தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியின் பிரபலமான முகங்களில் ஒருவராக இருப்பவர் பிரியங்கா காந்தி. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் அவர், முதன் முறையாக தேர்தலில் போட்டியிடவிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிடவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது, ரேபரேலி தொகுதியின் எம்.பி-யாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இருக்கிறார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும் இதே தொகுதியிலிருந்து எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் பாட்டியையும், தாயையும் மக்களவைக்குத் தேர்வுசெய்து அனுப்பிய ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டியிடவிருப்பது இந்திய அரசியலில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலில், நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கிறது என்கிறது சில கருத்துக்கணிப்பு முடிவுகள். ஏனெனில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து ‘இந்தியா’ கூட்டணி உருவானபோது, அது மதச்சார்பற்ற ஆட்சியை விரும்புவோம் என்றபோது எதிர்க்கட்சியினர் மத்தியில் பெரும் நம்பிக்கையை அளித்தது. ஆனால், இப்போது பல பின்னடைவுகளை ‘இந்தியா’ கூட்டணி எதிர்கொண்டுவருகிறது.
இந்தச் சூழலில், மூன்றாவது முறையாக வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்தச் சூழலில், இந்திய அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சி பெரும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.
அந்த வகையில்தான், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மணிப்பூர் முதல் மகாராஷ்டிரா வரை மேற்கொண்டுவருகிறார். அவரது முதல் நடைப்பயணத்துக்கு கிடைத்த வெளிச்சமும், அது ஏற்படுத்திய தாக்கமும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், தற்போது ராகுல் மேற்கொண்டுவரும் யாத்திரை, இதுவரையில் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு சில கவன ஈர்ப்புகளை ஏற்படுத்துவது நிஜம் என்றாலும் பெரிய தாக்கத்தை இன்னும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக மேற்கு வங்கம், பீகார்(நிதிஷ் இந்தியா கூட்டணியில் இருந்த போது) என இந்தியா கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் எதிர்ப்பையே எதிர்க்கொண்டார்.
இந்தச் சூழலில்தான், பிரியங்கா காந்தியை தேர்தல் களத்தில் இறக்கிவிட காங்கிரஸ் முடிவுசெய்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநில அரசியல் களம் பிரியங்கா காந்திக்கு புதிதல்ல. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் போட்டியிட்ட தேர்தல்களில், அவர்களுக்காக பிரியங்கா காந்தி பிரசாரம் செய்திருக்கிறார். 2004-ம் ஆண்டு ரேபரேலியில் சோனியா காந்தி போட்டியிட்டபோது, அவரது தேர்தல் மேலாளராக இருந்து பிரியங்கா காந்தி பணியாற்றினார்.
2007-ல் நடைபெற்ற உ.பி சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் ராகுல் காந்தி ஆலோசனையின்படி நடைபெற்றபோது, ரேபரேலி, அமேதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றினார் பிரியங்கா காந்தி. கடந்த சட்டமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்துக்கு பொறுப்பாளராக இருந்து, தீவிரமாக அவர் பணியாற்றினார்.
தற்போது அவரே களத்தில் குதிக்கிறார். சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால், ரேபரேலியில் பிரியங்கா காந்தி வெற்றிபெறுவதற்கு உறுதியாகிவிட்டது என்கிறார்கள் உ.பி-யைச் சேர்ந்த அரசியல் நோக்கர்கள். மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுப்பவர்களில் ஒருவராக பிரியங்காவும் இருக்கிறார். இனி, அவருக்கு இன்னும் கூடுதலாக முக்கியத்துவம் கிடைக்கும். குறிப்பாக, வயது மூப்பு காரணமாக, சோனியா காந்தி பயணங்களையும் பணிகளையும் குறைத்துக்கொண்ட நிலையில், அந்த இடத்துக்கு பிரியங்கா காந்தி வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
தவிர மோடி உள்ளிட்ட பாஜகவினர், ராகுலுக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் எடுபடுவதால், காங்கிரஸ் கட்சியும் பின்னடைவை சந்திக்கிறது. இதனால், பிரியங்கா காந்தியை முன்னிறுத்துவதன் முலம் மக்களிடம் நம்பிக்கையை பெறும் திட்டத்தில் காங்கிரஸ் இருக்கிறதாம்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from Vikatan Latest news https://ift.tt/mEL9h3y
0 Comments