ஒரு கிளிக்கிலேயே பல லட்சங்களைச் சுருட்டிவிடும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது.
பெங்களூருவை சேர்ந்த 39 வயதான என்ஜினீயர் OLX-ல் பயன்படுத்திய பழைய படுக்கையை விற்க விளம்பரம் செய்து இருக்கிறார். ஆனால், ஒரு ஒ.டி.பி.யை தந்ததன் மூலம் 68 லட்ச ரூபாய் பணத்தை இழந்த செய்தியைத்தான் தற்போது பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர்!
பெங்களுருவின் எச்.ஹெச்.ஆர் லேஅவுட்டில் வசிக்கும் மோகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), சமீபத்தில் OLX தளத்தில் தனது படுக்கையின் புகைப்படங்களுடன் அதை ஒரு விற்பனைக்கான விளம்பரத்தை வெளியிட்டார்.
அதில் படுக்கையின் விலை 15,000 ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தார். டிசம்பர் 6 அன்று இரவு 7 மணியளவில் அவருக்கு ஒரு போன் வந்தது. இந்திரா நகரில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையின் உரிமையாளர் ரோஹித் மிஸ்ரா என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியவர், OLX-ல் மோகன் தந்த படுக்கை குறித்த விளம்பரத்தைப் பார்த்ததாகவும், அதனை வாங்க விருப்பம் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். விலையை விசாரித்தபின்னர், பணத்தை டிஜிட்டல் பேமென்ட் ஆப் மூலமாக அனுப்புவதாகக் கூறியிருக்கிறார்.
ஐந்து நிமிடங்கள் கழித்து யு.பி.ஐ ஐ.டிக்கு பணத்தை அனுப்ப முடியவில்லை என்று கூறி, அவரது யு.பி.ஐ ஐடி கொடுத்து அதற்கு 5 ரூபாய் பணத்தை அனுப்பும்படி கூறியிருக்கிறார். அதன்படி கடையின் உரிமையாளர் என்று நம்பி, மோகனும் 10 ரூபாயாக அனுப்பி இருக்கிறார்.
இப்போதும் பணம் அனுப்ப முடியவில்லை என்று கூறி, 5,000 ரூபாய் அனுப்பச் சொல்லி இருக்கிறார். மோகனும் பணம் அனுப்ப பணத்தைப் பெற்றுக் கொண்டவர், 10,000 ரூபாய் அனுப்பி இருக்கிறார்.
அதனபின்னர் மீண்டும் 7,500 ரூபாய் அனுப்புமாறும் 15,000 ரூபாயை அதன்பின்னர் திருப்பி அனுப்புவதாகவும் கூறியிருக்கிறார். சரியென இவரும் பணத்தை அனுப்பி உள்ளார்.
திடீரென அந்தப் பக்கத்தில் இருந்து 30,000 ரூபாய் இவரது அக்கௌன்ட்டில் வந்திருக்கிறது. இந்தப் பணத்தைத் திரும்பி அனுப்ப OTP லிங்கை கிளிக் செய்யும்படி அவரிடம் சொல்ல, அவரும் அந்த லிங்கை கிளிக் செய்த பின்னர் தனது அக்கௌன்ட்டில் இருக்கும் மொத்தப் பணத்தையும் இழந்திருக்கிறார்.
``எனக்கு அனுப்பப்பட்ட லிங்க் லட்சங்களில் பணம் பறிபோகும் வகையில் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. எனது அக்கௌன்ட்டில் இருந்து IMPS பரிமாற்றத்தின் மூலம் நான் பணத்தை இழக்கத் தொடங்கியதால், அதைத் திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டேன்.
எனது பணத்தைத் திருப்பித் தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறேன் என்று கூறி என்னை பிஸியாகவே வைத்து இருந்தார்.
சில தொழில்நுட்பச் சிக்கல்களால் என்னால் பணம் அனுப்ப இயலவில்லை என்று அந்த நபர் கூறினார். நான் ஆன்லைனில் பணம் செலுத்துவதில் அதிக அறிவு இல்லாத ஒருவர் என்று நினைத்துக் கொண்டேன்.
இரண்டு முறை 15 லட்சமும், ஒரு முறை 30 லட்சமும் அனுப்பினேன். டிசம்பர் 6 இரவு 9 மணி முதல் டிசம்பர் 8 இரவு 9 மணி வரை மொத்தமாக 68.6 லட்சத்தை இழந்தேன். அவர் தொடர்ந்து பணம் கேட்டதால், மோசடி என்பதை உணர்ந்தேன்" என்று மோகன் கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 9 தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் ஐ.பி.சி பிரிவுகள்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
`'பொதுவாக இது போன்ற மோசடி செய்பவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு 5 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்படும். ஆனால், இது ஒரு பெரிய தொகை. மோசடி செய்பவர்கள் அனுப்பிய லிங்கை கிளிக் செய்து, OTP-களையும் இவர் பகிர்ந்து கொண்டார். இதனால் பணத்தை இழந்தார். மோசடி செய்தவர்களின் கணக்குகளை முடக்க வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்’’ என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
யாரோ அனுப்பும் ஒ.டி.பி லிங்க்கை க்ளிக் செய்தால், என்ன பிரச்னை ஏற்படும் என்பதை புரிந்துகொண்டு, உஷாராக இருங்கள் மக்களே!
from Vikatan Latest news https://ift.tt/j9QIiZB
0 Comments