குமரி: `மீனவர்கள் ஓட்டுப்போடும் மெஷினா?' - திமுக-விடம் ராஜ்ய சபா சீட் கேட்கும் மீனவர் கூட்டமைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கடற்கரை மீனவர் கிராமங்கள் உள்ளன. பெரும்பான்மையாக ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களான மீனவர்களின் வாக்கு சுமார் 2 லட்சம் உள்ளது. இவர்களின் வாக்கு பெரும்பாலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு செல்வது வழக்கம். சிறுபான்மையினர் வாக்குகள் ஒட்டுமொத்தமாக கிடைப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் பெரும்பாலும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்று வருகின்றனர். ஆனால், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் மீனவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதில்லை என்ற ஆதங்கம் கடற்கரை மக்களுக்கு இருந்துவருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியிலாவது மீனவர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போதும் மீனவருக்கு சீட் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த சமயத்தில், மேல்சபையில் எம்.பி-யாக மீனவர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தி.மு.க தரப்பில் வாக்குறுதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு தி.மு.க அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்கிறார்கள் மீனவர் கூட்டமைப்பினர். எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மேல்சபை எம்.பி-சீட் வழங்குவதாக தி.மு.க ஒப்பந்தம் செய்துகொண்டால் மட்டுமே, அந்த கூட்டணிக்கு வாக்களிப்போம். இல்லை என்றால் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படும் பசிலியான் நசரேத்துக்கு வாக்களிப்போம் என மீனவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறும்பனை பெர்லின்

இது சம்பந்தமாக நாகர்கோவிலில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்ச்சி குழு அலுவலகத்தில் அனைத்து மீனவர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர்  குறும்பனை பெர்லினிடம் பேசினோம், "மீனவர்கள் வாக்குகள் அதிகப்படியாக தி.மு.க கூட்டணிக்கு செல்வதால் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற்று வருகிறார். பா.ஜ.க வெற்றி தடுக்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலிலோ, நாடாளுமன்ற தேர்தலிலோ மீனவர் ஒருவரை வேட்பாளராக அறிவியுங்கள் என நாங்கள் இத்தனை காலமாக தி.மு.க கூட்டணிக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். அப்படி இல்லை என்றால் ராஜ்ய சபா எம்.பி சீட்டாவது மீனவருக்கு கொடுங்கள் என தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாங்கள் இதே கோரிக்கையை முன்வைத்ததால் அடுத்தமுறை காலியாகும் ராஜ்ய சபா எம்.பி சீட்டை மீனவர் ஒருவருக்கு வழங்குவோம் என தி.மு.க கூறியிருந்தது. அதன் பிறகு மூன்று முறை ராஜ்ய சபா எம்.பி-க்கு தேர்தல் வந்தது. அதற்கு ஆட்களை தேர்வுசெய்து அனுப்பியும்விட்டார்கள். ஆனால் அதில் மீனவருக்கு வாய்ப்பு வழங்காமல் ஏமாற்றிவிட்டனர்.

தேர்தல் சம்பந்தமாக மீனவர் கூட்டமைப்பினரின் ஆலோசனை கூட்டம்

எனவே, மீனவர் ஒருவருக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் வழங்குவதாக தி.மு.க எங்களுடன் தேர்தல் ஒப்பந்தம் போடவேண்டும். அப்படி தேர்தல் ஒப்பந்தம் போட்டால்தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற வைப்போம். இல்லை என்றால் அ.தி.மு.க வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்படும் மீனவரான பசிலியான் நசரேத்துக்கு மீனவர்கள் வாக்களிக்க வேலைசெய்வோம். அதன் மூலம் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி தோல்வியடையும். சிறுபான்மை மீனவர்கள் பா.ஜ.க-வுக்கு ஓட்டுப்போடமாட்டார்கள், நமக்குத்தானே ஓட்டுப்போடுவார்கள் என தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியினர் நினைக்கிறார்கள். இத்தனைகாலமாக மீனவனுக்கு வாய்ப்புக்கொடுக்க வேண்டும் என நினைக்காமல் இருக்கிறார்கள். மீனவர்களை ஓட்டுப்போடும் மிஷின் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இனி மீனவரை பகடைக்காயாக மாற்ற அனுமதிக்கமாட்டோம். அதற்காக அனைத்து மீனவர் கிராமங்களின் பங்குபேரவை, மீனவர் அமைப்பினர் ஆகியோர் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு அலுவலகத்தில் கூட்டம் போட்டுள்ளோம். தி.மு.க எங்களுடன் ஒப்பந்தம் போடாமல் இருந்தால் அ.தி.மு.க முன்னிலைப்படுத்தும் பசிலியான் நசரேத்துக்கு வாக்களிப்போம்" என்றார்.

அமைச்சர் மனோ தங்கராஜ்

மீனவர் கூட்டமைப்பினரின் அதிரடி அரசியல் கோரிக்கை பற்றி தி.மு.க தரப்பில் சிலரிடம் பேசினோம், "தி.மு.க மீனவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனக்கூறுவது தவறானது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பதவி மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம். ஆனாலும், மீனவர்களின் கோரிக்கை நியாயமானதுதான்" என்றனர். இது பற்றி கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான மனோ தங்கராஜிடம் பேசினோம், "மீனவர்களின் இந்த கோரிக்கை பற்றி தலைமைதான் முடிவு செய்யும். அனைத்து சமூகத்தையும் ஒருங்கிணைத்து முன்னேறுவதுதான் தி.மு.க-வின் கொள்கை. மீனவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது எங்களுக்கு உடன்பாடான கொள்கைதான். தலைமை அதை உரிய நேரத்தில் பரிசீலிக்கும்" என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/D2lU9iY

Post a Comment

0 Comments