யாகசாலையாக மாறிய பெண்களின் சபரிமலை - லட்சகணக்கானவர்கள் கலந்துகொண்ட ஆற்றுகால் பொங்காலை விழா!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பொங்காலை வழிபாடு ஆண்டுதோறும் மாசி மாதம் பெளர்ணமி தினத்தில் நடைபெறுகிறது. பொங்காலை தினத்தில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்வதால் பெண்களின் சபரிமலை என இத்திருத்தலம் அழைக்கப்படுகிறது. மதுரையில் கோவலனுக்கு அநீதி இழைத்துக் கொலைசெய்த பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு சிலம்பெடுத்துச் சென்றார் கண்ணகி தேவி. பாண்டிய மன்னனை வதம் செய்துவிட்டு சினம் தணியாமல் தெற்கு நோக்கிச் சென்று திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் ஆற்றின் கரையில் இளைப்பாறியிருக்கிறார் கண்ணகி தேவி. அப்போது அந்த ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முதியவர் கண்ணகி தெய்வத்தை ஆற்றுபடுத்திக் குடியிருத்திய திருத்தலம் ஆற்றுகால். ஆற்றுகாலில் பகவதி அம்மனாக மக்களுக்கு அருள்பலித்து வருகிறார் கண்ணகி தேவி.

பண்டார அடுப்பில் தீ மூட்டல்

இந்த ஆண்டு ஆற்றுகால் பொங்காலை விழா கடந்த 17-ம் தேதி காப்புகட்டி குடியிருத்தலுடன் தொடங்கியது. தினமும் கண்ணகி தேவியின் வரலாற்றுக் காவியம், 'தோற்றம் பாட்டு' என்ற தலைப்பில் பாடப்பட்டு வந்தன. கண்ணகி தேவியிக்கும் கோவலனுக்கு திருமணம் நடப்பது, கோவலன் சிலம்பு விற்கச் செல்லுதல், கள்வன் எனப் பட்டம் சூட்டி, கோவலனைக் கொலை செய்தல். கண்ணகி சிலம்பெடுத்து பாண்டிய மன்னனிடம் நீதி கேட்கச் செல்வது ஆகியவை கடந்த 8 நாள்களாகத் தோற்றம் பாட்டில் பாடப்பட்டன. ஒன்பதாம் நாள் விழாவில் பாண்டிய மன்னனை கண்ணகி தேவி உக்கிரத்துடன் வதம் செய்யும் நிகழ்வு தோற்றம்பாட்டாகப் பாடப்பட்டது.

ஆற்றுகால் பொங்காலை

உக்கிர ரூபிணியாக இருக்கும் அம்மனை சாந்தப்படுத்தும் விதமாகப் பெண்கள் பொங்காலையிட்டு வழிபடுவதாக ஐதிகம். இன்று லட்சகணக்கான பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்குப் பொங்காலையிட்டு வழிபட்டனர். பொங்காலை விழாவை முன்னிட்டுத் திருவனந்தபுரம் நகரத்துக்குள் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டன. பிரதான  சாலைகளில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

ஆற்றுகால் பொங்காலை

பொங்காலை விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, பள்ளியுணர்த்தல், 5 மணி நிர்மால்ய தரிசனம், 5.30 அபிஷேகம், 6.05 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு பந்தீரடி பூஜை, 10 மணிக்கு சுத்தபுண்யாகம், 10.30 மணிக்கு அடுப்பு வெட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது. இதை பக்தர்களுக்கு அறிவிக்கும் வகையில் செண்டை மேளம் முழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆற்றுகால் கோயிலில் இருந்து சுமார் 10 கி. மீ சுற்றளவில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

மதியம் 2.30 மணிக்கு உச்ச பூஜையும், பொங்காலை நிவேத்யமும், தீபாராதனையும் நடைபெற்றது. கோயில்வளாகத்திலும், சாலைகளிலும், தெருக்களிலும் பொங்கலிட்ட பெண்களின் பொங்காலைகளில் புண்ணிய தீர்த்தம் தெளிக்க நூறுக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் நியமிக்கப்படிருந்தனர். அவர்கள் தீர்த்தம் தெளித்து பொங்காலையை அம்மனுக்கு நைவேத்யம் செய்தனர். நேற்று இரவு 7.30 மணிக்கு குத்தியோட்டம், சூரன்குத்து ஆகியவை நடந்தன. இரவு 11 மணிக்கு அம்மன் எழுந்தருளல் நடைபெற்றது.

சிறுமிகளின் தாலப்பொலி

10-ம் நாள் விழாவான இன்று காலை 8 மணிக்கு அம்மன் கோயிலில் எழுந்தருளல். 8.15 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு உஷபூஜை, 9.45 மணிக்கு உஷ ஸ்ரீபலி, 10.15 மணிக்கு பந்தீரடி பூஜை, 12 மணிக்கு உச்ச பூஜை, தீபாராதனை, 12.30 மணிக்கு உச்சஸ்ரீபலி, மதியம் 1 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.45 மணிக்கு தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு பகவதி சேவை, 8 மணிக்கு அத்தாள பூஜை, தீபாராதனை, 8.15 மணிக்கு அத்தாள ஸ்ரீபலி, 9.45 மணிக்கு காப்பு அவிழ்த்தல், 10.15 மணிக்கு நடை அடைத்தல் மற்றும் பள்ளியுறக்கம் ஆகியவை நடைபெற இருக்கின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு குருதி தர்ப்பணம் நடைபெறும். அதைத்தொடர்ந்து இந்த ஆண்டுப் பொங்காலை  மஹோத்ஸவம் நிறைவு பெறும்.

ஆற்றுகால் கோயிலில் தரிசனத்துக்கு குவிந்த பெண்கள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறிஸ்தவ தேவாலயஙளில் காலை வேளைகளில் பிரார்த்தனை நடப்பது வழக்கம். பிரசித்திப் பெற்ற ஆற்றுகால் பொங்காலை வழிபாட்டை முன்னிட்டு காலை நடக்க இருந்த பிரார்த்தனையை மதியத்துக்கு மேல் மாற்றி வைத்திருந்தது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சர்ச் நிர்வாகங்கள். மேலும், பாளையம் சி.எஸ்.ஐ சபை உள்ளிட்டவற்றை பக்தர்கள் இளைப்பாறுவதற்காகத் திறந்து வைத்தனர். மேலும், பெண்கள் பொங்கலிடுவதற்குத் தேவையான தண்ணீர் உள்ளிட்டவைகளை சர்ச் வளாகத்திலிருந்து எடுத்துக்கொள்ளவும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தன.



from Vikatan Latest news https://ift.tt/mXSNKds

Post a Comment

0 Comments