து நாட் அவுட்டாக இருந்தார்.
இங்கிலாந்துக்கு டார்கெட் 400. இங்கிலாந்து இருக்கிற நிலைமைக்கு அந்த அணி போராடி இந்தப் போட்டியை நெருக்கமாக கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், முதல் 12 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்காவிற்கு வெற்றியை உறுதிப்படுத்திக் கொடுத்தது இங்கிலாந்து. பேர்ஸ்ட்டோ, மலான், ரூட், ஸ்டோக்ஸ், ப்ரூக், பட்லர் என இங்கிலாந்தின் அத்தனை முக்கிய பேட்டர்கள் 12 ஓவர்களுக்குள்ளாகவே ஆட்டமிழந்திருந்தனர். அட்டாக்கிங்காக ஆடுகிறேன் என்ற பெயரில் அத்தனை பேரும் சரியாக ஃபீல்டர்களை தேடிப்பிடித்து கேட்ச்சை கொடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசியில் மார்க்வுட்டும் அட்கின்சனும் கொஞ்சம் ரன் சேர்த்ததால்தான் எதோ டீசண்ட்டான ஸ்கோரையாவது இங்கிலாந்து எடுத்தது. அப்படி இருந்தும் அந்த பெரிய தோல்வியை இங்கிலாந்தால் குறைக்கவே முடியவில்லை. 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்றிருக்கிறது.
நடப்பு சாம்பியனான ஒரு அணி இவ்வளவு மோசமாக ஆடுவது அனைவருக்கும் ஏமாற்றத்தையே கொடுக்கிறது. அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுகிறேன் எனக் கூறிவிட்டு அதையும் முழுமையாக ஆடாமல், அது செட் ஆகாவிடில் வேறு பாணிக்கும் மாறாமல் இடையில் சிக்கி தடுமாறிக் கொண்டிருக்கிறது இங்கிலாந்து அணி. 'நம்பர் 10 வரைக்கும் பேட்டர்களை வைத்திருக்கிறார்கள். ஆனால், நாம் அவுட் ஆகிவிட்டாலும் பின்னால் வருபவர் பார்த்துக் கொள்வார் என்கிற எண்ணம்தான் இவர்களிடம் இருக்கிறது. சூழலை உணர்ந்து பொறுப்பை முதுகில் ஏற்றிக் கொண்டு யாருமே ஆடவில்லை.'
நியூசிலாந்துக்கு எதிரான அந்த முதல் போட்டியில் தோற்ற போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாஸிர் ஹூசைன் இதை பேசியிருந்தார். நேற்றைய போட்டியிலும் இப்படித்தான் நடந்தது. 400 ரன்களை சேஸ் செய்கையில் குறைந்தபட்சம் ஒரு இரண்டு 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப்பையாவது அமைத்திருக்க வேண்டும். அப்போதுதான் போட்டியை நெருக்கமாக கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால், இங்கிலாந்து அணியின் எந்த வீரரும் பார்ட்னர்ஷிப்பை பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. தனித்தனியாக பவுண்டரியும் சிக்சரும் அடிப்பதில்தான் அவர்களின் கவனம் இருந்தது. ஒரு டி20 போட்டியை வெல்ல அதுவே போதும். ஆனால், ஒரு ஓடிஐ போட்டியை இந்த எண்ணத்தோடு வெல்லவே முடியாது. 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அட்டாக்கிங்காக ஆடியது. கூடவே சூழலை உணர்ந்து அணியாக கூட்டாக ஆடுவதிலும் கவனம் செலுத்தியது. பட்லரும் ஸ்டோக்ஸூம் அமைத்த பார்ட்னர்ஷிப்தானே இங்கிலாந்தை உலகக்கோப்பையை வெல்ல வைத்தது?
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டி மட்டுமில்லை. இந்தத் தொடர் முழுவதுமே இங்கிலாந்து அணி பார்ட்னர்ஷிப்களை கட்டமைக்க கவனம் செலுத்துவதே இல்லை. இதுவரை ஆடியிருக்கும் 4 போட்டிகளில் இரண்டு இரண்டு 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப்பை மட்டுமே அமைத்திருக்கிறார்கள். அந்த இரண்டுமே வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அமைந்தது. அந்தப் போட்டியையும் இங்கிலாந்து வென்றது. மற்ற 3 போட்டிகளிலுமே சேர்த்தே அதிகபட்சமாக ஒரு 50+ பார்ட்னர்ஷிப்பை மட்டுமே இங்கிலாந்து பேட்டர்கள் அமைத்திருந்தனர். 3 போட்டிகளிலுமே இங்கிலாந்து அணி தோற்றிருந்தது. இனியாவது இங்கிலாந்து அணி இந்த விஷயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இங்கிலாந்து அணிக்கு இன்னமும் 5 போட்டிகள் மீதமிருக்கிறது. இந்த 5 போட்டிகளையும் வென்றால் மட்டும்தான் புள்ளிப்பட்டியலில் அந்த நான்காவது இடத்திற்காக முட்டி மோதுவதற்கான வாய்ப்பாவது கிடைக்கும். ஆனால், இங்கிலாந்து இப்போது இருக்கும் நிலைமைக்கு அது சாத்தியமாகும் வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
from Latest news https://ift.tt/Slpmwuo
0 Comments