மிக்ஜாம் பெருவெள்ளம்... அடித்துச் சொல்லும் பாடங்கள்!

மீண்டும் ஒருமுறை சென்னையையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் புரட்டிப் போட்டிருக்கிறது பெருவெள்ளம். மிக்ஜாம் புயலால் பெய்த மழை, பெரும் பணக்காரர்கள் வசிக்கும் போட் கிளப் பகுதி தொடங்கி பரம ஏழைகள் வசிக்கும் புளியந்தோப்பு வரை பாகுபாடு இல்லாமல் படுத்தி எடுத்திருக்கிறது.

இந்தப் பெருவெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து உடனடியாக மீண்டு வந்தது சென்னை நகரின் சில பகுதிகள் மட்டுமே. பல பகுதிகளில் மழைநீர் வடிவதற்கான கால்வாய்கள் அடைபட்டதில் வெள்ளநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலானவை பெருமழை நின்று மூன்று, நான்கு நாள்கள் கடந்த பின்பும் வெள்ளத்தில் இருந்து மீண்டுவர முடியாமல் தத்தளிக்கிறது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களால் இன்னும்கூட வெளியே வர முடியவில்லை. அங்குள்ள தொழிற்கூடங்கள் இயங்கவில்லை. அன்றாடம் கிடைக்க வேண்டிய பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை.

பெருவெள்ளத்தால் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்காக இயற்கையை எந்த வகையிலும் குறை சொல்ல முடியாது. இந்தப் பெருவெள்ளத்தால் மக்கள் அனுபவிக்கும் பல்வேறு கஷ்டங்களுக்குக் காரணம், இயற்கையை சற்றும் கவனத்தில் கொள்ளாத மனிதர்களின் அலட்சியப் போக்குதான். கடந்த காலத்தில் அரசு வகுத்த திட்டங்களாக இருந்தாலும் சரி, மக்கள் தங்களுக்கான வாழ்விடங் களை அமைத்துக்கொள்வதாக இருந்தாலும் சரி, இயற்கையை எந்த விதத்திலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

ஏரிகள் என்றாலே பள்ளமான இடங்கள்தான். அப்படிப்பட்ட பள்ளமான பகுதிகளில் வீடுகளைக் கட்ட அரசாங்கம் அனுமதி அளித்தது மாபெரும் தவறு. ஆனால், பலதடவை சூடுபட்ட பின்னரும் திருந்தாமல், திரும்பத் திரும்ப குடியிருப்புகளுக்காகவும் தொழிற்சாலைகளுக்காகவும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதும், அவற்றுக்கு அரசு அதிகாரிகளே துணைபோவதும் தொடரத்தான் செய்கிறது. விளைவு, முறைப்படி நிலத்தை வாங்கியவர்களும் பாதிப்பில் சிக்கித் தவிக்கிறார்கள். அதேபோல, மழைக்காலங்களில் சாலை வசதிகள், மின்சாரம், இணைய வசதிகள் பாதிப்பு அடைந்தாலும், குறுகிய காலத்துக்குள் மீண்டுவரும் அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாதது அரசின் தவறுதான்!

இந்த விஷயத்தில் அரசை மட்டுமே குறை சொல்லி மக்கள் தப்பிக்க முடியாது. வெள்ளம் வராது; வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என இருப்பது வெள்ளத் திலிருந்து தப்பிக்க நிச்சயம் உதவாது. தங்கள் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் உள்கட்டமைப்புகளுக்கான தேவையை அரசுக்கு உணர்த்தி, செய்ய வைக்காமல் போனதற்கு மக்களைத் தவிர, வேறு யார் காரணமாக இருக்க முடியும்?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே நீர் மேலாண்மையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் நாங்கள் என்று பழம்பெருமை பேசுவதால் எந்தப் பயனும் இல்லை. இது மாதிரியான கஷ்டங்களை இனியும் நாம் அனுபவிக்காமல் இருக்க வேண்டுமெனில், உள்கட்டமைப்பு தொடர்பான நிரந்தரத் தீர்வுகளை ஏற்படுத்தி, அரசியல் பாகுபாடுகளைத் தாண்டி, செயலாக்க வேண்டும்.இயற்கையோடு விளையாடினால் எப்படிப்பட்ட பலனை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டு நடந்தால், கஷ்டப்படாமல் இருப்போம்!

- ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/IOlvUFk

Post a Comment

0 Comments