விருதுநகர் இளைஞர் கொலை வழக்கு; வரிச்சூர் செல்வத்தின்‌ கூட்டாளிகள் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்!

விருதுநகர் இளைஞர் கொலை வழக்கில், வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளிகள் 2 பேர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரௌடி வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளியாக இருந்தார். கடந்த 2020-ல் மதுரை மாவட்டம், கருப்பையூரணியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் வரிச்சூர் செல்வம், செந்தில்குமார் உள்பட மேலும் சிலர் போலீஸாரால் தேடப்பட்டு வந்தனர்‌. இந்த நிலையில் செந்தில்குமார், கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் திடீரென மாயமானார். இது தொடர்பாக செந்தில்குமாரின் மனைவி முருகலட்சுமி, விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.

காவல் அலுவலகம்

இந்த நிலையில், இரட்டை கொலை வழக்கில் போலீஸ் நடத்திய விசாரணையில் திருப்தியில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், இரட்டை கொலை குறித்து அறிக்கை அளிக்கவும், வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்யவும் அப்போதைய தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்கிற்கு உத்தரவிட்டது. அதன்பேரில் குற்றவாளிகளை பிடிக்க அருப்புக்கோட்டை சரக உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து ஐ.ஜி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தனிப்படையினர் நடத்திய விசாரணையில், செந்தில்குமார், வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளிகளால் கடத்தி கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சிகர தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து செந்தில்குமார் மாயமான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு வரிச்சூர் செல்வம், கிருஷ்ணா, தேஜ், சதீஷ் மற்றும் கிருஷ்ணாவின் நண்பர் என கூட்டாளிகள் ஐந்து பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இதில் வரிச்சூர் செல்வத்தை கடந்த ஆண்டு மதுரையில் வைத்து கைது செய்த தனிப்படையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தென்மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்கின் மாறுதலை தொடர்ந்து வேகம் குறைந்த இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைதுசெய்ய போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதற்கிடையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இந்த வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடந்துவந்த நிலையில், தலைமறைவாக உள்ளவர்கள் போலீஸில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில் செந்தில்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்சி மாவட்டம், மேலவாடி அப்பாதுரை பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற கிருஷ்ணா (வயது 36), சென்னை தி.நகரை சேர்ந்த விசுவாசாய் தேஜ் என்ற தேஜ் ஆகிய இருவர் சரணடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அவர்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்" என்றனர்.



from Vikatan Latest news https://ift.tt/UFEI2ue

Post a Comment

0 Comments