தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024. இதை, மகளிர் தினம் கொண்டாடும்வேளையில், தமிழ்நாடு அரசு பெண்களுக்கு தந்திருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பரிசு, பாதுகாப்பு, அங்கீகாரம், அதிகாரம், ஆதரவு என்றே குறிப்பிடலாம். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்தக் கொள்கையில், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் பெண்கள் முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள 3 கோடிக்கும் அதிகமான பெண்களின் நலன் மற்றும் உயர்வுக்காக 2021-ம் ஆண்டு வரைவுக் கொள்கை வெளியிடப்பட்டு, கருத்துகள் கேட்கப்பட்டு, தற்போது முழுமையான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இக்கொள்கை, 10 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த புதிய கொள்கை உருவாக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும். 5 ஆண்டு களுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும்.
கல்வி இடைநிற்றலைக் குறைப்பது, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, பணியிடப் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு, டிஜிட்டல் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பை அதிகப்படுத்துவது, தொழிற்துறை மற்றும் திறன் பயிற்சிகள், வங்கிக் கடனுதவிக்கு வழிகாட்டுவது, அரசியல் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது என அடுத்த 10 ஆண்டுகளுக்கு பெண்களின் வளர்ச்சிப் பாதையைத் தீர்மானிக்கும் திட்டங்கள் இதில் வகுக்கப்பட்டுள்ளன.
மகளிர் கொள்கையில், வேலைவாய்ப்பைத் தாண்டி, தொழில் வாய்ப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. தொழில்முனைவில் தற்போது குறைந்து காணப்படும் பெண்களின் பங்களிப்பு, உயர... வளர... இது அடித்தளம் போடக்கூடும்.
சரி, ‘என்னதான் திட்டங்கள் போட்டாலும், அவையெல்லாம் முழுமை அடைந்து பெண் களுக்குக் கைகொடுத்தால்தானே பலனிருக்கும். ஆனால், திட்டங்கள் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காய் என்பதாகத்தானே இருக்கின்றன’ என்கிற ஆதங்கம் இங்கே அனைவருக்குமே உண்டு.
அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதையும் மனதில் கொண்டு... உயர்மட்டக் குழு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு, இடைக்கால திருத்தங்கள், பரிந்துரைகள், கண்காணிப்புக் குழுக்கள் போன்றவையும் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், ‘ஓ... அப்படியா?’ என்று இதை நினைத்துப் பெருமை கொள்ள முடியவில்லை. உயர்மட்டக்குழு, கண்காணிப்புக்குழு என அனைத்து இடங்களிலும் அரசுத் துறை அலுவலர்கள்தான் இடம்பெறுவார்கள் என்பது, அதன் ஜனநாயகத்தை, வெளிப்படைத் தன்மையை சுருக்குகிறது. இதில் பங்களிக்க, ஆலோசனைகள் கூற, கண்காணிக்க, திருத்தங்கள் சொல்ல, முறையிட என பொதுத்தளத்தில் இருப்பவர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். எந்தவித சார்பும் அற்ற, துறை சார்ந்த நிபுணர்கள், செயற்பாட்டாளர்கள் என ஒட்டுமொத்தமாக பெண்களே இதில் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான், இந்த முன்னெடுப்புக்கு அர்த்தம் கிடைக்கும். இல்லையேல், இது அரசின் மற்றுமோர் அறிவிப்பு என்பதே நிதர்சனமாகிவிடும்.
பெண்களின் முன்னேற்றம்... மாநிலத்தை முன்னேற்றட்டும்.
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்
from Vikatan Latest news https://ift.tt/YMrmQy3
0 Comments