ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில், அந்தப் பயணிகள் ரயிலில் பிரேக் கோளாறு காரணமாக, ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், கண்டகப்பள்ளி ரயில் தண்டவாளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மறுபுறம், விசாகப்பட்டினம் - பாலசா பயணிகள் ரயில், விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயிலின் பின்பகுதியில் மோதியது. இதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்தக் கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
விபத்தைத் தொடர்ந்து பயணிகள், ரயில்வே காவலர்கள், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கினர். முதற்கட்டமாக விசாகப்பட்டினம் - பலாசா பயணிகள் ரயிலின் முன்பக்கத்திலிருந்து 11 பெட்டிகள் விஜயநகரத்தின் அலமண்டா ரயில் நிலையத்துக்கும், விசாகப்பட்டினம் - ராயகடா பயணிகள் ரயிலின் 9 பின்புறப் பெட்டிகள் கண்டகபள்ளேவுக்கும் கொண்டுசெல்லப்பட்டன.
ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரத்தின் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து விபத்து நடந்த இடத்துக்கு முடிந்தவரை ஆம்புலன்ஸுகளை அனுப்பவும் உத்தரவு பிறப்பித்தார். மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனைத்து வகையான ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்.
உடனடி மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சுகாதாரம், காவல்துறை மற்றும் வருவாய் உள்ளிட்ட பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறும் ரயில்வே அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீட்பு நடவடிக்கை குறித்த தகவலை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், பிரதமர் மோடி தற்போதைய நிலைமை குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசியதாகவும், மாநில அரசு மற்றும் ரயில்வே குழுக்கள் ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம், விபத்து குறித்து மத்திய அமைச்சர் வைஷ்ணவிடம் பிரதமர் பேசியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றனர் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்திருப்பதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஆந்திரா ரயில் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவில் கணிசமான மக்கள் பயணத்துக்குப் பயன்படுத்தும் ரயில்கள் தொடர்ந்து கோர விபத்தைச் சந்திப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/790VvGE
0 Comments