`மண்ணிலே கண்டெடுத்த மாணிக்கம்!' சுசீந்திரம் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சோடஷ அபிஷேகம்!

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற திருத்தலம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில். அத்திரி முனிவர் தனது பத்தினி அனுஷியா தேவியுடன் தவமியற்றிய திருத்தலம்.

அனுஷியா தேவியின் கற்பின் பெருமையை நிலைநாட்ட சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளும் முனிவர்கள் வடிவில் அத்திரி மஹரிஷியின் ஆசிரமம் சென்று பிச்சை கேட்டனர். ஆசிரமத்தில் இருந்த அனுஷியா தேவி பிச்சை அளிக்க முன்வந்தார். அப்போது, பிறந்த மேனியுடன் உணவு அளித்தால்தான் சாப்பிடுவோம் என மும்மூர்த்திகளும் கூறினர். தனது கற்பின் சக்தியால் மும்மூர்த்திகளையும் சிறு குழந்தையாக மாற்றி அவர்கள் விருப்பப்படி அமுதளித்தார் அனுஷியாதேவி. பின்னர் முப்பெரும் தேவியரும் வேண்ட மும்மூர்த்திகளுக்கும் பழைய வடிவத்தை வழங்கினார் அனுஷியா தேவி.

இந்தத் திருவிளையாடல் நடந்த திருத்தலம் சுசீந்திரம். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற திருத்தலம். பல சிறப்புகளைக்கொண்ட சுசீந்திரம் கோயிலில் வடக்குப் பிராகாரத்தில் அமைந்துள்ள ராமர் சந்நிதிக்கு எதிரே வட கிழக்கு மூலையில் 18 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

18 அடி உயர சுசீந்திரம் ஆஞ்சநேயர்

படையெடுப்பில் இருந்து காப்பாற்ற ஆஞ்சநேயரை மண்ணுக்குள் புதைத்துவைத்த வரலாறு சுசீந்திரத்தில் நடந்துள்ளது. 1740-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜாவின் படை வீரர்களின் ஒரு பிரிவினர் குளச்சலில் டச்சுப் போர் வீரர்களுடனும், மற்றொரு பிரிவினர் வடக்கே காயங்குளம் மன்னரிடமும் போரிட்டு கொண்டிருந்தனர். அப்போது பார்த்து ஆற்காடு நவாப் பான சந்தாசாகிப் அவரது சகோதரர் போடாசாகிப் மற்றும் படைத்தளபதி சப்தர் அலிகான் ஆகியோர் நாஞ்சில் நாட்டை நோக்கிப் படையெடுத்து வந்தனர். 

ஆரல்வாய்மொழிக் கோட்டையைக் கடந்து அஞ்சுகிராமம் வழியாக வரும்போது அவர்கள் அறுவடைக்காகக் காத்து நின்ற நெற்பயிர்களையும், தானியங்களையும் சூறையாடிவிட்டு ஈத்தங்காடு பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு, அன்றைய வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் தலைமையில் ஊர் பொதுமக்கள் சேர்ந்து கடும் சமர் நடத்தினர். 

அபிஷேக பொருட்கள்

போரில் வட்டப்பள்ளி ஸ்தானிகர் உட்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

வெற்றி பெற்ற நவாப் படைகள் தங்களது படைகளோடு பழையாற்றைக் கடந்து சுசீந்திரத்தை வந்தடைந்தனர். மார்கழித் திருவிழா முடிந்து மிக கம்பீரமாக நின்று கொண்டிருந்த அன்றைய சுவாமித் தேரை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். கோயிலின் உட்பகுதிக்ச் சேதப்படுத்தினர்.

சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

ஈத்தங்காட்டில் போர் நடந்து வந்த வேளையில் உள்ளூர் பொதுமக்கள் கோயில் சம்பந்தப்பட்ட பொருள்களைக் கருவறைக்குள் இட்டுப் பூட்டி்ச் சுவரெழுப்பிப் பாதுகாத்தனர். அப்போது 18 அடி உயாமுள்ள ஆஞ்சநேயர் சிலையைக் காப்பாற்ற அதை மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்தனர்.

2 நூற்றாண்டுகளாகப் புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை வெளியே எடுத்து மீண்டும் நிறுவ யாரும் முன்வரவில்லை. சித்திரைத் திருநாள் மகாராஜா திருவிதாங்கூர் மன்னராகப் பொறுப்பேற்றதும் சி.பி.ராமசாமி ஐயர் திவானாக இருந்தபோது எம்.கே.மாங்கொம்பு நீலகண்ட ஐயர் தேவஸ்தான கமிஷனராகவும், கேரளவர்மா கண்காணிப்பாளராகவும், பரமேஸ்வர சர்மா வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகராக காலத்தில் ஆஞ்சநேய சுவாமி மண்ணிற்குள் இருந்து எடுக்கப்பட்டு வட கிழக்கு மூலையில் ராமபிரானின் சந்நிதிக்கு எதிரே 1930-ம் ஆண்டு மே 2-ம்தேதி நிறுவப்பட்டார். சுசீந்திரம் ஆஞ்சநேயர் சுவாமி மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டு 94 வருடங்கள் ஆகின்றன.

ஆஞ்சநேயருக்கு குங்கும அபிஷேகம்

அப்படிப்பட்ட அற்புதமான அனுமனுக்கு அனுமர் ஜயந்தியை முன்னிட்டு ஆயிரம் லிட்டர் பால், தயிர், வெண்ணை, இளநீர், எலுமிச்சை, அரிசி மாவு, பழச்சாறு, கரும்புச்சாறு, குங்குமம், சந்தனம், களபம், ஜவ்வாது, திருநீறு, பன்னீர், தேன் உட்பட 16 விதமான பொருள்களால் சோடஷ அபிஷேகம் நடந்தது. மாலை நேரத்தில்  துளசி, மல்லிகை, முல்லை அல்லி, ரோஜா, வாடாமல்லி, தாமரை உள்ளிட்ட பலவித வண்ணப் புஷ்பங்களால் சுவாமிக்குக் கழுத்தளவுவரை நிறையும் விதத்தில் புஷ்பாபிஷேகமும் கோலாகலமாக நடந்தது.



from Vikatan Latest news https://ift.tt/joi1P4C

Post a Comment

0 Comments