நீலகிரி: நாயை விரட்டிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை; 7 பேரைத் தாக்கிய பயங்கரச் சம்பவம்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள அட்டடி பகுதியைச் சேர்ந்தவர் விமலா. இவர், தனது வீட்டில் 4 நாய்களை வளர்த்து வருகிறார். இன்று அதிகாலையில் வழக்கத்திற்கு மாறாக நாய்கள் குரைத்துள்ளன. சத்தம் கேட்டு விழித்த விமலா, வீட்டின் கதவைத் திறந்திருக்கிறார். அப்போது, சிறுத்தை ஒன்று தனது நாயை துரத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். சிறுத்தையிடமிருந்த தப்பிக்க முயன்ற நாய், வீட்டிற்குள் நுழைந்திருக்கிறது.

சிறுத்தை மீட்புப் பணிகள்

நாயோடு சேர்ந்து கண் இமைக்கும் நேரத்திற்குள் சிறுத்தையும் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறது. தடுக்க முயன்ற விமலாவையும் சிறுத்தை தாக்கியிருக்கிறது. வீட்டில் இருந்த அனைவரும் அலறியுள்ளனர். சமயலறைக்குள் சிறுத்தை நுழைந்த நிலையில், சாதுர்யமாகச் செயல்பட்ட விமலா சமையலறைக்குள் சிறுத்தையை வைத்து கதவை அடைத்திருக்கிறார்.

குன்னூரில் உள்ள தீயணைப்பு நிலையத்தைத் தொடர்பு கொண்டு உதவி கோரியுள்ளனர். உடனடியாக விரைந்த மீட்புக் குழுவினர், விமலா உள்ளிட்ட வீட்டில் இருந்த 4 நபர்களையும் பத்திரமாக வெளியே மீட்டுள்ளனர். வீட்டிற்குள் பதுங்கியிருந்த சிறுத்தையை தீப்பந்தங்களுடன் மீட்புக் குழுவினர் தேடியுள்ளனர். சமயலறைக் கதவைத் திறந்த மீட்புக் குழு வீரர்கள்மீது பாய்ந்த சிறுத்தை, 3 பேரைத் தாக்கியிருக்கிறது. அதையடுத்து சக வீரர்கள், காயமடைந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுத்தை தாக்குதல்

வீட்டிலிருந்து சிறுத்தை வெளியேறிருக்கும் என்ற நம்பிக்கையில், நீண்ட நேரம் கழித்து வீட்டிற்குள் சென்ற வருவாய்த்துறை பணியாளர், மற்றொரு மீட்பு வீரர், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் என மேலும் 3 பேரைத் தாக்கியிருக்கிறது அந்தச் சிறுத்தை. இவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்குள்ளேயே பதுங்கியிருக்கும் சிறுத்தையை பத்திரமாக மீட்டு, வனத்துக்குள் அனுப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



from Latest news https://ift.tt/c9eWhMS

Post a Comment

0 Comments