Doctor Vikatan: மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது சிறுநீர் மஞ்சளாக வெளியேறுவது ஏன்... அதே போல பீட்ரூட் போன்ற கலர்ஃபுல் உணவுகளைச் சாப்பிட்டால் சிறுநீர் சிவப்பாக வெளியேற வாய்ப்பு உண்டா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சிறுநீரக அறுவைசிக்சை மருத்துவர் யுவராஜ்
பொதுவாக, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறாது. தண்ணீரும் நம் உடலிலிருந்து வெளியேற வேண்டிய கழிவுகளுமே சிறுநீராக வெளியேறுகின்றன. வெளியேற வேண்டிய சாரமானது அதிகமாக இருக்கும்பட்சத்தில் சிறுநீரின் நிறம் மாறும். அதுவே வெளியேறும் சாரம் குறைவாக இருந்து, நீர்த்தன்மை அதிகமிருந்தால் சிறுநீர் வெளிர் நிறமாகவே வெளியேறும்.
நிறைய தண்ணீர் குடிப்பவர்களுக்கு அது வியர்வை மூலம் வெளியேறும் பட்சத்தில் சிறுநீர் அதிகம் வெளியேறாமல் இருக்கலாம். உதாரணத்துக்கு, நீங்கள் நான்கு லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, உடலை வருத்திக் கடுமையான வேலைகளைச் செய்கிறீர்கள்.... அதனால் அதிகம் வியர்க்கிறது என்ற பட்சத்தில், உங்களுக்கு சிறுநீர் வெளியேற்றம் குறைவாக இருக்கலாம். அதனால் சிறுநீரின் நிறம் லேசாக கலங்கலாக இருக்கலாம்.
மருந்து, மாத்திரைகள் எடுக்கும்போது, அந்த மருந்துகளின் சாரம் இறங்குவதால், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறும். அது இயல்பானதுதான். மாத்திரை, மருந்துகளை நிறுத்தியபிறகு சிறுநீரின் நிறம் இயல்பாக மாறிவிடும். சில மாத்திரைகளை எடுக்கும்போது சிறுநீர் மஞ்சளாகவோ, சிவப்பாகவோ வெளியேறலாம்.
அளவுக்கதிமான, கடினமான உடற்பயிற்சிகளைச் செய்யும்போது, வழக்கத்தைவிட அதிக உடலுழைப்பு கொடுத்து எடை தூக்குவது போன்ற பயிற்சிகள் செய்யும்போது (muscle breakdown ) சிறுநீர் அடர் மஞ்சளாகவோ, பிரவுன் நிறத்திலோ வெளியேறலாம். மற்றபடி உணவுக்கும் சிறுநீரின் நிறத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பீட்ரூட் உட்பட கலர்ஃபுல் உணவுகள் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news https://ift.tt/GgRZ1QX
0 Comments