“புலிகள் ஆதரவைக் கைவிடுங்கள்...!” - எச்சரித்த என்.ஐ.ஏ... சிக்கலில் நா.த.க!

தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியான தி.மு.க அமலாக்கத்துறையால் நெருக்கடிகளைச் சந்தித்துவந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நாம் தமிழர் கட்சியும் என்.ஐ.ஏ வளையத்துக்குள் சிக்கியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. சோதனை, சம்மன், விசாரணை என நா.த.க-வை அதிரடித்த என்.ஐ.ஏ ரெய்டின் பின்னணி விவகாரங்கள் இங்கே!

2022, மே மாதம் சேலம் ஓமலூர் அருகே வாகன சோதனையின்போது ஆயுதங்களுடன் இரண்டு பேர் கைதானார்கள். போலீஸ் விசாரணையில், அவர்கள் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டில் அது போன்ற ஓர் அமைப்பைக் கட்டமைக்க முயன்றதாகவும், யூடியூப் பார்த்து ஆயுதம் தயாரிக்க முயன்றதாகவும் தெரியவந்தது. இதற்கிடையே அந்த வழக்கு என்.ஐ.ஏ-க்கு மாற்றப்பட்டு மேலும் ஒருவர் கைதானார். அதன் தொடர்ச்சியாக, கைதான மூவருக்கும் நாம் தமிழர் கட்சியினருடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்தது என்.ஐ.ஏ. அதையொட்டி, கடந்த பிப்ரவரி 2-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட ஏழு நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ ரெய்டு நடத்தியது. அவர்களின் வீடுகளிலிருந்து ஒரு லேப்டாப், ஏழு செல்போன்கள், எட்டு சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

சீமான்

கூடவே, சோதனைக்கு உள்ளானவர்கள் மட்டுமன்றி, வேறு சில நா.த.க நிர்வாகிகளுக்கும் சம்மன் வழங்கி விசாரணைக்கு ஆஜராகச் சொன்னது என்.ஐ.ஏ தரப்பு. அதன்படி, சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக், இசைமதிவாணன், விஷ்ணு பிரசாத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. அவர்களிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கப்பட்டதோடு, அவர்களது செல்போன் களையும் என்.ஐ.ஏ சோதனை செய்திருப்பதாகத் தெரிகிறது.

இது குறித்து விசாரணைக்கு உள்ளானவர்கள் தரப்பில் பேசினோம். ``என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆஜரான நா.த.க நிர்வாகிகளிடம் எட்டு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடைபெற்றது. அதில் சேலம் வழக்கில் கைதான மூன்று இளைஞர்கள் குறித்து வெறும் அரை மணி நேரம் மட்டுமே விசாரித்திருக்கிறார்கள். மற்ற கேள்விகள் அனைத்துமே புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரோடு நா.த.க நிர்வாகிகளுக்குத் தொடர்பு இருப்பதான சந்தேகத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டிருக்கின்றன. தடைசெய்யப்பட்ட அமைப்பின் பிரமுகர்களும், சேலத்தில் கைதான இளைஞர்களும் தொடர்பிலிருந்ததால், `சம்பந்தப்பட்ட பிரமுகர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு...’ என்பதுபோலான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். முக்கியமாக நா.த.க-வுக்கு நிதி எங்கிருந்து வருகிறது... வங்கிக் கணக்கு விவரம் உட்பட நூற்றுக்கணக்கான தனிப்பட்ட கேள்விகளையும் கேட்டு பதிலைப் பதிவுசெய்திருக்கிறது என்.ஐ.ஏ. விசாரணை முடியும் நேரத்தில், ‘நீங்கள், `விடுதலைப் புலிகள் ஜிந்தாபாத்’ எனப் பேசும்போது எங்கள் கைகள் கட்டப்பட்டிருக்காது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், எல்.டி.டி.ஈ ஆதரவைக் கைவிடுங்கள்’ என்று மிரட்டல் தொனியில் எச்சரித்திருக்கிறார்கள்” என்றனர்.

துரைமுருகன், இசைமதிவாணன்

நாம் தமிழர் நிர்வாகிகளோ, இது பா.ஜ.க-வின் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என சமூக வலைதளங்களில் பேசிவருகிறார்கள். இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க-வின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் விளக்கம் கேட்டபோது, “தேசத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல்கள் நடைபெற்றிருக்கும் என்ற அச்சத்தில் இது போன்ற சோதனை நடைபெறுவது எப்படிப் பழிவாங்கல் நடவடிக்கையாகும்... பா.ஜ.க-வுக்கும் நாம் தமிழருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது பழிவாங்குவதற்கு... நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களுக்கு ஆதரவாகப் பேசுவதும், நிதி திரட்டுவதும் தேசத்துரோகம். போதிய முகாந்திரம் இல்லாமல் என்.ஐ.ஏ போன்ற அமைப்பினர் இது போன்ற சோதனைகளில் ஈடுபட மாட்டார்கள். பல மேடைகளில், ‘பிரபாகரனோடு சாப்பிட்டேன், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றேன்’ என்றெல்லாம் அந்தக் கட்சித் தலைவர் பேசியிருக்கிறாரே... இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை மீண்டும் சிலர் மலரவைப்பதாகக் குற்றச்சாட்டுகள் வரும்போது, யாராக இருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஒருவேளை தக்க சாட்சியங்கள் கிடைத்தால் நா.த.க-வை தடைசெய்யக் கோருவதிலும் எந்தத் தவறும் இல்லையே...” என்றார் அவர்.

விஷ்ணு பிரசாத், இடும்பாவனம் கார்த்திக்

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், ``இந்த ரெய்டுகளின் மூலம் நாம் தமிழர் கட்சியைத் தடைசெய்யவோ, நிர்வாகிகளைக் கைதுசெய்யவோ வாய்ப்புகள் இருப்பதாக நான் கருதவில்லை. மாறாக, தேர்தல் நேரத்தில் அவர்களது அரசியல் செயல்பாடுகளை முடக்கலாம். புலிகள் அமைப்பின் அனுதாபிகளாகப் பலர் தமிழ்நாட்டில் இருப்பார்கள். அவர்களில் சிலர் நா.த.க-விலும் இருக்கலாம். அதிலொன்றும் தவறில்லை என பல வழக்குகளில் நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது” என்றார்.

தராசு ஷ்யாம்

விசாரணைக்கு ஆஜரான இடும்பாவனம் கார்த்திக் பேசும்போது, “கைதான சேலம் ஓமலூர் இளைஞர்கள் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. ஜெர்மனியைச் சேர்ந்த சீலன் முருகன் என்பவரின் எண்ணிலிருந்து வந்த போன் கால் ஒன்றை அடிப்படையாகவைத்தே இந்த ரெய்டு, விசாரணைகள் நடந்திருக்கின்றன. ‘பிரபாகரன் மற்றும் அவரின் குடும்பத்தினர் உயிருடன் இருக்கிறார்கள்’ என்று பேசிவருபவர்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு தற்செயலான செல்போன் அழைப்புக்காக எங்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தியிருக்கிறது என்.ஐ.ஏ. விசாரணையின்போது கட்சி நிதி குறித்து என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. இது போன்ற நடவடிக்கைகளால் புலிகளை ஆதரிக்கும் எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது” என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/yZTm612

Post a Comment

0 Comments