`எங்க சித்தப்பாவே செத்துட்டாரு... இன்னும் கடைய மூடலையா?’ கஞ்சா போதையில் அட்டூழியம் - ரௌடிகள் கைது

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகேயுள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த மயில்வேல் என்பவர் கடந்த ஏழாம் தேதி, சத்தரைக் கிராமத்திலுள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மயில்வேலின் இறுதி ஊர்வலத்தையொட்டி, அவரின் அண்ணன் மகனும் ரௌடியுமான பாபா என்கிற வினோத் மற்றும் இவரின் கூட்டாளிகளான முகிந்தர், பிரவீன்குமார் ஆகிய மூன்றுபேரும் சேர்ந்து, கஞ்சா போதையில் அப்பகுதியிலுள்ள கடைகளை அடைக்குமாறு, அட்டூழியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். பிறகு இரவு 9.30 மணியளவில், நரசிங்கபுரம் அடுத்த மாரிமங்கலம் பகுதியிலுள்ள ஸ்வீட்ஸ் பேக்கரி கடைக்குச் சென்று, பட்டா கத்தியால் தாக்குதல் நடத்தி, ஆயிரம் ரூபாய் பறித்திருக்கின்றனர்.

மிரட்டிய ரௌடிகள்

பேக்கரியில் இருந்த பெண்ணிடம், ‘காசை எடு’ என அடிக்கப் பாய்ந்து, பணம் பறித்த ரௌடிகள் மூவரும் ‘கேமரா வச்சிருக்கியா. போலீஸ்கிட்ட போனால் உன்னையும் உன் புருஷனையும் போட்டுத் தள்ளிடுவோம். கேஸ், கோர்ட்டுனு போனா நீங்க இருக்க மாட்டிங்க..’ என்று மிரட்டி விட்டும் சென்றிருக்கின்றனர். இதுதொடர்பான, சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, பதை பதைக்க வைத்தன.

பேக்கரி கடையில் இருந்து பைக்கில் புறப்பட்ட மூன்று ரௌடிகளும் நேராக இருளஞ்சேரி கிராமத்திலுள்ள தாபாவுக்குச் சென்றனர். ரொட்டி, சிக்கன் கிரேவி, முட்டை கீமா, ஆம்லெட், கலக்கி என வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, பெரிய உணவுப் பட்டியலையே சொல்லி அதையும் பார்சல் செய்ய சொல்லியிருக்கிறார்கள். மொத்தம் 840 ரூபாய் என பில்லை நீட்டியிருக்கிறார் தாபா உரிமையாளர். ‘எங்க சித்தப்பா செத்துட்டாரு. எங்க கிட்டயே காசு கேக்குறியா?’ என்று சொல்லி, பணம் கொடுக்க மறுத்ததோடு, இடுப்பில் சொருகியிருந்த பட்டா கத்தியை எடுத்து வெட்டியிருக்கின்றனர். இதனால், தாபா உரிமையாளரின் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.

மிரட்டிய ரௌடிகள்

இதையடுத்து, பார்சலுடன் மீண்டும் நரசிங்கபுரம் பகுதிக்கே வந்தனர். அங்குத் திறந்திருந்த இறைச்சிக் கடை ஒன்றைப் பார்த்ததும், அங்குசென்று ‘ஏண்டா, எங்க சித்தப்பாவே செத்துட்டாரு. எல்லோரும் கடையை மூடிட்டானுங்க. உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால், இன்னமும் கடையை மூடாமலிருப்ப..’ என்று கேட்டு, இறைச்சிக் கடை உரிமையாளரையும் கழுத்தில் வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. கையால் தடுத்ததால், அவர் உயிர் தப்பினார். ஆனாலும், கையில் பலத்த வெட்டு விழுந்தது. இதையடுத்து, சாவு வீட்டுக்குச் சென்ற ரௌடிகள் ஓசியில் வாங்கிவந்த உணவு பார்சலையும் பிரித்து சாப்பிட்டுவிட்டு, கஞ்சா புகைத்தபடியே இரவு முழுவதும் வெறியாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வெட்டுக் காயம் விழுந்த தாபா உரிமையாளர், இறைச்சிக் கடை உரிமையாளர் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேக்கரி கடை சி.சி.டி.வி காட்சியைப் போன்றே தாபா மற்றும் இறைச்சிக் கடையில் நடத்தப்பட்ட அட்டூழிய காட்சிகளின் வீடியோக்களும் வெளியாகி, அடுத்தடுத்து அதிர்ச்சியை உண்டாக்கின. சம்பந்தப்பட்ட ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் வலியுறுத்தினர்.

ரௌடிகள் கைது

இதையடுத்து, மப்பேடு காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீஸ் உயரதிகாரிகளும் தனிகவனம் செலுத்தினர். முதலில் சிக்கிய பிரவீன்குமாரைக் கைதுசெய்து, புழல் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகளான பாபா என்கிற வினோத் மற்றும் முகிந்தர் ஆகிய இருவரையும் பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், ஒரு இடத்தில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸார் சுற்றி வளைத்தபோது, தப்பித்து ஓட முயன்றனர். அப்போது, தடுக்கி விழுந்ததில் இரண்டு ரௌடிகளுக்கும் கால்களில் முறிவு ஏற்பட்டது. ஒரு ரௌடிக்கு வலது காலும், இன்னொரு ரௌடிக்கு இடது காலும் முறிந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையளித்து, சிறையில் அடைத்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Vikatan Latest news https://ift.tt/0WA9mge

Post a Comment

0 Comments