Deep fake தொழில்நுட்பம் மூலம் பண மோசடி; கேரளாவில் பதிவான முதல் வழக்கு... சிக்கிய குஜராத் நபர்!

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனிதர்களின் டிஜிட்டல் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்றால், மிகையாகாது. ஆனால், வளர்ந்து வரும் இது போன்ற தொழில்நுட்பங்களால், இணைய வழிக் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.

உதாரணமாக நம்மை வீடியோ காலில் அழைக்கும், நம்முடன் முன்பு பணிபுரிந்த நண்பர் ஒருவர், திடீரென அவரின் உறவினருக்கு மருத்துவ அவசரம் எனப் பணம் கேட்கும்போது, நாமும் யோசிக்காமல் கொடுத்துவிடுவோம். பிறகு நாம் நண்பருக்கு போன் செய்து நலம் விசாரிக்கும்போதுதான், நாம் ஏமாந்ததே தெரியவரும்.

நமக்கு போன் செய்து பேசியது நமது நண்பர் அல்ல என்பதும், யரோ ஒரு ஏமாற்று பேர்வழி, செயற்கை நுண்ணறிவு, Deep Fake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமது நண்பரின் குரலிலேயே பேசி நம்மை ஏமாற்றியது தெரியவரும்.

Deep fake

இப்போது இதுதான் இணைய வழியில் ஏமாற்றி, மோசடியாகப் பணம் பறிக்கும் டிரெண்ட். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா... இதுதான் `AI Deep Fake' தொழில்நுட்பமாகும். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடியாக மக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் வேலைகள், தற்போது அதிகமாக நடைபெற்று வருகின்றன.

கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், coal India நிறுவனத்தில் பணிபுரிந்து 12 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். இவருக்கு, கடந்த ஜூலை 9-ம் தேதி தெரியாத நம்பரிலிருந்து நிறைய மெசேஜ்கள், நண்பரின் குடும்பப் புகைப்படங்கள், ராதாகிருஷ்ணனின் நண்பர்கள் குழுப் புகைப்படங்கள் என நிறைய வந்திருந்தன. இதைத் தொடர்ந்து ஒரு வீடியோ காலும் வந்திருக்கிறது. அந்த வீடியோ காலில், ராதாகிருஷ்ணனோடு முன்பு ஆந்திரப்பிரதேசத்தில் Coal India-வில் பணியாற்றிய வேணுகுமார் என்ற நண்பரின் முகம் தெரிந்ததால், இவரும் தொடர்ந்து பேசியிருக்கிறார். அப்போது, அந்த மர்ம நபர், தான் தற்போது துபாயில் இருப்பதாகவும், தன்னுடைய தங்கை மருத்துவமனையில் இருப்பதாகவும், அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டியிருப்பதால், உடனடியாக ரூ.40 ஆயிரத்தைத் தான் சொல்லும் வங்கிக் கணக்கில் செலுத்துமாறும், தான் மாலையே பணத்தைத் திருப்பிச் செலுத்துவதாகவும் வேண்டுகோள்விடுத்திருக்கிறார்.

செல்போன் திரையில் தெரிந்த தனது நண்பரின் முகம், மற்றும் குரல் அப்படியே அச்சு சலாக இருக்க... ராதாகிருஷ்ணனும், அவர் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு ரூ.40 ஆயிரத்தை அனுப்பிவிட்டார். ஆனால், பணத்தை அனுப்பிய கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் வீடியோ கால் செய்து, மேலும் ரூ.35 ஆயிரம் அவசரமாக வேண்டும் எனத் தெரிவிக்கவே, இந்த முறை ராதாகிருஷ்ணனுக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக அவர், தன்னுடன் பணிபுரிந்த நண்பர்களிடம் விசாரித்து, ஆந்திராவில் வசித்து வரும் வேணுகுமாரின் செல்லுக்கு தொடர்புகொள்ள, அவரோ நீண்ட நாள்கள் கழித்து நண்பர் போன்செய்த, ஆச்சர்யத்தில், ``என்ன திடீரென போன்” எனக் கேட்க, இவரோ, ``காலையில்தானே வீடியோ காலில் பேசினோம்” எனக் கூற, அவர் இல்லவே இல்லை என மறுத்திருக்கிறார். அப்போதுதான் ராதாகிருஷ்ணனுக்கு, தான் யாரோ ஒரு மர்ம நபரால் ஏமாற்றப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து அவர், தான் ஏமாற்றப்பட்ட சம்பவம் குறித்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

Deep fake

புகாரின்பேரில், விசாரணையைத் தொடங்கிய போலீஸார், பணப் பரிமாற்றம் நடைபெற்றது மும்பையிலுள்ள தனியார் வங்கிக் கணக்கு என்பதைக் கண்டறிந்து, அந்த வங்கிக் கணக்கை முடக்கினர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக 4 மாதங்களுக்குப் பிறகு ஒருவரைக் கைதுசெய்திருக்கின்றனர். இதுதான் கேரளத்தில் AI-based deep fake technology குற்றத்தின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில், முதல் கைது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து கேரள காவல்துறை அதிகாரி ராஜ்பால் மீனா, ``கேரளத்தில் பதிவாகி, கைதுசெய்யப்பட்டிருக்கும் முதல் AI-based deep fake technology வழக்கு இதுதான். இந்த விழக்கில் தொடர்புடைய ஷேக் முர்துஷாமியா ஹயாத் பாய் (43) என்ற குஜராத்தைச் சேர்ந்தவரை வெள்ளிக்கிழமை கைதுசெய்திருக்கிறோம். மேலும், இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான அகமதாபாத்தைச் சேர்ந்த கெளசல் ஷா என்பவரையும் தேடி வருகிறோம்.

ஷேக்கும், கெளசலும் சேர்ந்ததான் இந்த AI-based deep fake technology-யைப் பயன்படுத்தி, பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள்மீது ஏற்கெனவே குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர்கள் பண மோசடியில் ஈடுபடுவதற்காக பல்வேறு ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்திருக்கிறது. இது போன்ற மோசடியில் ஈடுபடும் நபர்கள் சமூக வலைதளங்களிலுள்ள புகைப்படங்களை எடுத்து, அவற்றை AI எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் வீடியோக்களாக மாற்றி, அந்தப் புகைப்படத்தில் இருப்பவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் AI-based deepfake technology மூலம் நிஜமாகவே அவர்கள் பேசுவதுபோல பேசி, அவசரத் தேவை எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உருவ அமைப்பும், குரலும் அச்சுஅசலாக எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி இந்த AI-based deep fake technology-ல் உருவாக்கப்படுகிறது. மேலும், இதற்காக ஏற்கெனவே, சமூக வலைதளத்திலுள்ள சம்பந்தப்பட்ட நபரின் நண்பர்கள், உறவினர்கள் சிலரின் பெயரையும் தேடி எடுத்து வைத்துக் கொண்டு, மிகவும் கேஷுவலாகப் பேசி ஏமாற்றுகின்றனர்.

இதுபோல ஏமாறாமல் இருக்க, இத்தகைய போன் கால்களை தவிர்த்துவிட வேண்டும். அல்லது ஒன்றுக்கு இரண்டு முறை நேரிலோ, போனிலோ நன்றாக விசாரித்துவிட்டு, பணம் அளித்தால் ஏமாறுவதைத் தடுக்கலாம். ஒருவேளை இது போன்ற இணையவழி மோசடியில் பணத்தை இழந்தால், உடனே 1930 என்ற இலவச உதவி எண்ணுக்குத் தகவல் தெரிவித்தால், பணத்தை மோசடி நபர் எடுத்து பயன்படுத்துவதற்கு முன்பாக, போலீஸார் மோசடி நபரின் வங்கிக் கணக்கை முடக்க வசதியாக இருக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.



from Latest news https://ift.tt/jOaXfMw

Post a Comment

0 Comments