நமக்குள்ளே... பில்கிஸ் பானோ வழக்கு: சாமான்ய மனுஷியின் 22 வருட அசாத்திய சட்டப் போராட்டம்!

`நாடு முழுக்கக் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருப்பதைத் தொடர்ந்து, இந்த விடுதலைக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு ஏற்றிருக்கிறது உச்ச நீதிமன்றம். நம் நம்பிக்கை முழுமையாக சிதைக்கப்படாமல், உச்சபட்ச நீதி கிடைக்கும் என்று நம்புவோம் தோழிகளே!’ - பில்கிஸ் பானோ கூட்டு பாலியல் வழக்கில் குஜராத் அரசு குற்றவாளிகள் 11 பேருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்தபோது நாம் எழுதிய தலையங்கத்தை இந்த வரிகளுடன் முடித்திருந்தோம். இப்போது, அந்த உச்சபட்ச நீதி கிடைத்திருக்கிறது.

2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு கோர சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட கலவரத்தில், கர்ப்பிணியான பில்கிஸ் பானோவை ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. அவரின் குழந்தை உட்பட குடும்பத்தினர் 7 பேரை படுகொலை செய்தது. தேசம் அதிர்ந்த இவ்வழக்கில், 2008-ல் குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப் பட்டது. ஆனால், குஜராத் அரசு தண்டனை குறைப்பு கொள்கையின்கீழ் 2022 ஆகஸ்ட் 15 அன்று, குற்றவாளிகள் 11 பேரையும் விடுதலை செய்தது. அந்த அநீதியை எதிர்த்து நாடு முழுக்கக் குரல்கள் கொதித்தன.

அப்போது பில்கிஸ் பானோ, `இப்போது நான் அனுபவிக்கும் துயரம் எனக்கானது மட்டுமல்ல. நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமானது’ என ஆறா துயருடன் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். பல பொதுநல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

பில்கிஸ் பானோ வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு, தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, அதை ரத்து செய்து, 11 பேரும் 2 வாரங்களுக்குள் சரணடைய தற்போது உத்தரவிட்டுள்ளது. ‘என் நெஞ்சின் மேல் அழுத்தியபடியிருந்த மலையை அப்புறப்படுத்தியதுபோல, வழங்கப்பட்டுள்ள இந்த நீதி என்னை உணர வைக்கிறது’ என்று தெரிவித்துள்ளார் பில்கிஸ் பானோ.

பில்கிஸ் பானோ செயற்பாட்டாளரோ, போராளியோ அல்ல. குடும்பம், குழந்தை என வாழ்ந்து வந்தவரை மதவெறியும், பெண்ணுடலை வேட்டையாடும் ஆணாதிக்க வெறியும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்குச் சிதைத்துப் போட்டன. பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை மறைக்க சட்டம் கவசம் வழங்கும்போதிலும், மீடியாவை நேரடியாகச் சந்தித்து, 22 வருடங்களாக நீதிக்குப் போராடும் அந்த சாமான்ய மனுஷியின் வைராக்கியம் அசாத்தியமானது.

இன்னும், இவ்வழக்கில் 20 வருடங்களுக்கும் மேலாக அவருக்குத் தூண் துணையாக இருக்கும் வழக்கறிஞர் ஷோபா குப்தா, பொதுநல வழக்குகள் தாக்கல் செய்த செயற் பாட்டாளர்கள், மக்கள் மற்றும் பெண்கள், இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி பி.வி.நாகரத்னா என... இந்த நீதிக்கு நங்கூரமிட்ட பலரும் தந்திருக்கும் நம்பிக்கை இதுதான் தோழிகளே... நியாயத்துக்கான போராட்டம் தோற்பதில்லை!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/bWmLEyB

Post a Comment

0 Comments