திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கிவருகிறது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியின் தாளாளராக இருப்பவர் பி.ஜோதி முருகன். இவர் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில், பரிசு பெட்டகம் சின்னத்தில் நின்று டெபாசிட் இழந்து தோல்வியைத் தழுவினார். இவர் சில படங்களில் நடிகராகவும் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், அவர் நடத்திவரும் தனியார் நர்சிங் கல்லூரியில், படிக்கும் 3 மாணவிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில், பி.ஜோதி முருகன் பாலியல் தொல்லைக் கொடுப்பதாக 2021-ம் ஆண்டு புகார் செய்தனர். இதனையடுத்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஜோதி முருகன் கைது செய்யப்பட வேண்டும் எனச் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் 5 தனிப்படை அமைத்து பி.ஜோதி முருகனைத் தேடி வந்தனர்.
இதற்கிடையில், பி.ஜோதி முருகன் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி புருஷோத்தமர் அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு ஜோதி முருகனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கை திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த விசாரணைக்குப் பிறகு, நீதிபதி அளித்த தீர்ப்பில்,"தனியார் கல்வி நிறுவனத்தின் தாளாளர் பி.ஜோதி முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.75,000 அபராதமும், அவருக்கு உடந்தையாக இருந்த விடுதி காப்பாளர் அர்ச்சனாவிற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதம் விதித்து உத்தரவிடப்படுகிறது" எனத் தீர்ப்பளித்திருக்கிறார்.
from Vikatan Latest news https://ift.tt/c3qbCxk
0 Comments