திருப்பூர் மாவட்டம், சேவூர் கைகாட்டிபுதூர் பகுதியில் தேவேந்திரன் நகர் மற்றும் வி.ஐ.பி நகர் என இரு குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இதில், தேவேந்திரன் நகர்ப் பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்த இரு குடியிருப்புப் பகுதிகளிலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேவேந்திரன் நகர்ப் பகுதியில் பட்டியல் சமூகத்தினரும், வி.ஐ.பி நகர்ப் பகுதியில் மற்றொரு சமூகத்தினரும் வாழ்ந்து வரக்கூடிய நிலையில், இந்த இரு குடியிருப்புப் பகுதிகளுக்கு நடுவே சுவர் எழுப்பப்பட்டிருந்தது.
இந்தச் சுவரால் தேவேந்திரன் நகர்ப் பகுதி மக்கள், சில கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சுவரை அகற்றக் கோரி தேவேந்திரன் நகர்ப் பகுதி மக்கள் முதலமைச்சர் தனிப் பிரிவு தொடங்கி, மாவட்ட ஆட்சியர் வரைக்கும் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தி.மு.க எம்.பி கனிமொழி தலைமையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கைகாட்டிபுதூர் பகுதி பெண்கள், சுவர் தொடர்பாக கனிமொழி எம்.பி-யிடம் மனு அளித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை செல்போன் மூலம் தொடர்புகொண்ட கனிமொழி, தேவேந்திரன் நகர்ப் பகுதியில் சுவர் எழுப்பப்பட்டிருப்பது குறித்து விளக்கம் கேட்டார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக தேவேந்திரன் நகர்-வி.ஐ.பி நகரைப் பிரிக்கும் வகையில் எழுப்பப்பட்ட சுவர், ஜே.சி.பி வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. அதையடுத்து மீண்டும் கனிமொழியைச் சந்தித்த தேவேந்திரன் நகர் பெண்கள், மறுபுறம் கட்டப்பட்டுள்ள சுவர் இடிக்கப்படாதது குறித்து அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றனர். அப்போது, `திங்கள்கிழமைக்குள் மீதமுள்ள சுவர்களும் இடிக்கப்படாவிட்டால் எனது கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்' என கனிமொழி தெரிவித்ததாக, தேவேந்திரன் நகர் பெண்கள் தெரிவித்தனர்.
from Vikatan Latest news https://ift.tt/Fa5QysK
0 Comments