இதமாய் சுடும் இறந்த காலம்
என்றோ அவள் பரிசளித்தது
அந்தக் கறுப்புநிறத் தேநீர்க்கோப்பை
கொதிக்கும் நினைவுகளுடன்
கொஞ்சம் தேநீரையும்
கோப்பையில் நிரப்ப
பால்யம் முதல்
கடைசி செல்பி வரை
பொறிக்கப்பட்டிருந்த அரிய படங்கள்
தேநீர்க்கோப்பையெங்கும்
விரவுகின்றன
மெல்ல மெல்லப் பருகுகிறேன்
மிடறு மிடறாய் இறங்குகிறது
இதமாய் சுடும் இறந்த காலம்.
- பாண்டிச்செல்வி விஸ்வநாதன்
செல்லம் கொஞ்ச ஆளில்லா காளை
தாத்தா ஒரு காளை வளர்த்தார்
யாருக்கும் அடங்காது
எங்கெங்கோ திரிவான்
கழனி தேடி
ஊரார் வீட்டுப் பானைகளுக்குள்
தலையை நுழைப்பது உள்ளிட்ட
சேட்டைகளுக்காக
பல புகார்களும் வீட்டுக்கு வரும்
உழவுப் பணிகளுக்காக
அவனைப் பிடித்து
வண்டியில் பூட்டும் ஒவ்வொரு நாளும்
ஜல்லிக்கட்டு அணைவதுபோலத்தான்
நடந்தேறியிருக்கும்
எத்தனை நடந்தாலும்
தாத்தா அவனை விட்டுக்கொடுத்ததேயில்லை
தாத்தா போனபின்பு
அவனை விற்கவிருக்கும் முடிவை
எப்படித் தெரிந்துகொண்டானோ தெரியாது
அன்றிலிருந்து
எல்லோரிடமும் அகப்படுகிறான்
நல்ல பிள்ளையாக
நடந்துகொள்கிறான்
செல்லம் கொஞ்சத்தான்
ஆளில்லை இப்போது!
- பாலா
தெய்வங்கள் குடியேறும் நினைவுகள்!
பூசணிப்பிள்ளையார் அமராவிடினும்
கையகல வாசற்படியின்
சின்ன சிக்குக்கோலத்திலோ
ரங்கோலி விளக்கிலோ
தெய்வங்கள் குடியேறுகின்றன
‘பயபுள்ள ஒட்டடை அடிச்சிருக்கா’ என்று எட்டிப்பார்த்தபடி
பொங்கல் பானையைப் பரணிலிருந்து
இறக்க நினைவூட்டுகின்றன
டன்சோவில் மஞ்சள் இஞ்சி கரும்பு
வாங்குகிறவர்
முகவாய் கிள்ளி
ஜொமேட்டோ ஒத்துக்கலடா
சக்கரைப்பொங்கல் மட்டுமாவது செஞ்சிடேன்னு
கெ(கொ)ஞ்சுகின்றன
`வருஷம்பூரா மணல்மேட்டையே பார்த்துக்கிட்டிருந்தா நெல்லுக்கு
பிஸ்லெரி டேங்கிலிருந்தா
நீர்பாய்ச்சி வளர்க்க’ என்று
ஆத்திரப்படுபவனிடம்
ஆற்றுத்திருவிழா நினைவுகளைத் தூண்டுகின்றன.
- உமா மோகன்
சிக்கிக்கொள்ளும் தூக்கம்
புளூடூத் போல
கைப்பேசி அருகில் இருந்தால்தான்
தூக்கமே கனெக்ட் ஆகிறது
மூளைக்கு
நள்ளிரவில் தொடுதிரை
ஒளியால் அறைந்து எச்சரித்தும்
கேட்காமல்
விரல்கள் அதன்பாட்டில்
இரை கொத்துகின்றன
பத்து பர்சன்ட் வரும்வரை
சார்ஜ் ஊட்டுவதில்லை
கையிலிருந்து தவறி
லாகவமாய்ப் பிடிக்கும் கூத்தும்
அடிக்கடி அரங்கேறும்
லாக் பேட்டனின்
அவிழா சிக்கலில்
அடிக்கடி சிக்கிக்கொள்கின்றன
சிறு வண்டுகள்.
- ரவிக்குமார் ஷண்முகம்
from Vikatan Latest news https://ift.tt/Ji62YFw
0 Comments