Ashwin: `பேமிலி எமெர்ஜென்சி' - மூன்றாவது போட்டியிலிருந்து திடீரென வெளியேறும் அஷ்வின்!

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், குடும்பத்தில் நிலவும் மருத்துவ அவசரநிலை காரணமாக அஷ்வின் இந்தப் போட்டியிலிருந்து விலகுவதாக பி.சி.சி.ஐ அறிவித்திருக்கிறது.

ராஜ்கோட்டில் இன்று நடந்த இரண்டாவது நாள் ஆட்டத்தில் அஷ்வின் இங்கிலாந்து ஓப்பனர் ஷக் க்ராலியின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையைப் படைத்திருந்தார். இன்றைய நாள் அஷ்வினுக்குச் சிறப்பானதாக அமைந்திருந்தது. இந்நிலையில்தான் சில நிமிடங்களுக்கு முன்பு பிசிசிஐ யிடமிருந்து ஓர் அதிர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Ashwin

பி.சி.சி.ஐ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "குடும்பத்தில் நிலவும் மருத்துவ அவசரநிலை காரணமாக அஷ்வின் நடந்துகொண்டிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுகிறார். இப்படியொரு சவாலான சூழலில் பி.சி.சி.ஐ-யும் இந்திய அணியும் அவருக்கு முழுமையாக துணை நிற்கும். இந்தச் சமயத்தில் பி.சி.சி.ஐ சார்பில் இதயபூர்வமான ஆதரவை அஷ்வினுக்கும் அவரது குடும்பத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரர்கள் மற்றும் அவர்களுக்குச் நெருக்கமான குடும்பத்தினரின் உடல்நிலைதான் ரொம்பவே முக்கியமானது. இந்தச் சவாலான சூழலில் அஷ்வின் மற்றும் அவர் குடும்பத்தாரின் தனிமனித சுதந்திரத்தை மதிக்க வேண்டுகிறோம். பி.சி.சி.ஐ மற்றும் இந்திய அணியினர் அஷ்வினுடன் தொடர்பிலேயே இருப்போம். அவருக்கு தேவைப்படும் அவசர உதவிகளையும் செய்து கொடுப்போம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எம்.பி மற்றும் பி.சி.சி.ஐ-யில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ராஜிவ் சுக்லா, "அஷ்வினின் தாயார் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.

BCCI

அஷ்வினுக்குப் பதில் எஞ்சியிருக்கும் ஆட்டத்தில் இந்திய அணி வேறு வீரரைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கு எதிரணி கேப்டனின் ஒப்புதலும் தேவை எனக் கூறப்படுகிறது.



from Vikatan Latest news https://ift.tt/MaI1f8l

Post a Comment

0 Comments