தமிழகம் முழுவதும் பரவலாக சமைக்கப்படும் பாரம்பர்ய, சத்தான, ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை பிரபலப்படுத்தும் வகையில், அவள் விகடன் சார்பில், 11 ஊர்களில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலத்தை தொடர்ந்து புதுச்சேரியில் ஸ்ரீ சாய்பாபா திருமண நிலையத்தில் நேற்று இப்போட்டி நடைபெற்றது. சமையல் திறமையை நிரூபிக்கக்கூடிய சவாலான இந்த மேடையில் புதுச்சேரி மட்டுமன்றி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சமையலில் பெண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என கெத்து காட்டும் விதமாக ஆண்கள் பலரும் இந்த போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இளம் வயதினர் தொடங்கி முதியவர்கள் வரை எல்லா வயதுகளிலும் போட்டியாளர்கள் இடம்பெற்றனர். ஆரோக்கிய சமையல், பாரம்பர்ய சமையல், குடும்பத்தில் வழி வழியாகப் பின்பற்றப்பட்டு வரும் சமையல், வட்டார சிறப்பு சமையல் என நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் முதல் சுற்றுப் போட்டிக்கு, வீட்டிலேயே உணவு சமைத்து எடுத்து வந்து காட்சிப்படுத்தியிருந்தனர். அதில் சிறுதானிய உணவு முதல் சிக்கன் விந்தாலி வரை நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.
திருவாதிரை களி, உருளைக்கிழங்கு அல்வா, ஜவ்வரிசி உருண்டை, தினை அரிசி கேசரி, மருந்து குழம்பு, சுரைக்காய் பாயசம், மஷ்ரூம் சட்னி, மரவள்ளிக்கிழங்கு போண்டா, வெங்காய பொடி சாதம், சிறுதானிய லட்டு, சாமை அல்வா, சிக்கன் விந்தாலி, இறால் ரசம், சப்பாத்தி – கோவைக்காய், குடை மிளகாய் கிரேவி, சிவப்பரிசி பாயசம் உள்ளிட்ட ஏராளமான உணவுகள் நாவூற வைத்தன. அதிலும் 13 வயது போட்டியாளராக கலந்து கொண்ட சிறுமி அஞ்சனா, சிக்கன் கலோடா கபாப், பனீர் தொக்கு பிரியாணி, இளநீர் பாயசம், சவா ரொட்டி, சிக்கன் குழம்பு என வித விதமாக சமைத்து, பெரியவர்களுக்கே டஃப் கொடுத்தார். தன் அப்பா செஃப் என்பதால், சமையல் கலை மீது ஈர்ப்பு வந்ததாக கூறி அனைவரையும் கவர்ந்தார்.
போட்டியின் நடுவர் செஃப் தீனா உணவை ருசிபார்த்து மதிப்பெண்களை வழங்கினார். முதல் சுற்றில் தீனா தேர்வு செய்த 10 போட்டியாளர்கள் இரண்டாவது சுற்றான நேரடி சமையலில் பங்கேற்றனர். மேலும் புனிதா, உஷா கிருஷ்ணகுமார் என்ற இரண்டு போட்டியாளர்களும் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன.
from Vikatan Latest news https://ift.tt/sKL20ru
0 Comments