வேலைவாய்ப்பை எக்காரணம் கொண்டும் குறையவிடக் கூடாது!

கடந்த வாரம் வெளியான புள்ளிவிவரங்களில் மீண்டும் அதிர்ச்சியான தகவல் வெளியானது. புதிதாக வேலைக்குச் சேர்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது எனத் தொழிலாளர் சேமநல நிதி அலுவலகம் (EPFO) வெளியிட்ட தகவல், நம்மைத் திகைக்க வைக்கிறது.

மத்திய அரசுத் துறை அமைப்பான இ.பி.எஃப்.ஓ வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த அக்டோபரில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த செப்டம்பரில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையைவிட 16.7% குறைவாகும். அதாவது, செப்டம்பரில் 9,26,934 பேர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தனர். ஆனால், அக்டோபரில் 7,72,084 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

கடந்த மார்ச்சில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவை எட்டியது. அதன்பிறகு மீண்டும் உயரத் தொடங்கிய இந்த எண்ணிக்கை, இப்போது மீண்டும் 8 லட்சத்துக்குக் கீழே இறங்கியிருக்கிறது.

நிறுவனங்களின் வருமானம் குறைந்திருப்பது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களின் ஆர்டர் குறைவாக இருப்பது ஆகியவை இதற்கு முக்கியமான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

காரணங்கள் எவையாக இருந்தாலும், வேலைவாய்ப்பு குறைவதை எக்காரணம் கொண்டும் நாம் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில், இன்றைக்கு நாடு முழுக்க கல்லூரியில் படித்து முடித்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல். இவர்களில் 80 லட்சம் முதல் 90 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் எனில், ஆண்டுதோறும் 10 முதல் 20 லட்சம் பேருக்கு வேலை கிடைக்காமல் போகும். ஆண்டுக்கு ஆண்டு இப்படி வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆரோக்கியமான விஷயம் அல்ல. தவிர, இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 20 ஆண்டுகளில் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும் எனில், புதிய வேலைவாய்ப்புகள் பஞ்சம் இல்லாமல் உருவாக்கப்பட வேண்டும். இதில் ஏற்படும் சுணக்கம் நாட்டின் வளர்ச்சிக்குதான் வேட்டு வைக்கும்!

வேலைவாய்ப்பை உருவாக்க வெளிநாடுகளை நம்பி இருக்காமல், நம் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பல திட்டங்களைத் தீட்டினாலே பல லட்சம் வேலைகள் உருவாகும். உதாரணமாக, வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு ஐ.டி வசதிகளை ஏற்படுத்தித் தரும் நாம், நம் நாட்டுக்குத் தேவையான வசதிகளை உருவாக்குவதில் ஏன் எந்த முனைப்பையும் காட்டுவதில்லை? நம் மக்களுக்குத் தேவையான பொருள்களைத் தரமாகத் தயாரித்து, அவற்றைக் குறைந்த விலையில் தந்தாலே, பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமே!

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும்; வேலைவாய்ப்பை எக்காரணம் கொண்டும் குறையவிடக் கூடாது!

- ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/Ds68oyG

Post a Comment

0 Comments