கம்யூனிஸ்ட்களின் கறுப்பு கொடி போராட்டம்... ரத்தான ஆளுநரின் சித்தன்னவாசல் விசிட் - நடந்தது என்ன?

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில், பிற்பகல் 2.45 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சித்தன்னவாசலுக்கு வருகை தந்து அங்கு உள்ள குகைவரை ஓவியங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட இருப்பதாக சொல்லப்பட்டது. அதற்காக, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில், சித்தன்னவாசலுக்கு வருகை தரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கறுப்பு கொடி மற்றும் பலூன் காட்டப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டதோடு, 'அந்த போராட்டத்தில் ஜனநாயக அமைப்புகள் பங்கேற்க வேண்டும்' என்று அக்கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

சித்தன்னவாசல்

அதன்படி, நேற்று ஆளுநர் வருகை தர இருப்பதை முன்னிட்டு காரைக்குடியிலிருந்து சித்தன்னவாசலுக்கு செல்லும் சாலையில் உள்ள கட்டியாவயல் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அக்கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் கறுப்பு கொடி மற்றும் கருப்பு பலூன் காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன், ம.தி.மு.க, வி.சி.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு, 'தமிழ்நாடு ஆளுநர் அரசு எந்தவிதமான சட்ட மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பினாலும் அதனை கிடப்பில் போட்டு வருகிறார். இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

அதோடு, சனாதான கருத்துக்களை ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க வழி நின்று ஆளுநர் என்பதை மறந்து அரசாங்கத்துக்கு எதிராகவும், மக்களுக்கு விரோதமாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மாநில அரசின் உரிமைகளை மறுக்கும்விதமாக கருத்துக்களை வெளியிடுகிறார். இதன்மூலம், மாநிலத்தில் மத மோதல்களை உருவாக்கப் பார்க்கிறார்' என்று குற்றம் சாட்டியும், 'புதுக்கோட்டைக்கு ஆளுநர் வருகை தரக்கூடாது' என்று கூறி முழக்கங்கள் எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்ட இடத்தை தாண்டி அவர்கள் வரக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் தடுப்புகள் அமைத்திருந்த நிலையில், அந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் தாண்டி வர முயற்சி செய்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் ஏற்பட்டது

சித்தன்னவாசல்

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸார் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், சித்தன்னவாசலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருவதாக இருந்த நிலையில் நிர்வாக காரணங்களால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்தார். அதேநேரம், ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்த கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்ட 78 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY



from Vikatan Latest news https://ift.tt/ViL7q6K

Post a Comment

0 Comments