பருத்திவீரன் தொடர்பான சர்ச்சையில் பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதாவது , “ பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன் அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ‘போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது’ என்று ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமாரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன் ஞானவேல் ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன? 'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்...' என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல் ராஜா.
அப்படியெனில் அந்த சில வார்த்தைகள்' என்ன? திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்னமாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல் ராஜா சொல்ல வருவது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?” என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
from Vikatan Latest news https://ift.tt/VAor7Ma
0 Comments