நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், ஆளும் காங்கிரஸை வீழ்த்தி பா.ஜ.க ஆட்சியமைக்கிறது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால், அந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவு தள்ளிப் போயிருக்கிறது. இந்த 199 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க-வும், 70 தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. அங்கே ஆட்சி மாற்றத்துக்குக் காரணம் என்ன?
உட்கட்சி மோதலை மீறி வென்ற பா.ஜ.க!
கடந்த 30 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் ராஜஸ்தானைத் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆண்டதில்லை. காங்கிரஸும், பா.ஜ.க-வும் அங்கு மாறி மாறி ஆட்சியைப் பிடித்துவருகின்றன. அந்த வகையில், இந்த முறை ஆட்சி பா.ஜ.க வசம் சென்றிருக்கிறது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல், மோடியின் முகத்தை முன்னிறுத்தி ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டது பா.ஜ.க. மக்களைக் கவரும் வாக்குறுதிகளையும் அள்ளித்தெளித்தது. அதே நேரம், தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்காததால், கட்சித் தலைமைமீது முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அதிருப்தியிலிருந்தார். அதோடு, வெற்றிபெற்றால் முதல்வர் நாற்காலி யாருக்கு என்பதில் முக்கியத் தலைவர்கள் மோதல் போக்கை கடைபிடித்ததால் உட்கட்சி பூசலும் உச்சம் தொட்டது. சதீஷ் பூனியா, சி.பி.ஜோஷி, ராஜேந்திர ரத்தோர், வசுந்தரா ராஜே உள்ளிட்ட தலைவர்கள் தற்போது முதல்வர் நாற்காலிக்குப் போட்டிப் போடுகின்றனர். வெற்றிக்கு பிறகுதான் கட்சிக்குள் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கக் காத்திருக்கிறது என்கிறார்கள் ராஜஸ்தான் அரசியல் பார்வையாளர்கள்.
பா.ஜ.க-வுக்கு பிரசாரம் செய்த காங்கிரஸ்!
பா.ஜ.க-வின் இந்த வெற்றிக்கு மோடி மேஜிக், கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், காங்கிரஸ் ஆட்சி மீதான அதிருப்தி ஆகியவை முக்கியக் காரணங்களாக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி, காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி மோதலும் பா.ஜ.க-வுக்கு கைகொடுத்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, தண்ணீர்ப் பிரச்னை, விலைவாசி உயர்வு என ராஜஸ்தானில் ஏராளமான பிரச்னைகள் வரிசை கட்டி நின்றபோது, அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல ஆளும் கட்சியினர் இரு அணிகளாகப் பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றனர்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக நின்றார் அம்மாநில காங்கிரஸின் இளம் தலைவர் சச்சின் பைலட். கெலாட்டையும், கெலாட் அரசையும் வெளிப்படையாக விமர்சித்தார் சச்சின் பைலட். எதிர்க்கட்சியான பா.ஜ.க செய்ய வேண்டிய வேலையைக் கட்சியின் முக்கியத் தலைவரே செய்தது காங்கிரஸுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் பைலட் - கெலாட் இடையே கட்சித் தலைமை பேசி சமாதானம் செய்து வைத்தாலும், `கட்சியையே பார்க்க முடியாத இவர்கள்... ஆட்சியை எப்படிக் கட்டி காப்பாற்றுவார்கள்' என பா.ஜ.க செய்த பிரசாரம் மக்களிடையே எடுபட்டிருக்கிறது.
``ராஜஸ்தானில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சித் தலைமைக்கே குறைவாகத்தான் இருந்தது. ம.பி, தெலங்கானா, சத்தீஸ்கரில் தேர்தல்களுக்குக் காட்டிய ஆர்வத்தை ஒப்பிடும்போது ராஜஸ்தானுக்குக் காட்டிய ஆர்வம் மிகக் குறைவுதான். இதற்கு முந்தைய சில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோற்றபோது, 50 அல்லது அதற்கும் குறைவான தொகுதிகளிலேயே வென்றிருந்தது. ஆனால், இம்முறை 70 தொகுதிகள் வரை வென்றிருப்பதால், இதை போனஸ் வெற்றியாகத்தான் காங்கிரஸ் எடுத்துக்கொள்ளும்'' என்கிறார்கள் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.
from Vikatan Latest news https://ift.tt/HJ4STl7
0 Comments