காஸா பகுதியை நிர்வகித்துவரும் ஹமாஸ் அமைப்புக்கும், இஸ்ரேலுக்குமிடையே பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் மோதலின் உச்சகட்டமாக, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது ஹமாஸ். அதில், இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேலும், இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர், அங்கிருந்து 240-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதற்கு, எதிர்ப் போர் தொடுத்த இஸ்ரேல், காஸா மீது வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுவருகிறது. மருத்துவமனைகள் உட்பட ஏராளமான கட்டடங்களைத் தரைமட்டமாக்கியிருக்கிறது.
இந்தப் போர் தொடங்கியதிலிருந்து, 11,240-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள், குழந்தைகள் எனவும், சுமார் 2,700 பேரைக் காணவில்லை என்றும் காஸாவிலுள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், 7 லட்சம் குழந்தைகள் இடம்பெயர்ந்திருப்பதாக யூனிசெஃப் தகவலளித்திருக்கிறது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. பல்வேறு தரப்பிலிருந்து கண்டனமும் எழுந்திருக்கிறது. ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ‘ஹமாஸ் இயக்கத்தை முற்றிலும் அழித்தொழிக்கும் வரை காஸா மீதான தாக்குதலை நிறுத்தப்போவதில்லை‘ என்று அறிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் கடந்த சில நாள்களாக, காஸாவைச் சுற்றிவளைத்துத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. அதனால், தொடர் தாக்குதல்களில் காஸாவிலுள்ள பல மருத்துவமனைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிக்கியிருக்கிறார்கள். காஸாவிலுள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல் ஷிஃபா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் படை குண்டுவீச்சு நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், இஸ்ரேல் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி (Rear Admiral Daniel Hagari),"புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்த குழந்தைகள் மருத்துவமனையான ரான்டிசி மருத்துவமனையின் அடித்தளத்தில் ஹமாஸ் குழு தங்கியிருந்திருக்கிறது.
ஹமாஸ் குழு சேமித்துவைத்திருந்த கையெறி குண்டுகள், தற்கொலை அங்கிகள், பிற வெடிபொருள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் அடங்கிய கமாண்ட் சென்டர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஹமாஸ் இங்கு பணயக் கைதிகளை வைத்திருந்ததற்கான அறிகுறிகளையும் நாங்கள் கண்டோம். ஒரு சிறிய சமையலறை உள்ளிட்ட அடிப்படைக் குடியிருப்பு வசதி அருகிலுள்ள சுரங்கப்பாதையும் கண்டோம். அந்தச் சுரங்கப்பாதை ஒரு மூத்த ஹமாஸ் கடற்படைத் தளபதியின் வீட்டுக்குச் சென்றது.
காஸா மீதான எங்கள் தாக்குதல் தொடரும்போது, ஹமாஸின் கட்டளை மையங்கள், ஆயுத நிலைகளை மறைக்க ஹமாஸ், மருத்துவமனைகள், பிற குடிமக்களின் உள்கட்டமைப்பை, பொதுமக்களை, மருத்துவமனை நோயாளிகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, ``காஸாவிலுள்ள முக்கிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையின் வாயில்களுக்கு வெளியே இஸ்ரேலிய டாங்கிகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், ஹமாஸ் படையினர், சுகாதார மையங்களைப் பயன்படுத்தவில்லை" என்று மறுக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news https://ift.tt/7hsU6DX
0 Comments